உங்களுக்கு ஒண்ணும் தெரியாது வாயை மூடுங்க.சுகர் இருக்குங்கறதே மறந்து ஸ்வீட் பண்றியான்னு கேக்கவேண்டியது.முடியாதுன்னா வீட்டுல மரியாதையே இல்லேன்னு பொலம்ப வேண்டியது
ரெண்டு வாரத்துக்கு ஒரு முறை சலூனுக்கு போறதே கிடையாது.மலையூர் மம்பட்டியான் மாதிரி தலைமுடி மீசைன்னு இருக்க எப்படித்தான் புடிக்குமோ?
எவனாவது ப்ரெண்டுன்னு சொல்லி கடன் கேட்டா போதும்.டக்குனு குடுத்துட்டு திருப்பி கேக்க தயங்கறது..
இவ்ளோ வருஷமாச்சு காய்கறி பாத்து வாங்கத்தெரியாது. வாங்கற அரைகிலோவுல பாதி சொத்தை மீதி முத்தல்..
கார் சாவி ,பேனா ,ஃபோன் சார்ஜர், வாட்ச்,ஹெட்போன்,பெல்ட்னு எல்லாத்தையும் கைக்கு வந்த இடத்துல வெச்சிட்டு பொழுதன்னைக்கும் தேடறதே வாடிக்கை..
வீட்டுல என்ன இருக்கு ஏது இருக்குன்னு தெரியாம போனை போட்டு சாப்பிட வாங்களேன்னு வீட்டுக்கு யாரையாவது கூப்பிட வேண்டியது..
ஏமாந்தவ ஒருத்தி கிடைச்சேன்..தலையில மொளகாய் அரைக்க..என்ன தவிர யாரும் தாக்குபிடிக்க முடியாது உங்க குணத்துக்கு
**************************
என்னிக்கு என்ன பேச விட்டிருக்கே நீ? நீயா ஆரம்பிச்சு ,நீயா பொலம்பி , நீயா ஒரு முடிவெடுத்து முடிச்சிடுவே..எதுவுமே சரியா நடக்கலேன்னா உங்களாலதான்னு ஒரேயடியா என் தலையில போட்டிடுவே...
நான் பேப்பர் படிக்கும் போது தான் உனக்கு உலக மகா பிரச்சினையெல்லாம் ஞாபத்துக்கு வரும்.ஒரு வரி படிக்கவிடாம தொந்தரவு பண்ணுவ..
எப்பவும் எடுத்த பொருளை ஒரு இம்மி அளவு கூட மாறாம எடுத்த இடத்துலேயே வைக்கணும்னா எப்படி? இதென்ன வீடா மியூசியமா?
உன்னை எதிர்த்து பேசிட்டு அப்புறம் இந்த வீட்டுல நான் வாழ்ந்திடமுடியுமா?
தொறந்தா தலையில விழுது உன் டிரெஸுங்க..எப்போ பாத்தாலும் நல்ல புடவையே இல்லேன்னுதான் பொலம்பறே..
உதவி செய்யறேன்னு வந்தா..உங்களுக்கு எதுவும் சரியா செய்யத்தெரியாதுன்னு தடுக்கவேண்டியது.. எல்லாத்தையும் நானேதான் செய்யணும்னு என் தலையெழுத்துன்னு பின்னாடி பொலம்பவேண்டியது....
அமைதியா இருந்தா ...அழுத்தமா இருக்கேன்னு சொல்லவேண்டியது..ஏதாவது சொல்லவந்தா புரியாம உளறாதீங்கன்னு சொல்லவேண்டியது..மனுஷன் என்னதான் பண்ணுவான் ..
பொசுக்கு பொசுக்குன்னு யாரு மொகத்தை தூக்கி வச்சிகறதுன்னு கணக்கெடுத்து பாரு..
உனக்கா மூடு வந்து நீ செஞ்ச ஸ்வீட்டை சாப்பிடும்போது எனக்கு சுகர் வராது..நானா கேட்டு சாப்டா வரும்..எந்த ஊரு ஞாயம்டா சாமி
எல்லாத்தையும் தலையாட்டிக்கிட்டே கடந்து போக ஒரு அடிமை சிக்கியிருக்கேன் உனக்கு...நீ ஏன் பேசமாட்டே..
எழுதிவைத்துக்கொள்ளுங்கள்..
இந்தப்புலம்பல்களினூடே ஒளிந்திருக்கும் காதலின் ஆழத்தை சோனார் கருவியாலும் அளக்க இயலாது ..
இது என்னுடையது என்ற அசைமுடியாக நம்பிக்கை அடித்தளத்தின் மேலே முளைக்கும் சாடுதல் விளையாட்டுகள் இவை.
இவர்களின் பிணக்கின் அடிஆழத்தில் ஊறிய இணக்கு வெளியுலகிற்குப் புரியாது..
மாறுவேடமிட்ட புரிதல் தான் சாடுதல் என்பது மற்றவருக்குப் புரியாது..
அன்றாடம் சண்டையிடும் அன்றில் பறவைகளென்பது மேலோட்டப்பார்வைகளுக்கு அனுமானிக்க இயலாது..
இரட்டைக்கிளவிக்குப் பிளவுகளில்லையென்பது அந்த இரண்டு உள்ளங்களைத்தாண்டி வேறு யாருக்கும் விளங்காது....
சலிப்பும் கோபமும் தூக்கலான போதிலும் அனிச்சையாய் வெளிப்படும் அவசிய அக்கரைகள் கடந்து வந்த காதல்தேசத்திற்கான முகவரியில்லாக்கடிதங்கள்...
உணர்வு ஊர்தியில் வார்த்தைகள் குறுக்கும் நெடுக்குமாய் மேலும் கீழுமாய் நிற்காமல் ஒலியெழுப்பிய படியே பயணிக்கின்ற வீடுகள்தான்
உண்மையான காதல் கோட்டைகள்....
No comments:
Post a Comment