கோவையில் பிரதான பகுதிகளில், இரவு நேரங்களில் நடந்து செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகளிடம், திருநங்கைகள் போர்வையில் அத்துமீறும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கோவையில் கடந்த சில ஆண்டுகளாக திருநங்கைகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இவர்களில் சிலர் தொழிற்சாலைகளிலும், சமையல் கலைஞர்கள் உல்ளிட்ட பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். சிலர் ரோடு, பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் பகுதிகளில், பொதுமக்களிடம் பணம் வசூலிக்கின்றனர்.
குறிப்பிட்ட சில பகுதிகளில் கூட்டம், கூட்டமாக நிற்கும் திருநங்கைகள், பொதுமக்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்கின்றனர். இச்செயல் எல்லை மீறி, கல்லுாரி மாணவர்கள், பெண்களிடம் பணம், மொபைல்போன் பறிக்கும் அளவுக்கு சென்றுள்ளது.
சில நாட்களுக்கு முன், ஒரு பெண் பேசிய 'வீடியோ' சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், 'தனது உறவினர் ஒருவர் கொடிசியா அருகே, குடும்பத்துடன் ரோட்டின் ஓரத்தில் காரை நிறுத்தியிருந்த நேரத்தில், அங்கு வந்த திருநங்கை ஆசிர்வதிப்பதாக சொல்லி, பர்ஸில் இருந்த 8 ஆயிரம் ரூபாயை பறித்துக் கொண்டு தப்பினார். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் திருநங்கைகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்திருந்தார்.
இதேபோல கிருஷ்ணசாமி நகரில், 76 வயது முதியவரின் பர்ஸில் இருந்து திருநங்கைகள், 3 ஆயிரம் ரூபாயை பறித்த சம்பவம் நடந்தது. துடியலுார் பகுதியில் கடந்த வாரம் புரோட்டா மாஸ்டர் ஒருவரை கொலை செய்த வழக்கில், 5 திருநங்கைகள் கைது செய்யப்பட்டனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'கவுண்டம்பாளையம், துடியலுார் பகுதிகளில் இரவு நேரங்களில் ரோட்டில் செல்ல பயமாக உள்ளது. வாகனத்தில் சென்றால், நிறுத்தி பணம் கேட்கின்றனர். தரமறுத்தால், அருவருப்பான செயல்களில் ஈடுபடுகின்றனர்' என்றனர்.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, "திருநங்கை சங்கத்தினரை அழைத்து, ஆலோசனை நடத்தப்பட்டது. அத்துமீறும் செயல்களில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்துள்ளோம். குறிப்பிட்ட இடங்களில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது," என்றார்.
எந்தெந்த பகுதிகள்
மக்கள் நடமாட்டம் உள்ள பஸ் ஸ்டாண்ட் மற்றும் துடியலுார், கவுண்டம்பாளையம், நீலம்பூர், சிந்தாமணிபுதுார் சந்திப்பு, கொடிசியா, சிட்ரா, சின்னியம்பாளையம் உள்ளிட்ட இடங்களில், திருநங்கைகள் சிலரின் அத்துமீறல் அதிகம் உள்ளது.
அத்துமீறலில் ஈடுபடுவோர் நல்ல கட்டுமஸ்தான உடலமைப்புடன் உள்ளனர். இவர்கள் உண்மையிலேயே திருநங்கைகளா அல்லது அந்த போர்வையில் உலாவும் ஆண்களா என்பதை போலீசார் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்தாண்டு இதுபோன்று சுற்றித்திரிந்த, 7 ஆண்களை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
எங்களில் பலர் கவுரவமான பணிகளுக்கு சென்று வருகின்றனர். ஒரு சிலர் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடுவதை மறுப்பதற்கில்லை. இந்த செயல்களில் ஈடுபடும் நபர்களை அடையாளம் காட்ட போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு தருகிறோம். திருநங்கைகள் போர்வையில் சுற்றும் ஆண்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment