காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை சர்ச்சையாகி உள்ளது.
கோவில் இயங்கும் நேரம் குறித்த விபரங்கள் இடம் பெற்றுள்ள அந்த அறிவிப்பு பலகையில், 'மா.வெள்ளைச்சாமி, செயல் அலுவலர்; ஆர்.சம்பத், மதச்சார்பு தர்மகர்த்தா; ஸ்ரீ வாரி கே.ஸ்ரீதர், மதச்சார்பற்ற தர்மகர்த்தா' எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது தான் சர்ச்சைக்கு காரணம்.இது குறித்து, கோவில் நிர்வாக தரப்பினர் கூறியதாவது:ஸ்ரீபெரும்புதுார் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலை, ஹிந்து அறநிலையத் துறை தான் நிர்வகித்து வருகிறது.முன்பு, தென் கலை ஐயங்கார்களுக்கு சொந்தமான கோவிலாக இருந்ததால், கோவில் நடைமுறை மற்றும் மரபுகளின் அடிப்படையில், அறங்காவலர்களில் ஒருவர் தென் கலை ஐயங்கார் வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.
மற்றொரு அறங்காவலர், எந்த ஜாதியை சேர்ந்தவராகவும் இருக்கலாம். ஆனால், ஹிந்து மதத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
இதில், தென் கலை ஐயங்கார் வகுப்பை சேர்ந்த அறங்காவலரை, எப்படி குறிப்பிடுவது என, பல ஆண்டுகளுக்கு முன், கோவில் நிர்வாக தரப்பினர் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர்.அதன்படி, தென் கலை வகுப்பைச் சேர்ந்த ஐயங்கார், 'மதச்சார்பு அறங்காவலர்' என அறிவிக்கப்பட்டார். மற்றொருவர், 'மதச்சார்பற்ற அறங்காவலர்' என குறிப்பிடப்பட்டார். இந்த நடைமுறை தான் காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
தற்போது மதச்சார்பு அறங்காவலராக உள்ள சம்பத், 2020ம் ஆண்டு ஆக., 28ல் நியமிக்கப்பட்டார். அவருக்கு முன், அந்த பொறுப்பில் மணவாள பாஷ்யம் என்பவர் இருந்துள்ளார்.மதச்சார்பு மற்றும் மதச்சார்பற்ற அறங்காவலர்களை, 'பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள்' என, அறநிலையத் துறை ஆவணங்களில் குறிப்பிட்டு, நியமன அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
காலம் காலமாக நடந்து வருவதால், இந்த நடைமுறையை யாரும் மாற்ற முயற்சிக்கவில்லை.இவ்வாறு கோவில் நிர்வாக தரப்பினர் கூறினர்.
பெயர் பிரச்னைக்கு தீர்வு என்ன?
ஆலயங்கள் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் கூறியதாவது:ஸ்ரீபெரும்புதுார் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில், தென் கலை சம்பிரதாய கோவில்.
கோவில் நடைமுறை மற்றும் மரபுகளின் அடிப்படையில், கோவில் நிர்வாக பொறுப்புக்கு நியமிக்கப்படும் அறங்காவலர்களில் ஒருவர், தென் கலை ஐயங்காராகவும், மற்றொருவர் ஹிந்து மதத்தை சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும்.
அதேநேரம், தென் கலை ஐயங்கார் வகுப்பைச் சேர்ந்தவரை, 'மதச்சார்பு அறங்காவலர்' எனவும், மற்றொருவரை, மதச்சார்பற்ற அறங்காவலர் எனவும் சொல்வது நெருடலாக உள்ளது. இது, தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.இப்பிரச்னைக்கு தீர்வாக, 'தென்கலை சம்பிரதாய அறங்காவலர்' என்றும், ஹிந்து மத சார்பிலான அறங்காவலர் அல்லது பொது தர்மகர்த்தா என்றும் அழைக்க, அறநிலையத் துறை ஆவன செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment