'சென்னை கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்தை சீரமைக்க, 1 கோடி ரூபாய் நிதி திரட்டி, தமிழக அரசிடம் வழங்குவோம்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் காந்திய வழியில் உழைத்த கர்ம வீரரை, வருங்கால குழந்தைகள், மாணவர்கள் நினைவில் வைத்துக் கொள்வது அவசியம். அதற்காக அன்னாரது நினைவிடத்தை சீரமைக்க, மக்கள் தாராளமாக நிதிஉதவி செய்ய முன்வருவர் என்பதில், எள்ளளவும் சந்தேகம் இல்லை. அவரின் நினைவிடத்தை சுற்றுலா தலமாகவும் ஆக்கலாம். கிராமங்கள்தோறும் ஆரம்ப பள்ளிகள் துவக்கியதுடன், ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தையும் ஆரம்பித்து வைத்தவர் காமராஜர். அவர் உயிரோடு இருந்த வரை, காந்திய வழியில் எளிமையாக வாழ்ந்து, எல்லாருக்கும் முன்
மாதிரியாக திகழ்ந்தார்.அவரது பிறந்த நாளன்று, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி வைத்து பரிசளிக்க, பா.ஜ., தயாராக இருப்பதாக அறிவித்துள்ளதும் பாராட்டத்தக்கதே. காமராஜர் நினைவிடத்தை, மெரினா கடற்கரையில் உள்ள தலைவர்களின் நினைவிடத்தை போல சீர்படுத்தி, ஒளி, ஒலி காட்சிகள் அமைத்து, தோட்டஅமைப்புகளையும், வண்ண செடிகளின் அமைப்புகளையும் மேம்படுத்தி, மக்களை கவரும் வண்ணமாக அமைக்க வேண்டும் என்ற, அண்ணாமலையின் அறிவிப்பில் யாருக்கும்மாற்றுக் கருத்தில்லை.இந்த விஷயத்தில், தமிழக அரசே அண்ணாமலையின் வேண்டுகோளை நிறைவேற்றி பெருமை தேடிக் கொள்ள வேண்டும். இல்லையெனில், பா.ஜ.,விடம் அந்தப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். எது எப்படியாயினும், இந்த விஷயத்தில் தமிழக அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டியது அவசியம்.
அதேநேரத்தில், 'காமராஜர் ஆட்சி... காமராஜர் ஆட்சி...' என, பல ஆண்டுகளாக புலம்பி வரும் காங்கிரஸ் கட்சியினர், அண்ணாமலை முன்வைத்தது போன்ற கோரிக்கையை, இதுவரை முன்வைக்காதது வியப்பாக உள்ளது. அவர்களுக்கு கோஷ்டி சண்டை போடவே நேரம் போதவில்லை; பின் எப்படி அண்ணாமலை போன்று சிந்திப்பர்!
No comments:
Post a Comment