Friday, July 15, 2022

மாவட்டத்தில் போக்குவரத்து கழக அதிகாரிகள் தில்லாலங்கடி: ரூட் பஸ்களில் டவுன் பஸ் டிக்கெட் வழங்கல்.

 கடலுார்-ரூட் பஸ்களில் டவுன் பஸ் டிக்கெட்டை பயணிகளுக்கு வழங்கி, அரசு போக்குவரத்து அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் காட்டுமன்னார்கோவில் கிளை பனிமனையில் 13 டவுன் பஸ்கள் உட்பட 29 பஸ்கள் இயக்கப்படுகிறது. பணிமனையில் டிரைவர், கண்டக்டர்கள் என 160 பேர் பணிபுரிகின்றனர்.பொதுமக்கள் நலன் கருதி, கிராம பகுதிகளில் அரசு பஸ் சேவையை அதிகரிக்கும் நோக்கில் கடந்த 2015ல் காட்டுமன்னார்கோவிலில் புதிய பணிமனை கொண்டுவரப்பட்டது.டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் என தமிழக அரசு அறிவித்தது.

அது முதல் டவுன் பஸ்கள் மிக குறைந்த வருமானம் ஈட்டுகிறது. டிரைவர், கண்டக்டர்களுக்கு படி 20, 30 ரூபாய் என, கிடைப்பதால், டவுன் பஸ் இயக்க யாரும் முன் வருவது இல்லை. சென்னை, சேலம், கும்பகோணம் என தொலைதுாரம் இயக்கப்படும் பஸ்களுக்கு மட்டுமே ஊழியர்கள் ஆர்வத்துடன் பணிக்கு வருகின்றனர்.காட்டுமன்னார்கோவில் பணிமனையில் ஊழியர்கள் சரியாக பணிக்கு வராததால் தினசரி 8க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் இயக்கப்படாமல் ஓரம் கட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

காட்டுமன்னார்கோவில் சுற்றுப் பகுதி கிராமங்களுக்கு சரியாக பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.டவுன் பஸ்கள் காட்சிப் பொருளாக நிறுத்தப்பட்டிருப்பதால், வருவாய் இழப்பும், கி.மீ., இயக்கம் தடைப்படுவதைக் கண்டு உயர் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து உயர் அதிகாரிகள் பல முறை நேரில் ஆய்வு செய்தும் சரி செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.

டவுன் பஸ்கள் அனைத்தும் இயக்கப்பட வேண்டும் என, கிளை மேலாளருக்கு உயர் அதிகாரிகள் கண்டிப்பான உத்தரவிட்டுள்ளனர்.ஊழியர்கள் ஒத்துழைப்பு கொடுக்காததால் கிளை மேலாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.இந்நிலையில், டவுன் பஸ்கள் இயக்கப்படாமல் இருப்பதை மறைப்பதற்காக பணிமனை அதிகாரிகள் பணிக்கு வரும் ஊழியர்களை கொண்டு, கும்பகோணம், சிதம்பரம், விருத்தாசலம் போன்ற வழித்தடங்களில் இயக்கப்படும் ரூட் பஸ்களில் டவுன் பஸ் டிக்கெட்டை கொடுத்து, அனைத்து டவுன் பஸ்களும் இயக்கப்படுவதாக உயர் அதிகாரிகளுக்கு கணக்கு காட்டுகின்றனர்.


latest tamil news


சில வழித்தடங்களில் ஒரே சமயத்தில் இரு டவுன் பஸ்சுக்கு உரிய டிக்கெட்டுகள் கொடுத்து இயக்கப்படுகிறது. ரூட் பஸ்களில் டவுன் பஸ் டிக்கெட் கொடுக்கப்படுவதால், பயணிகள் - கண்டக்டர் இடையே பிரச்னை ஏற்படுகிறது. அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தங்களது தவறுகளை மறைக்க பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.கிளை அதிகாரிகள் டவுன் பஸ்களை இயக்காமலே இயக்கப்படுவதாக கணக்கு காண்பிப்பதால், ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மாவட்டம் முழுவதும் உள்ள பெரும்பாலான அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் இதே நிலை தான் தொடர்கிறது. இது போன்ற ஏமாற்று வேலையை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...