இலங்கையின் புதிய அதிபராக டல்லாஸ் அழகப்பெரும, 63, மற்றும் பிரதமராக சஜித் பிரேமதாசா, 55, ஆகியோரை தேர்வு செய்ய, ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நம் அண்டை நாடான இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, சிங்கப்பூர் தப்பி சென்ற பின், காபந்து அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். நாட்டின் புதிய அதிபரை தேர்வு செய்யும் தேர்தல், அந்நாட்டு பார்லி.,யில் இன்று நடக்கிறது. உறுப்பினர்கள் ஓட்டு போட்டு புதிய அதிபரை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
இலங்கை அரசியல் வரலாற்றில் முதல்முறையாக, பார்லி.,யில் ஓட்டு போட்டு அதிபரை தேர்ந்தெடுக்கும் நடைமுறை இன்று நடக்க உள்ளது. இதற்கு முன்வரை, பிரதமரை மக்கள் ஓட்டுபோட்டு தேர்ந்தெடுத்த பின், அக்கட்சியை சேர்ந்த ஒருவரை, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பார்லி.,யில் ஒருமனதாக தேர்ந்தெடுத்து வந்தனர்.
புதிய அதிபருக்கான தேர்தலில், தற்போதைய காபந்து அதிபர் ரணில் விக்ரமசிங்கே, 73, இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் அதிருப்தி குழுவின் முக்கிய தலைவரான டல்லாஸ் அழகப்பெரும மற்றும் இடதுசாரி கட்சியான, ஜனதா விமுக்தி பெரமுன கட்சியை சேர்ந்த அனுரா குமார திசநாயகே, 53, ஆகியோரது பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
'4,000 புத்தகங்களை இழந்தேன்!'
இலங்கையின் அதிபர் மாளிகை உள்ளிட்ட முக்கிய கட்டடங்களுக்குள் போராட்டக்காரர்கள் புகுந்தபோது, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு சொந்தமான வீடு தீயிட்டு கொளுத்தப்பட்டது.இதில் வீட்டின் பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்தன.
இதுகுறித்து ரணில் விக்ரமசிங்கே கூறுகையில், ''பல ஆண்டுகளாக நான் சேகரித்து வந்த, 4,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் தீயில் கருகின.இதில் சில புத்தகங்கள் நுாறாண்டுகளை கடந்தது. மேலும், 125 ஆண்டுகள் பழமையான, 'பியானோ' இசைக்கருவி வைத்திருந்தேன். அதுவும் தீயில் கருகியது,'' என்றார்.
இலங்கைக்கான இந்திய துாதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:இலங்கையில் உள்ள இந்திய துாதரகத்தின்,'விசா' பிரிவின் இயக்குனரும், இந்தியருமான விவேக் வர்மா, கொழும்புவில் நேற்று முன்தினம் இரவு தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தார். இலங்கையில் வசிக்கும் இந்தியர்கள் இங்குள்ள நிலைமை குறித்து தெரிந்து வைத்துக்கொண்டு அதற்கு ஏற்ப வெளியே செல்வதை திட்டமிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் சிக்கல் குறித்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்தது.நம் அண்டை நாடான இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. அன்னியச் செலாவணி கையிருப்பு இல்லாததால், கடும் நிதிச் சிக்கல் ஏற்பட்டு, அங்கு அத்தியாவசியப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்தது.இதையடுத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பிரதமர் மகிந்த ராஜபக்சே, அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக நேரிட்டது. தற்காலிக அதிபராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே, அவசரநிலையை பிரகடப்படுத்தியுள்ளார்.'இலங்கை பிரச்னையில் மத்திய அரசு தலையிட வேண்டும்' என, தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. இதையடுத்து, அங்குள்ள நிலவரம் குறித்து விளக்குவதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியது. புதுடில்லியில் நேற்று நடந்த இக்கூட்டத்தில், இலங்கை நிலவரம் குறித்து, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கினார். பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி உள்ளிட்ட அமைச்சர்கள், அங்குள்ள நிலவரம் குறித்தும், மத்திய அரசு செய்து வரும் உதவிகள் குறித்தும் விளக்கினர்.இக்கூட்டத்தில், காங்கிரஸ் சார்பில் சிதம்பரம், மாணிக்கம் தாகூர், தேசியவாத காங்கிரசின் சரத் பவார், தி.மு.க., சார்பில் பாலு, அப்துல்லா பங்கேற்றனர்.அ.தி.மு.க.,வின் தம்பிதுரை, திரிணமுல் காங்கிரசின் சுகதா ராய், தேசிய மாநாட்டுக் கட்சியின் பரூக் அப்துல்லா, ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங், ம.தி.மு.க.,வின் வைகோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment