ஒரு சமயம் விவேகானந்தர் லண்டனுக்குச் சென்றிருந்தார். அங்கு நண்பர் ஒருவரின் இயற்கை எழில் சூழ்ந்த பண்ணை வீட்டில் தங்கினார். அங்கு நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.
ஒருநாள் மாலையில் மைதானத்தில் விவேகானந்தர் நடைபயிற்சி மேற்கொண்டார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து வந்தனர்.அப்போது எதிர்பாராமல் ஒரு மாடு அவர்களை நோக்கி ஓடி வந்தது. அதன் மூர்க்கத்தனம் கண்டு பயந்த நண்பரின் மனைவி பதட்டத்தில் மயங்கி விழுந்தார். மனைவியை துாக்க நண்பர் முயன்றும் முடியவில்லை. அப்போது மாடு அவர்களை நெருங்கியதால், தன்னைக் குத்தி விடுமே என்ற பயத்தில் அங்கிருந்து தலைதெறிக்க ஓடினார் நண்பர். ஆனால், விவேகானந்தர் மனஉறுதியுடன் அசையாமல் அந்த இடத்திலேயே நின்றார்.
மயங்கிக் கிடந்த நண்பரின் மனைவி, நின்றிருந்த விவேகானந்தரை விட்டு விட்டு, ஓடிச் சென்ற நண்பரை நோக்கிய மாடு அவரைப் பின்தொடர ஆரம்பித்தது.உயிரைக் கையில் பிடித்தபடி ஓடிய நண்பர் அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் ஒளிவதற்காக நுழைந்தார். மாட்டை பின்தொடர்ந்த பண்ணை ஊழியர்கள் சிலர் அதை பிடித்துக் கட்டி வைத்தனர். அதன் பின் விவேகானந்தர் அங்கிருந்து நகர்ந்தார்.
இதையறிந்த நண்பர் ஆச்சரியப்பட்டார். இதற்குள் நண்பரின் மனைவி மயக்கம் தெளிந்து எழுந்தார்.''ஆபத்தான நேரத்திலும் பயமின்றி உறுதியாக எப்படி உங்களால் நிற்க முடிந்தது?” எனக் கேட்டார் நண்பர்.
புன்னகைத்த விவேகானந்தர், ''நான் வித்தியாசமாக ஒன்றும் செய்யவில்லை. வருவது வரட்டும்; துணிந்து நிற்கலாம் என்ற உறுதியுடன் இங்கேயே நின்று விட்டேன். ஓடுபவரைக் கண்டால் விடாமல் துரத்துவது மிருகங்களின் குணம். அதனால் தான் மாடு என்னை விட்டு, ஓடிய உங்களை குறிவைத்து துரத்தியது'' என்றார். விவேகானந்தரின் துணிச்சல் கண்டு வியந்தார் நண்பர்.
'உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே! நீ சாதிக்க பிறந்தவன்! துணிந்து நில்!
எதையும் வெல்' என பிறருக்கு அறிவுறுத்தியதோடு தானும் வாழ்வில் கடைபிடித்தவர் வீரத்துறவி விவேகானந்தர்.
No comments:
Post a Comment