`பழனங்கள்' (வயல்கள்) சூழ்ந்ததால், இந்தத் தலம் 'பழநி' எனப்பட்டது.
'சித்தன் வாழ்வென்று சொல்கிற ஊர் முன் காலத்து ஆவினன்குடி என்று பெயர் பெற்றிருந்தது!' என்று திருமுருகாற்றுப்படை உரையில், நச்சினார்க்கினியர் குறிப்பிடுவதால், 'சித்தன் வாழ்வு' என்ற பெயரிலும் பழநி அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
சேரன் செங்குட்டுவனின் தாத்தா வேளாவிக்கோமான் ஆட்சி செய்த பகுதி பழநி. இவன் வழியில் வந்தவன் வையாவி கோப்பெரும் பேகன். இவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன். ஆவியர் குல தலைவனான இவனது தலைநகராகத் திகழ்ந்ததால், பழநிக்கு 'ஆவினன்குடி' என்ற பெயர் வந்ததாம்!
பழநி முருகன்
ஆதிக்கோயில் எது தெரியுமா?.....
`அதிசயம் அநேகமுற்ற பழநி மலை' என்று அருணகிரியார் போற்றுவதற்கு ஏற்ப அற்புதங்கள் நிறைந்து திகழ்கிறது பழநிமலை. அறுபடை வீடுகளும் தேகத்தின் ஆறு ஆதாரங்களைக் குறிக்கும். அவ்வகையில், பழநி உடலின் உயிர்நாடியான மணிபூரகத்தை (இதயம்) குறிப்பது என்கின்றன ஞானநூல்கள்.
குரா மரத்தடியில் முருகன், குரா வடிவேலனாக அகத்தியருக்கு தமிழை உபதேசித்த தலம் இது.
மலையடிவாரத்தில் மலையைச் சுற்றியுள்ள நகர்- 'ஆவினன்குடி' என்றும், மலை- பழநி மலை என்றும் அழைக்கப்பட்டன. தற்போது நகரம் மற்றும் மலையையும் சேர்த்தே 'பழநி' என்கின்றனர். ஒரு தலத் தில் இரு ஆலயங்கள் கொண்ட படை வீடு பழநி மட்டுமே. தண்டாயுத பாணிக்கு கடம்ப மரமும் திரு ஆவினன்குடி முருகனுக்கு நெல்லி மரமும் ஸ்தல விருட்சங்கள்.
அடிவாரக் கோயிலில் உள்ள முருகப் பெருமானை நக்கீரர் பாடியுள்ளார். இங்கு மயில் மீது அமர்ந்து காட்சி தருகிறார் முருகன். இதை 'ஆதிக் கோயில்' என்கிறார்கள்.
தண்டாயுதபாணி சிலையை போகர் ஏன் வடித்தார்?....
மலைக்கோயில் கருவறையில் ஞான தண்டாயுதபாணியாக மேற்கு நோக்கி காட்சி தருகிறார் முருகன். ஸ்கந்த வடிவமான இது, போகர் எனும் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது.
நவபாஷாணக் கலவையைக் கல்லாக்குவது, சித்து வேலை. இதை அறிந்தவர் அகத்தியர். அவரிடம் இருந்து கற்றவர் போகர். தமது உபாசனா தெய்வமான புவனேஸ்வரியின் அறிவுரைப்படி போகர், பழநி மலையில் தவம் இருந்தார்.
அவரது தவத்துக்கு இரங்கிய பழநி ஆண்டவர், தன்னை பிரதிஷ்டை செய்யும் முறை மற்றும் வழிபாடுகள் குறித்துச் சொல்லி மறைந்தார். அதன்படி தண்டபாணி வடிவை உருவாக்கி ஆகம விதிப்படி கர்ப்பக்கிரகத்துக்குள் பிரதிஷ்டை செய்தார் போகர்.
ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் போகரது சமாதி உள்ளது. இங்கு தினசரி வழிபாடுகள் நடைபெறுகின்றன.
பழநி அடிவாரம் சிலையும் சில அதிசயங்களும்!.....
