டெல்டா மாவட்டங்களில், அரசு கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகளை, மழையில் நனையாமல் பாதுகாக்க வசதியில்லை. அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம் என அறிவித்த பின், வழக்கமாக இயங்கிய பல பஸ்களை நிறுத்தி விட்டனர்.
இதனால், போதிய பஸ் வசதி இல்லாமல், பள்ளி செல்லும் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மின் வாரியம் நஷ்டத்தில் இயங்குவதால், மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று, ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தும், அவர்களுக்கு நிரந்தர பணி வழங்க நிதியில்லை. தொகுப்பூதியத்தில், ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசு முடிவெடுத்து உள்ளது. காவிரி ஆற்றில் அதிகமாக வரும் தண்ணீரை சேமிக்க அணை இல்லை; பல டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இப்படி தமிழகத்தில் செய்ய வேண்டிய அவசர, அவசிய பணிகள் ஏராளமாக உள்ளன.
'நிதி இல்லை... நிதி இல்லை...' எனக்கூறி, முந்தைய அரசு அறிவித்த பல திட்டங்களை நிறுத்தி பஞ்சப்பாட்டு பாடுவதுடன், சொத்து வரியை உயர்த்தியதுடன், மின் கட்டணத்தையும் உயர்த்த முடிவு செய்துள்ளது 'திராவிட மாடல்' அரசு.
மற்ற பல திட்டங்களுக்கு நிதியில்லை என புலம்பும் தி.மு.க., அரசு, நினைவிடத்தில் பேனா வடிவமைப்புக்காக, 81 கோடி ரூபாய் செலவிடுவது எந்த விதத்தில் நியாயமாகும். தன் தந்தை கருணாநிதியின் புகழை பரப்ப விரும்பும் தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலின், இந்த பேனா வடிவமைப்பை தன் கட்சி பணத்தில் செய்யலாமே... மக்கள் வரிப் பணத்தை ஏன் வீணடிக்க வேண்டும்! 'ஊரான் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே' என்ற பழமொழி உண்டு. அந்த பழமொழி ஸ்டாலினுக்குத் தான் பொருந்தும்.
No comments:
Post a Comment