அப்பா , அம்மா , அண்ணன் , அக்கா , தம்பி , தங்கை , மாமன் , மச்சான் , பெரியப்பா , சித்தப்பா , நண்பர்கள் என யாரையும் , யார் சிபாரிசையும் எதிர்காலத்திற்கு நம்பி விடாதீர்கள்.
உங்கள் எதிர்காலம் உங்கள் கையில் மட்டுமே ,
யாரையும் நம்பி ஒப்படைத்து வீணாக்கி விடாதீர்கள்.
அனைத்தும் என் சுய அனுபவம் தான்.
அன்பு என்பது வேறு .
அது யாரும் உங்களுக்கு குறை வைக்க மாட்டார்கள்.
நீங்களும் யாரிடமும் அன்பாக இருப்பதில் குறை வைக்காதீர்கள்.
ஒரு வேளை உங்களுக்கு செல்வாக்கு இருக்கிறது , யாருக்கேணும் பண உதவியோ , அல்லது வேலை வாய்ப்புகளை பெற்று தர முடியும் என்றாலோ தாராளமாக செய்யுங்கள்..
ஆனால் , யாரும் , திரும்பி செய்வார்கள் என்று எதிர்பார்த்து ஏமாந்து போகாதீர்கள்.
நியாயமாக எனக்கு தாய் , தந்தை வழியில் கிடைக்க வேண்டியவைகள் கிடைக்கவில்லை .
அனைத்தும் தானம் அளித்துவிட்ட வள்ளல்கள்.
அதற்காக சண்டையிட்டு நிம்மதியை தொலைக்க நானும் விரும்பவில்லை.
வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக ஏமாந்த பணத்தோடும் , வியாபாரத்திலும் இழந்த லட்சங்களோடு அதையும் சேர்த்து விட்டேன்.
யாராவது எனது இழப்புகளை பற்றி பேசினால் கையெடுத்து கும்பிட்டு நானே மறந்துட்டேன்.
நியாபகப்படுத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்க வேண்டாம் என்று சொல்லி விடுவேன்.
இழந்தவைகளை நினைத்தால் இப்பொது இருக்கும் மகிழ்ச்சியையும் கெடுத்து விடும் .
இழப்புகளை விட அதிகம் நம்மால் பெற்று விடவும் முடியும் .
தொழிலில் பார்ட்னர்கள் எப்போது மாறுவர்கள் எதிரியாக மாறுவார்கள் என்றும் தெரியாது.
அதனால் நெருங்கியவர்கள் பார்ட்னராக இருப்பதை விட தொழில் நிமித்தமான நண்பர்களே சிறந்தது. உனக்கும் எனக்கும் பிசினஸ் தவிர வேறு ஒன்றும் இல்லை.
என்னை நீ ஏமாற்றாதே ! உன்னை நான் ஏமாற்ற மாட்டேன்.
இன்னொரு தொழிலில் நீ யாரை வேண்டுமானலும் சேர்த்துக் கொள் ,
அது போல் நான் வேறு தொழிலில் பார்ட்னரை மாற்றினாலும் நீ கண்டுக்கொள்ளாதே. என்றளவில் இருப்பவர்களுடன் கூட்டு சேருங்கள்.
பிரான்ஸிலிருக்கும் மாமா வேலை வாங்கி தருவார் , தலைமை செயலகத்தில் இருக்கும் சித்தப்பா அரசு வேலை வாங்கி தருவார் , மந்திரியின் நெருங்கிய நண்பரான மச்சான் மூலம் வேலைவாய்ப்பை பெறலாம் என்று காத்திருக்காதீர்கள்.
ஒரு வேளை வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியே.
எனக்கு இதை விட பெரிய பின்புலம் இருந்தும் பலர் வாக்களித்தும் எதுவும் நிகழவில்லை.
அடுத்த ஆட்சியில் நிச்சயம் செய்து தருகிறேன் என்று சொன்னார்கள்
அவர்களே அடுத்த ஆட்சியில் இருப்பார்களா என்று தெரியவில்லை.
கருணாநிதி வீட்டில் கடைசி ஊழியர் கூட பெரும் கோடீஸ்வரனாய் இருந்துள்ளார் ,
ஆனால் , கருணாநிதியின் மூத்த மகன் முத்து நீண்ட காலம் வறுமையில் வாடியவர். இன்று கூட அவர்களின் சொத்து திமுக கவுன்சிலரை விட குறைவு தான்.இதையும் நினைவில் வையுங்கள்.
தொழிலிலும் நண்பர்கள் மூலம் வாய்ப்பை பெறலாம் என்று நினைக்காமல் ,
நீங்களே களமிறங்குங்கள். அப்போது தான் வெற்றி நிலைக்கும்.
நண்பர்களுக்காக காதலையும் காதலுக்காக நண்பர்களையும் விட்டுக் கொடுக்காதீர்கள்.
இரண்டுமே நிலைக்குமா என்று தெரியாது.
ஒரு பெண்ணின் காதலை உடனே நம்பி விடாதீர்கள்.
அந்த காதலியின் பேச்சைக் கேட்டு உங்களிடம் காதலின்றி பழகும் தோழிகளை புறக்கணிக்காதீர்கள்.
தாய் , தந்தையர் ஆனாலும் அவர்கள் சொல்லும் அனைத்தும் கேட்காதீர்கள்.
அவர்களின் பார்வை வேறு , உங்களின் பார்வை வேறு. அவர்கள் உங்களின் பாதுகாப்பு முக்கியம் என்று நினைத்து வாழ்வாதாரத்தை சில நேரம் அழித்து விடுவார்கள்.
நான் பலருக்கு வேலை வாங்கி கொடுத்துள்ளேன்.
எனக்கு சரிவர வேலை கிடைத்ததில்லை.
நான் பெரிய பிரச்சினைகளை எல்லாம் மற்றவர்களுக்கு சரிசெய்து கொடுத்துள்ளேன் .
எனக்கு பிரச்சினை என்றால் யாரையும் கூப்பிட்டது இல்லை.
தனியாக சமாளித்தால் தான் வாழ முடியும்.
ஒரே விஷயம் தான் நீங்கள் யாரையும் நம்பாதீர்கள்.
ஆனால், உங்கள் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையை கெடுக்காதீர்கள்.
கடமையை செய் பலனை எதிர்பாராதே.
No comments:
Post a Comment