தன் பதவியேற்பு உறுதிமொழியை, 'கடவுளின் பெயரால் ஆணை எடுப்பதாக' அழுத்தம் திருத்தமாகக் கூறிய இசையமைப்பாளர் இளையராஜா, நேற்று ராஜ்யசபா நியமன எம்.பி.,யாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
உலகம் முழுதும் கோடிக்கணக்கான இசை ரசிகர்களைக் கொண்ட இளையராஜாவை, ராஜ்யசபாவின் நியமன எம்.பி.,யாக மத்திய அரசு அறிவித்திருந்தது.இவரோடு சேர்ந்து நியமிக்கப்பட்ட பி.டி.உஷா உள்ளிட்ட மற்றவர்கள் ஏற்கனவே பதவியேற்ற நிலையில், இளையராஜா மட்டும் பதவியேற்காமல் இருந்தார்.
ஏற்கனவே ஒப்புக் கொண்ட இசை நிகழ்ச்சிக்காக அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்ததால், அவரால் மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் பதவியேற்க முடியவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் டில்லிக்கு வந்த அவருக்கு, விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நேற்று மதியம் 2:00 மணிக்கு ராஜ்யசபா கூடியதும், துணைத் தலைவர் ரகுவன்ஷ்சிங் நாராயண் முதல் அலுவலாக பதவியேற்பு நிகழ்ச்சிக்கு உத்தரவிட, இளையராஜாவை ராஜ்யசபா செகரட்டரி ஜெனரல் பி.சி.மோடி அழைத்தார்.
தன் வழக்கமான ஸ்டைலான வேட்டி, ஜிப்பாவில் வந்திருந்த இளையராஜா, 'மைக்' முன் நின்று, தமிழில் பதவிப் பிரமாண உறுதிமொழியை வாசித்தார். அப்போது, 'கடவுளின் பெயரால்' என்று கூறும்போது, வழக்கத்தைவிட சற்றே குரலை உயர்த்தியும், அழுத்தியும் கூறினார். துணைத் தலைவர் ரகுவன்ஷ்சிங் நாராயண், அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் மூத்த எம்.பி.,க்கள் என பலரும் இளையராஜாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
No comments:
Post a Comment