'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை அமலாக்கப்படும்' என, சட்டசபை தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்போதோ, 'அனைத்து வீடுகளிலும், 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தப்பட்ட பிறகே, மாதந்தோறும் மின் கணக்கெடுப்பு முறை செயல்பாட்டுக்கு வரும்' என்கிறார் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.
தேர்தல் நேரத்தில் வாக்குறுதி வழங்கும் போது, ஆட்சிக்கு வந்தவுடன் என்று தான் கூறினரே தவிர, ஐந்தாண்டு காலத்திற்குள் என்று, எங்கும், எப்போதும் கூறவேயில்லை. தேர்தல் நேரத்தில், கழகம் வழங்கிய வாக்குறுதிகளையும், தற்போது, அமைச்சர் அடிக்கும் குட்டிக் கரணத்தையும் பார்க்கும் போது, ஒரு கதை நம் நினைவுக்கு வருகிறது...நாட்டை ஆளும் மன்னரிடம் சென்று, ஒரு சோம்பேறி, 'இந்த ஊர் எல்லையில் இருக்கும் மலையை, நான் என் முதுகில் சுமப்பேன்' என்றான். அந்த மன்னரும், 'ஆஹா... என்னே உன் வலிமை. வா... வந்து சுமந்து காட்டு' என்றார். அதற்கு அந்த சோம்பேறி, 'ஒரு மாதம் அவகாசம் வேண்டும்; அதுவரை அரண்மனையில் என்னை விருந்தினராக தங்க வைத்து உபசரிக்க வேண்டும்' என்று நிபந்தனை விதித்தான்.
மன்னரும் அதற்கு சம்மதித்து தங்க வைத்து உபசரித்தார். குறிப்பிட்ட நாள் வந்ததும், மன்னரும், மக்களும் அந்த சோம்பேறியுடன் மலையடிவாரத்துக்கு சென்று, 'எங்கே மலையை உன் முதுகில் சுமந்து காட்டு...' என்றனர். சோம்பேறியோ, மலைக்கு அருகில் சென்று குனிந்து நின்று கொண்டு, 'ம்... யாராவது மலையை துாக்கி என் முதுகில் வையுங்கள்; சுமந்து காட்டுகிறேன்' என்றான். உடனே, மன்னரும், மக்களும் 'திருதிரு'வென விழித்துள்ளனர்; செய்வதறியாது திகைத்துள்ளனர்.
கழகத்தினரின் மாதந்தோறும் மின் கட்டண வாக்குறுதியும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் அடாவடி பேச்சும், இந்த கதையைத் தான் நமக்கு நினைவுபடுத்துகின்றன. 'உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும்' என்பது சொலவடை. அதாவது, கழகத்திற்கு ஓட்டளித்து மக்கள் உப்பை தின்றனர் அல்லவா... பலனை அனுபவிக்க வேண்டாமா? கட்டண உயர்வு என்ற தண்ணீரை குடித்தே ஆக வேண்டும்.
மாதந்தோறும் மின் பயன்பாடு கணக்கெடுப்பு மற்றும் மின் கட்டணம் செலுத்துவது என்பது, தி.மு.க., ஆட்சியில் அமர்ந்திருக்கும் வரை சாத்தியமாகாது என்பது மட்டும் நிதர்சனம்.
இனிமேலாவது சூதானமாக நடந்து கொள்ளுங்கள் மக்களே... தேர்தல் வாக்குறுதிகளை நம்பி மோசம் போகாதீர்கள்!
No comments:
Post a Comment