பள்ளி மாணவி மரணம் தொடர்பாக கலவரம் நடந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பதற்றத்தை தணிக்க, முதல்வர் அவசர நடவடிக்கை எடுத்துள்ளார். அம்மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி., நேற்று அதிரடியாக மாற்றப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கணியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில், பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி, 13ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். நீதி கேட்டு, 17ல் பள்ளி முன் கூடிய, 5,000க்கும் மேற்பட்டோர், திடீரென கலவரத்தில் ஈடுபட்டனர்.
காரணம்
பள்ளி பஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு தீ வைத்தனர். பள்ளி அலுவலகம் உள்ளே புகுந்து, தளவாட சாமான்கள், மாணவர்களின் சான்றிதழ்கள் ஆகியவற்றை எரித்தனர். கம்ப்யூட்டர், 'ஏசி' மற்றும் மேஜை, நாற்காலி உள்ளிட்டவற்றை அள்ளிச் சென்றனர்.கலவரத்தில், 50க்கும் மேற்பட்ட போலீசாரும் காயமடைந்தனர். அதிரடிப் படையினர் விரைந்து வந்து, தடியடி நடத்தி கலவரக்காரர்களை விரட்டி அடித்தனர். இந்த கலவரத்துக்கு காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மெத்தனப்போக்கே காரணம் என, பல தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்தது.
மாணவி இறந்த நாள் முதல், பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். காவல் துறையினர் விரைவாக நடவடிக்கை எடுத்து, பெற்றோர் மற்றும் உறவினர்களை சமாதானப்படுத்தி இருந்தால், பிரச்னையை முடித்திருக்க முடியும்.இதில் காலதாமதம் செய்ததும், மிகப்பெரிய அளவில் போராட்டம் நடக்க உள்ளதை அறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததும், கலவரத்துக்கு முக்கிய காரணமாக அமைந்தது.இச்சம்பவம் தொடர்பாக, நேற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மருத்துவர்கள் ஆலோசனைப்படி, முதல்வர் வீட்டில் இருப்பதால், அங்கிருந்தபடி 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக கூட்டத்தில் பேசினார்.தலைமைச் செயலகத்தில் நடந்த கூட்டத்தில், அமைச்சர்கள் வேலு, மகேஷ், உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, டி.ஜி.பி., சைலேந்திரபாபு, முதல்வரின் செயலர் உதயசந்திரன், பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலர் காகர்லா உஷா பங்கேற்றனர்.
கூடுதல் பொறுப்பு
கூட்டத்தில், பள்ளி மாணவி மரணம் தொடர்பாக நடந்த வன்முறை சம்பவம் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இப்பிரச்னையை சரியாக கையாளாத, கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், எஸ்.பி., செல்வகுமார் ஆகியோர் மாற்றப்பட்டு உள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய கலெக்டராக, வேளாண் துறை கூடுதல் இயக்குனராக இருந்த ஸ்ரவண்குமார் ஜடாவத் நியமிக்கப்பட்டு உள்ளார். கள்ளக்குறிச்சி கலெக்டராக இருந்த ஸ்ரீதர், சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் மேலாண் இயக்குனர் பதவி, கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, தலைமைச் செயலர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.அதேபோல், கள்ளக்குறிச்சி எஸ்.பி., செல்வகுமார் மாற்றப்பட்டு, சென்னை திருவல்லிக்கேணி துணை கமிஷனராக இருந்த பகலவன், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி பிறப்பித்துள்ளார்.
புதிய எஸ்.பி., பகலவன், ஏற்கனவே கள்ளக்குறிச்சியில் எஸ்.பி.,யாக பணியாற்றியவர். மாற்றப்பட்ட எஸ்.பி., செல்வகுமா ருக்கு புதிய பணியிடம் வழங்கப்படவில்லை.
சென்னை கலெக்டர் அலுவலகத்தில், வருவாய்த் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில், வருவாய்த் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், நேற்று நடந்தது. பின், அவர் அளித்த பேட்டி: கடந்த ஏப்., 1 முதல் தற்போது வரை, 1 லட்சத்து 81 ஆயிரம் மாணவர்களுக்கு, பல்வேறு சான்றிதழ்களை வழங்கி உள்ளோம். சென்னையில் மட்டும், ஏப்ரல் முதல் 40 ஆயிரம் பேருக்கு பட்டா மாறுதலுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து சான்றிதழ்களையும், 15 நாட்களுக்கு வழங்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளோம். கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில், சான்றிதழ்கள் எரிக்கப்பட்ட விவகாரத்தில், பள்ளி கல்வித் துறையுடன் இணைந்து, முதல்வர் அறிவுறுத்தல்படி விரைவில் சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கள்ளக்குறிச்சி வன்முறைக்கு காரணமானவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க, டி.ஐ.ஜி., பிரவீன் குமார் அபிநபு தலைமையில், சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். சேலம் சரக டி.ஐ.ஜி., பிரவீன்குமார் அபிநபு தலைமையிலான குழுவில், ஆவடி ஐந்தாவது பட்டாலியன் கமாண்டன்ட் ராதாகிருஷ்ணன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு எஸ்.பி., கிங்ஸ்லின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.மேலும், விழுப்புரம் தலைமையிட கூடுதல் எஸ்.பி., திருமால், திருப்பத்துார் தலைமையிட கூடுதல் எஸ்.பி., முத்துமாணிக்கம், நாமக்கல் கூடுதல் எஸ்.பி., சந்திரமவுலி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.இந்த குழுவினர், வன்முறைக்கு காரணமான 'வாட்ஸ் ஆப்' குழுக்களை உருவாக்கியவர்கள்; பொய் செய்திகளை பரப்பியவர்கள்; வன்முறை நிகழ்த்தியவர்கள் ஆகியோரை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க உள்ளனர்.பின்னணியில் உள்ள சதி குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்படும். போலி செய்திகளை பரப்பிய 'யு டியூபர்'கள், ஊடக விசாரணை நடத்தியவர்கள் ஆகியோரைக் கண்டறிந்து, அந்த யு டியூப் சேனல்களை முடக்க, இக்குழு நடவடிக்கை எடுக்கும் என, டி.ஜி.பி., உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மாணவிக்கு ஆதரவாக போராட்டம் மெரினாவில் போலீசார் குவிப்பு
ஜல்லிக்கட்டு போராட்டம் போல, கள்ளக்குறிச்சி மாணவிக்கு ஆதரவாக, சென்னை மெரினாவில் பலர் ஒன்று கூடி போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் பரவியதை அடுத்து, கடற்கரையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கணியாமூரில், தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தால், அங்கு கலவரம் ஏற்பட்டது. இதில், பள்ளி வளாகம் மற்றும் வாகனங்கள் தீயில் கருகின.
'ஜஸ்டிஸ் பார் ஸ்ரீமதி'
வன்முறையில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட ஐந்து பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில், 'ஜஸ்டிஸ் பார் ஸ்ரீமதி' என்ற பெயரில், மாணவியின் புகைப்படத்துடன் கூடிய தகவல்கள், சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. பள்ளியில் ஏற்பட்ட கலவரத்திற்கும், சமூக வலைதளம் வாயிலாக ஒன்று கூடியது தான் காரணமாக கூறப்பட்டது.
மேலும், மாநிலம் முழுதும், ஆங்காங்கே மாணவிக்கு ஆதரவாக போராட்டம் நடத்தப்பட உள்ளதாக, உளவுத்துறை எச்சரித்து உள்ளது.ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல, சென்னை மெரினாவிலும் பலர் ஒன்று கூடி, போராட்டத்தில் ஈடுபடப் போவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து. இதைத் தொடர்ந்து, நேற்று காலை முதல் மெரினா கடற்கரையில், 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கண்காணிப்பு
நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை, கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போலீசார், கடற்கரைக்கு வருவோரை விசாரித்து அனுப்பி வைக்கின்றனர். அதேபோல, மூன்று முதல் நான்கு நபர்களுக்கு மேல் ஒன்று கூடினால், அவர்களை வெளியேற்றுகின்றனர்.
இது குறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:மெரினாவில் ஒன்று கூடி கலவரத்தை ஏற்படுத்த சிலர் திட்டமிட்டுள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கண்காணிப்பு பணி 24 மணி நேரமும் தீவிரப்
படுத்தப்படும்.அதேநேரம், குடும்பமாக வருவோருக்கு எவ்வித சிக்கலுமின்றி, கண்காணிப்பு பணியில் ஈடுபட போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment