Wednesday, July 20, 2022

மத்திய பா.ஜ., அரசை எதிர்க்க பழனிசாமி துணிந்து விட்டாரோ?

 அ.தி.மு.க., 'மாஜி'க்கள் வீடுகளில் சோதனை, பினாமிகளுக்கு வலை என, மத்திய வருமான வரித் துறை, அமலாக்கத் துறையினர் நெருக்கடி கொடுப்பதால், பா.ஜ.,வை எதிர்க்க பழனிசாமி துணிந்து விட்டாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.


மத்திய பா.ஜ., அரசு, எதிர்க்க  பழனிசாமி துணிவு


இதுகுறித்து, அ,தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., ஆட்சியை, தி.மு.க., - அ.ம.மு.க., எதிர்ப்புக்கு இடையிலும் கவிழ விடாமல் பாதுகாத்து கொடுத்தது, பா.ஜ., டில்லி மேலிடம். அதற்கு கைமாறாக, கடந்த லோக்சபா தேர்தலில் ஐந்து தொகுதிகளும், சட்டசபை தேர்தலில் 20 தொகுதிகளும் பா.ஜ.,வுக்கு அ.தி.மு.க., ஒதுக்கி கொடுத்தது. இரண்டு தேர்தல்களிலும், பா.ஜ.,வுக்கு சாதகமான தொகுதிகளை ஒதுக்கி தராமல், போட்டியிட்ட தொகுதிகளில் அக்கட்சிக்கு வெற்றி தேடி தராததற்கு, வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த இரண்டு முன்னாள் அமைச்சர்கள் முக்கிய காரணமாக இருந்தனர்.

சட்டசபை தேர்தல் முடிந்ததும், 'அ.தி.மு.க., தோல்விக்கு சிறுபான்மையினர் ஓட்டுகள் கிடைக்கவில்லை; பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்தது தான் காரணம்' என, முன்னாள் அமைச்சர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர். பா.ஜ., எதிர்ப்பாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் மாறியதால், அவர்கள் மீது, டில்லி மேலிடம் அதிருப்தி அடைந்தது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர்கள் சிலர், பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு 'பினாமி' பெயர்களில் சொத்து சேர்த்த விபரங்களை, மத்திய உளவுத் துறை, பா.ஜ., மேலிடத்திடம் கொடுத்துள்ளது. அதன் அடிப்படையில் அதிரடி சோதனையை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.அ.தி.மு.க., பொதுக்குழுவில், கொரோனா ஒழிப்பில் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றவில்லை. மாறாக, ஈ.வெ.ரா.,வுக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தினர்.


இதுவும் பா.ஜ., மேலிடத்திற்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் பழனிசாமிக்கு நெருக்கமான கான்ட்ராக்டர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித் துறை, அமலாக்கத் துறை சோதனை நடத்தி, பல ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பை கண்டுபிடித்தனர். மேலும், 'மாஜி' அமைச்சர்கள் வேலுமணி, உதயகுமார் ஆகியோரின் பினாமிகளின் வீடுகளில், வருமான வரித் துறை 'ரெய்டு' நடத்தி, பழனிசாமி தரப்பினருக்கு நெருக்கடி தரப்பட்டுள்ளது.

தற்போது, 'குட்கா' வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா மீது விசாரணை நடத்த, தமிழக அரசிடம் சி.பி.ஐ., அனுமதி கேட்டிருப்பதும், பழனிசாமி தரப்பினருக்கு அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், பழனிசாமி இடைக்கால பொதுச்செயலராக தேர்வு செய்யப்பட்ட பின், முதல் முறையாக மத்திய அரசை எதிர்க்கும் வகையில் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், 'ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் தினசரி வாழ்க்கையில் பெரும் சுமையை ஏற்படுத்தும், உணவுப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி., வரி விதிப்பை, மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும்' என கூறியுள்ளார். இதுவரையில் தி.மு.க., அரசை மட்டுமே குற்றம் சாட்டி வந்த பழனிசாமி, மத்திய அரசையும் குற்றம்சாட்டும் வகையில் அறிக்கை வெளியிட்டிருப்பதன் வாயிலாக, அவர் பா.ஜ.,வை எதிர்க்க துணிந்து விட்டாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறின.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...