'பாக்கெட்' செய்யப்பட்ட, பிராண்ட் அல்லாத பருப்புகள், தானியங்கள், மாவுகளுக்கும் ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 25 கிலோவுக்கு மேற்பட்ட பாக்கெட்டுகளுக்கு வரி கிடையாது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பிரபல நிறுவனங்களின் பெயரில், 'பிராண்ட்' எனப்படும் முத்திரை குறியீட்டுடன் விற்கப்படும் பருப்புகள், தானியங்கள், மாவு வகைகள் ஆகியவை, ஏற்கனவே, ஜி.எஸ்.டி.,யின் கீழ் வருகின்றன. இந்நிலையில், இவ்வாறு பிராண்ட் பெயரில் இல்லாமல் விற்கப்படும் பருப்பு, தானியம், மாவு வகை ஆகியவற்றுக்கு, நேற்று முதல், 5 சதவீத ஜி.எஸ்.டி., விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து, மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வரி வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பிராண்ட் அல்லாத பருப்பு, தானியம், மாவு வகைகளை, 25 கிலோவுக்கு குறைவான பாக்கெட்டில் கடைகளுக்கு விற்கும்போது, அதற்கு ஜி.எஸ்.டி.,யாக 5 சதவீதம் விதிக்கப்படும். அதே நேரத்தில், 25 கிலோவுக்கு மேற்பட்ட மூட்டைகளுக்கு வரி கிடையாது.
குறைந்த எடைகளில் பாக்கெட் தயாரித்து, அதை மொத்தமாக, 25 கிலோவுக்கு மேற்பட்ட மூட்டையாக விற்பனை செய்தாலும் வரி உண்டு. அதே நேரத்தில், 25 கிலோவை ஒரே மூட்டையாக வாங்கும் கடைகள், அதை சில்லறையாக, குறைந்த எடைகளாக விற்பனை செய்தால், அதற்கு வரி கிடையாது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
அரிசி, பருப்பு, பால், தயிர், மாவு வகைகள் உட்பட பல்வேறு பொருட்களுக்கான ஜி.எஸ்.டி., வரி விகிதம் உயர்த்தப்பட்டு, நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது குறித்து மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டு உள்ளதால், இந்தப் பொருட்களின் விற்பனை விலையில் எந்த மாற்றமும் ஏற்படாது. இது வர்த்தகர்கள், உள்ளீட்டு வரிச் சலுகையைப் பெறுவதற்காகவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 'பேக்கிங்' செய்வது உள்ளிட்டவற்றுக்கு வர்த்தகர்கள் செய்த செலவை திரும்பப் பெற முடியாத நிலை இருந்தது. தற்போது பேக்கிங் செய்வதற்காக ஜி.எஸ்.டி., விதிக்கப்படுவதால், உள்ளீட்டு வரிச் சலுகை மூலம் அது வர்த்தகர்களுக்கு கிடைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment