2002-க்கு பிறகு தான், மாதம் நினைவில்லை!
ஒரு நாள் வழக்கம்போல் தலைமைச் செயலகம் செய்தியாளர்கள் அறையில் இருந்தேன்.
அன்றுதான் அழைத்தேன்.
எதிரே உட்கார வைத்து, ‘அடிக்கடி இந்த பக்கம் வந்து போகிறீர்களே. என்ன பிரச்சனை’ என்றேன்.
ரத்தமும் சதையுமான ஒரு பிரமாண்டமான கதை விரிந்தது.
ராமநாதபுர சமஸ்தான மன்னர் சேதுபதியை எப்படியும் வீழ்த்தியாக வேண்டும் என்று கங்கனம் கட்டுகிறது வெள்ளையர் ஆட்சி.
காரணம், பதிமூன்றாவது முறையாகப் படையெடுத்துப் தோற்றுப்போன அவமானம். விதம் விதமாக வியூகம் வகுத்தாலும், அவரை வீழ்த்த முடியவில்லை. அந்த கோட்டைக் கதவைக்கூட தொட முடியவில்லை.
பிரட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு வெட்கக்கேடல்லவா. அதனால் திரும்பத் திரும்ப போர் தொடுத்தார்கள்.
ஒவ்வொரு முறையும் மூர்க்கமான எதிர்த் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தார் மன்னர் சேதுபதி.
எதற்காக இந்த போர் என்றால், ‘வரி கட்டி, அடிபணிய வேண்டும்’ என்ற ஒற்றை அதிகாரத் திமிருக்காக!.
அந்த அதிகாரத் திமிரில் ஒவ்வொரு முறையும் கொள்ளிவைத்து அனுப்பிக் கொண்டிருந்தார் சேதுபதி மன்னர்.
“சல்லிக்காசு கிடைக்காது மகனே, ஆனதைப் பார்த்துக்கொள்ளும்’ என கூறிவிட்டார் சேதுபதி.
இது பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு கேடல்லவா?. அசிங்கமல்லவா? மற்ற மன்னர்களும், குறுநில மன்னர்களும் எப்படி வரிகட்டுவான்? குளிர்விட்டுப் போகுமல்லவா? அது நீடிக்கக்கூடாதே, அச்சமற்று போய்விடுமே என்று ஆதங்கப்பட்ட தலைமை ஆளுநர்,
‘என்ன விலை கொடுத்தேனும் அவனை அடிபணிய வையுங்கள்’ என்று சென்னை கோட்டையில் இருந்து உத்தரவு அனுப்பினார்.
பெருமுனைப்போடு, திட்டமிட்டு 14-வது முறை தாக்கினார்கள். ஆனாலும் படுதோல்வி. இழப்பும் அவமானமும் கொஞ்சநஞ்சமல்ல. அதிகமாகவே அனுபவித்தார்கள்.
நிதானமாக யோசித்து, வரிகட்டி பணிந்திருக்கும் மற்ற சமஸ்தானத்தின் மன்னர்களுக்கு ஆசை வார்த்தைகளைக்கூறி அவர்களின் படையை எல்லாம் இணைத்துக்கொண்டு போய் சுற்றி வளைத்து தாக்கினார்கள்.
விதிமுறைகளை மீறிய அந்த போரில், சேதுபதி மன்னர் வீழ்ந்தார். கோட்டை கொத்தளங்கள் சிதைக்கப்பட்டது. மன்னர் குடும்பத்தை தூக்கிலிட்டார்கள். அரச நிர்வாகிகளையும், ஆதரவாளர்களையும் சிறையிலிட்டார்கள்.
இறுதியாக, கொள்ளையிட்ட பொன்பொருட்களோடு மன்னர் சேதுபதியையும்-ராணியையும் கைது செய்து, சென்னை கோட்டையில் உள்ள குதிரைகளுக்கான லாயத்தில் (கொட்டடி) (இன்றைய தலைமைச் செயலக கோட்டை சுற்றுச்சுவரில் உள்ளது லாயம்) சிறை வைத்தார்கள்.
ராபர்ட் கிளைவ் ஹவுஸ்-சில்தான் ஒவ்வொரு மாதமும் விசாரணை நடக்கும்.(இப்போது மத்திய தொல்லியல் துறை அலுவலகம்).
''வரி கட்டுகிறாயா? விடுதலை செய்து விடுகின்றேன்'' என கேட்பார் ஆளுநர்.
''முடியாது, அது தமிழர்களின் தன்மானத்திற்கான கேடு. மண்ணின் பெருமைக்கு வீழ்ச்சி'' என்பார் சேதுபதி மன்னர்.
மீண்டும் கொட்டடியில் அடைப்பார்கள்.
அப்போது ராணியார் அவர்கள் கர்பமாக வேறு இருந்தார். அதைக்காட்டியும் பணியவைக்க முயற்சித்தார்கள்.அதற்கெல்லாம் மயங்கவேயில்லை. வரி கட்ட முடியவே முடியாது என்று உறுதியாக நின்றார்.
கடைசியாக, ‘'வரி எல்லாம் வேண்டாம். பெயருக்கு ஒரு சிறு தொகையைக் (ஒரு ரூபாய் என நினைக்கின்றேன்) கட்டுவதாக ஒப்புக்கொள். எங்களின் கட்டளையை ஏற்று செயல்படு. உங்களை மன்னராக அனுப்பி வைக்கின்றேன்'' என்கிறார் ஆளுநர்.
அப்போதும் முடியாது என்று மறுத்துவிட்டு சிறையிலேயே இருக்கின்றார். ஒரு கட்டத்தில் ஏதாவது கோரிக்கை இருக்கின்றதா என கேட்கிறார்கள்.
’'ஆமாம். என்னை கைது செய்து கொட்டடியில் வைத்திருப்பது நியாயம். கர்பிணியாக உள்ள என் மனைவியை சிறை வைத்திருப்பது அநீதி. எனவே அவரை விடுவித்து, அரசு மரியாதையுடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும்'’ என்று கூறுகிறார்.
அதை ஏற்றுக்கொண்ட வெள்ளை பிரபு, ஒரு செவிலியரை நியமித்து, தகுந்த பாதுகாப்போடு குதிரை வண்டியில் அனுப்பி வைக்கின்றார்.
இராமநாதபுரத்தை நோக்கி அப்படி பயணித்துக் கொண்டிருந்தபோது ஒரு நாள் பிரசவ வலி வந்துவிடுகிறது. அந்த இடம் மதுரைக்கு சற்று அருகே இருந்தது.
விரைவாக மதுரைக்குள் சென்று அரசு மருத்துவ மனையில் (இன்றைய இராஜாஜி மருத்துவமனை) சேர்க்கிறார்கள். அங்கு அழகான ஒரு ஆன்பிள்ளை பிறக்கின்றது.
சில நாள் ஓய்வுக்குப் பிறகு, தகுந்த குறிப்புகளை பெற்றுக்கொண்டு சொந்த ஊருக்கு பயணித்தார்கள்.
அந்த குழந்தையின் வாரிசுதான் இப்போது என் முன்பாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தது.
மிகவும் வறுமையில் இருப்பதாகவும், அரசு மாதாந்திர உதவித் தொகை 500 ரூபாயை வழங்க வேண்டும் என்ற மனுப்போட்டு நடந்துகொண்டிருந்தார்.
குடும்பம்- வருமானம் பற்றி விசாரித்தேன். தினக்கூலி வாழ்க்கையைவிட மோசமாக இருந்தது அவர்களின் வாழ்க்கை. அதற்கு மேல் எழுதுவது அநாகரீகம்.
ஒன்றுமே இல்லாமல் மஞ்சள் பையோடு வந்தவர்கள், அவர்களின் வாரிசுகளும் பத்து தலைமுறைகளுக்கு பல்லாயிரம் கோடி சொத்துக்களை வைத்துக்கொண்டிருக்க...
நாடாண்ட பரம்பரையின் வாரிசு 500 ரூபாய் நிதிகேட்டு மஞ்சள் துணி பையோடு அலைந்துகொண்டிருந்த அவலம் மனதை உலுக்கியது.