பழநி தண்டாயுதபாணி மூலவர் விக்கிரகம் காற்று, நீர், எண்ணெய், தேன், நெய் ஆகியவற்றால் கரையாது. நெருப்பால் பாதிப்படையாது. தீராத நோய்களையும் தீர்த்து ஆயுளை அதிகரிக்கச் செய்யும் வல்லமை நவபாஷாணத்துக்கு உண்டு என்பர்.
☆தண்டாயுதபாணி, மொட்டை அடித்த ஆண்டி அல்ல. அபிஷேகத்தின்போது கவனித்தால், அவர் சடைமுடியுடன் காட்சி தருவதைக் காணலாம். மூல விக்கிரகத்துக்குச் செய்யப்படும் தேன் மற்றும் எலுமிச்சைச் சாறு அபிஷேகம் சிறப்பான ஒன்று.
தினமும் இரவில் முருகப்பெருமான் மேனி முழுவதும் சந்தனம் பூசுவர். மறுநாள் காலையில் இது பிரசாதமாக வழங்கப்படும் வழக்கம் உண்டு. இந்தப் பிரசாதம் பிணி தீர்க்கும் அருமருந்து என்பது நம்பிக்கை.
இரவில் சந்தனக் காப்பிட்டபின், மறு நாள் காலையில் பார்க்கும் போது இறைவனின் மேனி வியர்த்திருக்கும். அதை துணியால் ஒற்றி எடுத்து தீர்த்தமாக வழங்குகின்றனர்.
கந்தன் அலங்காரம்!....
காலை பூஜையின்போது தண்டாயுதபாணி ஈஸ்வரனை வழிபடுவதாக ஐதீகம். அப்போது காவி உடையில் வைதீகக் கோலத்தில் தண்டாயுத பாணியை அலங்கரிப்பார்கள்.
தொடர்ந்து, காலைச் சந்நிதியில் குழந்தை வடிவ திருக்கோலம், உச்சி காலத்தில் கிரீடத்தோடு கூடிய வைதீக அலங்காரம், சாயரட்சையில் ராஜ அலங்காரம் என்று அலங்கரிப்பது வழக்கம்.
விபூதி அபிஷேகத்தின்போது ஆண்டிக்கோலத்தில் அருள்வாராம். தற்போது பக்தர்கள் பெரும்பாலும் ராஜ கோல அலங்காரத்தையே தரிசித்து மகிழ்கிறார்கள்....
மூலவருக்கு அருகில் சிறிய பேழை ஒன்று உள்ளது. அதில் லிங்க ரூபத்தில் சிவபெருமானும், உமாதேவியும் இருக்கின்றனர். இவர்களை
தண்டாயுதபாணி பூஜிப்பதாக ஐதீகம்.
பழநி முருகன்
பள்ளியறைக்கு பல்லக்கில் பவனி வரும் முருகனின் பாதுகைகள்....
பழநியாண்டவர் முன்பாக 'மாக்கல்' எனப்படும் பெரிய கல் ஒன்று உள்ளது. இது, பள்ளியறைக்கு எழுந்தருளும் முருகனின் திருவடியை (ஶ்ரீபாதம்) தாங்கும் மேடையாகக் கருதப்படுகிறது.
இங்கு பள்ளியறை உற்சவம் விசேஷம். அப்போது வெள்ளிப் பல்லக்கு ஒன்று சந்நிதிக்கு வருகிறது. ஓதுவார்களும், கட்டியக்காரர்களும் இறைவனின் புகழ் பாட மூலஸ்தானத்திலிருந்து சுவாமி பாதுகைகள் பல்லக்கில் வைக்கப்பட்டு ஊர்வலமாக வரும். (வெள்ளி, திங்கள் மற்றும் கிருத்திகை ஆகிய நாட்களில் தங்கப் பல்லக்கு வருமாம்).
அப்போது, கொப்பரைத் தேங்காய்- ஏலக்காய்- சர்க்கரை கலந்த பிரசாதம் வழங்கப்படுகிறது. பிறகு பல்லக்கு பள்ளியறைக்கு வந்து சேரும். அங்கு பாதுகைகள், பல்லக்கில் இருந்து மஞ்சத்துக்கு மாற்றப் படுகின்றன.
தொடர்ந்து, அன்றைய வரவு-செலவு கணக்குகளை படித்துக் காட்டுவர். நிறைவாக நடை சாத்தப்படுகிறது....
ஓம் சரவண பவ
No comments:
Post a Comment