கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் கணியாமூரில், தனியார் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் படித்த பிளஸ் ௨ மாணவி ஸ்ரீமதியின் சந்தேக மரணம், இம்மாதம், 13ம் தேதி அதிகாலை நிகழ்ந்துள்ளது. அப்போதே, பள்ளி நிர்வாகத்தின் மீது போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மாணவி தங்கியிருந்த விடுதியின் வார்டன் உள்ளிட்ட சிலரை கைது செய்திருக்க வேண்டும். காவல்துறை இந்த வழக்கில் மெத்தனமாக செயல்பட்டதே, மிகப்பெரிய கலவரம் நடக்க காரணமாகி விட்டது. தனியார் பள்ளி சூறையாடப்பட்டதை, தொலைக்காட்சிகளில் நேரில் பார்த்த போது, அதிர்ச்சி அடைந்தோம். அமைதிப் பூங்கா என்று சொல்லப்படும், தமிழகத்தில் தான் வசிக்கிறோமோ அல்லது பீஹார் மாநிலத்தில் சில ஆண்டுகளுக்கு முன், ரவுடிகள் ராஜ்ஜியம் இருந்தது போன்று, தமிழகம் மாறி விட்டதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. சினிமாவில் காட்டப்படும் வன்முறை காட்சிகள் அனைத்தும், தனியார் பள்ளியின் மீது நடத்தப்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது. நல்லவேளை... பள்ளி விடுமுறை தினமாக இருந்ததால், உயிர் சேதம் நிகழவில்லை. ஸ்காட்லாந்து போலீசுக்கு நிகராக ஒப்பிட்டு பேசப்படும் தமிழக போலீஸ், இந்த சம்பவத்தில் முற்றிலும் செயல் இழந்து நின்றதை பார்த்து, ஒவ்வொரு தமிழனும் அதிர்ச்சியில் உறைந்து போனான் என்பதில் சந்தேகமில்லை.
தமிழக உளவுத்துறை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முற்றிலும் செயல்படவில்லை என்பது, ௧௦௦ சதவீதம் உண்மையாகி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் அனைவருமே, இந்த கொடிய கலவரத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். அத்துடன், மாணவியின் மர்ம மரணத்திற்கு காரணமான குற்றவாளிகள் தப்பித்து விடாமல், கைது செய்யப்பட வேண்டும்; கலவரத்தில் ஈடுபட்ட அனைவரும், நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இல்லையெனில், எதிர்வரும் காலங்களில், இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி தமிழகத்தில் அரங்கேறும் சூழ்நிலை உருவாகும். இனி வரும் நாட்களிலாவது, உளவு போலீசாரும், இதர போலீசாரும் உறக்க நிலையில் இருந்து விடுபட்டு, உஷாராக செயல்பட வேண்டும்.
No comments:
Post a Comment