கடைசியாக, சேதுபதி மன்னர் பல ஆண்டுகளாக (15 ஆண்டுகளுக்கும் மேலாக- சரியாகத் தெரியவில்லை) அங்கேயே சிறையிருந்து, இறந்தும் போனார்.
அவர் இறக்கும் வரையிலும்,
‘வரி கட்டுகிறாயா-மன்னராக அனுப்பி வைக்கின்றேன்’ என்ற விசாரணையும்,
‘அது என் இனத்திற்கும்- மண்ணுக்கும் கேடு, அவமானம்’ என மன்னர் மறுத்ததும் ஒவ்வொரு 3 மாதமும் நீடித்திருக்கின்றது.
வீரத்திலும், தன்மானத்திலும் சேதுபதி மன்னர்...மாமன்னராகவே இறந்து போனார்.
அவருடன் கொண்டுவந்திருந்த ஒரு குறுவாள், சிறிய பெட்டி, மேலும் சில பொருட்கள் இருந்துள்ளது.
பார் போற்றும் அந்த மன்னர் சேதுபதியின் உடலை, எழும்பூர் கிருத்துவ தேவாலயத்தின் வளாகத்திற்குள்ளாக வைத்து அடக்கம் செய்திருக்கிறார்கள்.
ஆவணக்காப்பகம் சென்று மேலும் சில தகவல்களை விசாரித்தேன். (சரியாக ஏதும் கிடைக்கவில்லை)
கோட்டையில் அவர் சிறையிருந்த கொட்டடி, கோட்டைச் சுவர் நுழைவு வாசலில் இருந்து இடது புறம் இருந்தது. தலைமைச் செயலகம் உட்பட கோட்டை முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடம். ஒரு பகுதி தொல்லியல் துறையிடம் உள்ளது.
இரண்டிற்கும் அலைந்து-நடையாய் நடந்து அனுமதி பெற்று அந்த குதிரை கொட்டடியை படம் எடுத்தேன்.
எழும்பூரில் அலைந்து திரிந்து சமாதியையும் புகைப்படம் எடுத்தேன்.
(என்னோடு புகைப்பட கலைஞராக திரிந்தது ம.செந்தில்நாதன். இப்போதும் குமுதம் இதழில் உள்ளார்.)
குமுதம் வார இதழில் கவர் ஸ்டோரியாக இரண்டு வாரம் வெளிவந்து பரபரப்பாக பேசப்பட்டது. அந்த முதியவரின் குடும்பத்தாருக்கு, உறவினர்களுக்கு உரிய நிவாரணம் கிடைத்ததாக சொன்னார்கள்.
இப்படியான வரலாறுகள் எல்லாம் இன்று இருட்டிப்பு செய்யப்பட்டுவிட்டது. தமிழ் மன்னர்களின் கதைகள் எல்லாம் கற்பனைகளாக்கப்பட்டு விட்டது. கற்பனைகளை எல்லாம் வீரகாவியமாக்கி சிலைகள் வைத்துவிட்டார்கள்.
வேறென்ன சொல்வது?
குறிப்பு-
ஒரு தகவலுக்காக பகத்சிங்- மற்றும் அவர்களது தோழர்கள் ஆகியோரின் வீரம்செரிந்த போராட்ட வரலாறுகளை படித்துக் கொண்டிருந்தேன்.
அதில் சூரியாசென் என்ற தோழரும் தூக்கிலிடப்பட்டார். தூக்கிலிடுவதற்கு முன் அவரை பற்களை எல்லாம் உடைத்து நொறுக்கி, சித்ரவதை செய்துதான் தூக்கிலிட்டார்கள்.
அப்படியான பல தோழர்களின் வரலாறு எல்லாம் மறைக்கப்பட்டதே என்ற நினைப்பில்..
இந்த இராமநாதபுர சமஸ்தான சேதுபதி மன்னர் நினைவுக்கு வந்து நின்றார். பகிர்ந்ததேன்.
No comments:
Post a Comment