Sunday, July 17, 2022

எம்.பி., செந்தில்குமார் செயலால் தி.மு.க., தலைமை கடும் அதிர்ச்சி.

 பூமி பூஜையை தடுத்த தி.மு.க., - -எம்.பி., செந்தில்குமாரின் செயல், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் மட்டுமின்றி தி.மு.க.,வினரிடமும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


எம்.பி., செந்தில் குமார், திமுக., தலைமை, அதிர்ச்சி
ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி தி.மு.க., என்ற பிம்பத்தை உடைக்க, தி.மு.க., தலைமை எடுக்கும் கடும் முயற்சிகளை, ஒரு எம்.பி.,யின் செயல்பாடு சுக்கு நுாறாக்கியதோடு, ஓட்டு வங்கியையும் பாதிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.தி.மு.க., துவக்கப்பட்ட காலத்தில் இருந்தே, அதன் தலைவர்கள் ஹிந்து மதத்தை கேலி, கிண்டல் செய்வது, கொச்சைப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

அதே நேரம், சிறுபான்மையினர் ஓட்டுகளுக்காக, சிறுபான்மையின மதங்களுக்கு புகழாரம் சூட்டுவதை வழக்கமாக வைத்திருந்தனர். இதை ஹிந்து மதத்தினர் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இது, தி.மு.க.,விற்கு சாதகமாகிப் போனது. ஆனால், தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, தி.மு.க.,வினர் ஹிந்து மதத்தினரை மட்டும் வசைபாடுவது, மக்களுக்கு புரிய துவங்கி விட்டது.தி.மு.க.,வினரின் ஒரு தலைப்பட்சமான நடவடிக்கையை, பா.ஜ.,வினர் அவ்வப்போது மக்களிடம் எடுத்துரைத்து வருகின்றன.

இதனால், தி.மு.க., ஒரு தலைப்பட்சமாக செயல்படுவது, ஹிந்துக்களுக்கு புரிய துவங்கியது.கடந்த சட்டசபை தேர்தலின் போது, அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள், தி.மு.க.,வின் ஹிந்து விரோத போக்கை, பிரசாரத்தில் முன்னிலைப்படுத்தின. இது, மக்களிடம் எடுபடுவதை உணர்ந்த தி.மு.க., நாங்கள் ஹிந்துக்களுக்கு விரோதி அல்ல என பிரசாரம் செய்தனர்.
ஹிந்து மக்களை சமாதானப்படுத்தும் வகையில், 'தி.மு.க.,வில் இருப்போரில் 90 சதவீதம் பேர் ஹிந்துக்கள்' என, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார். தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்றது; ஸ்டாலின் முதல்வரானார். அ.தி.மு.க., ஆட்சிக்கு எதிரான மனநிலை மக்களிடம் இருந்தபோதும், தி.மு.க., தடுமாறியே வெற்றி பெற்றது. இதற்கு, ஹிந்து விரோத போக்கு ஒரு காரணம் என்பதை தி.மு.க., தலைமை உணர்ந்தது.தொடர்ந்து ஹிந்து விரோத போக்கை கடைபிடித்தால், பா.ஜ., வளர்ச்சிக்கு அது வழிகோலும் என்பதை உணர்ந்ததால், தி.மு.க., தன் நிலைபாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியது.


சுற்றி வரும் சேகர்பாபு

ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு நியமிக்கப் பட்டார். ஆன்மிகத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர், 'தி.மு.க., ஹிந்து விரோத கட்சி அல்ல' எனக் காட்ட பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதற்கேற்ப, கோவில் சொத்துக்களை மீட்பது, சிதிலமடைந்த கோவில்களை புனரமைப்பது; குடமுழுக்கு நடத்துவது என வேகம் காட்டி, ஹிந்துக்களின் மனதை கவர முயற்சித்து வருகிறார்.

அதற்கு, முதல்வரும் தேவையான உதவிகளை செய்து வருகிறார். செல்லும் இடங்களில் எல்லாம், 'தி.மு.க., ஆட்சி ஆன்மிக ஆட்சி' என்று எடுத்துச் சொல்ல மறப்பதில்லை.இவ்வாறு, தி.மு.க., ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல என்பதை மக்களிடம் கொண்டு செல்ல, அக்கட்சி தலைமை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. முதல்வரும் அறநிலையத்துறை நிகழ்ச்சிகளில் பங்கேற்று, நலத்திட்ட உதவிகள் வழங்குதல், திட்டப்பணிகளுக்கு பூஜை போடுதல் என, செய்து வந்தார். இதற்கு பலன் கிடைக்க துவங்கியது.

வெண்ணெய் திரண்டு வரும் நிலையில், பானையை உடைத்த கதையாக, தர்மபுரி தி.மு.க.,- - எம்.பி., செந்தில்குமார் நேற்று முன்தினம் ஒரு காரியத்தில் ஈடுபட்டார்.தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், ஆலாபுரத்தில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரியை, மத்திய அரசின் திட்டத்தில் புனரமைக்க 1.38 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இப்பணியின் துவக்க விழா நேற்று முன்தினம் நடந்தது. பணியை துவக்கி வைக்க, தர்மபுரி தி.மு.க.,- - எம்.பி., செந்தில்குமார், தர்மபுரி மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி ஆகியோரை, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குமார் அழைத்திருந்தார்.அங்கு பூமி பூஜை செய்ய புரோகிதர் வரவழைக்கப்பட்டு, பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதை கண்டு எம்.பி., செந்தில்குமார் ஆவேசமானார். '
அரசு விழாவில் ஹிந்து முறைப்படி பூஜைகள் நடக்கக் கூடாது. இப்படி பூஜை செய்ய விதிமுறை உள்ளதா?' என, அதிகாரிகளிடம் எகிறினார். 'கடவுள் இல்லை எனக் கூறும் திராவிடர் கழகத்தினர் எங்கே; கிறிஸ்துவ பாதிரியார்; முஸ்லிம் இமாம் எங்கே?' என மிரட்டினார்.எம்.பி.,யின் ஆவேசத்தை தொடர்ந்து, செயற்பொறியாளர் அவரிடம் மன்னிப்பு கோரினார்.
பூஜை பொருட்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன. இது பொதுமக்கள், அதிகாரிகள், தி.மு.க.,வினர் என, அனைத்து தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க., - எம்.பி.,யின் செயலுக்கு, பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துஉள்ளனர்.ஏற்கனவே, தொப்பூர் - பவானி இரு வழிச்சாலை பூமி பூஜையில், எம்.பி., செந்தில்குமார் பங்கேற்ற புகைப்படம், பல்வேறு அரசு விழாக்களில், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்ற புகைப்படங்களை, 'நெட்டிசன்'கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

புதிய பணிகளை துவக்கும்போது, ஹிந்து முறைப்படி பூஜை போடுவது வழக்கம். இதை மாற்று மதத்தினர் கூட கண்டித்ததில்லை. ஆனால், மத மோதலை ஏற்படுத்தும் வகையில், எம்.பி., செந்தில்குமார் செயல்பட்டுள்ளார்.மேலும், ஹிந்து மத முறைப்படி பூஜை நடத்தக் கூடாது என்றால், ஹிந்து சமய அறநிலையத்துறையை ஏன் அரசு வைத்துள்ளது எனக் கேள்வி எழுப்புகின்றனர்.


எதிர்பார்ப்பு

தி.மு.க.,- - எம்.பி.,யின் செயல்பாடு, தி.மு.க., தலைமைக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஹிந்துக்களுக்கு எதிராக தி.மு.க., இல்லை என்பதை மக்கள் மனதில் பதிய வைக்க முயற்சித்து வரும் நிலையில், 'தி.மு.க.., ஹிந்துக்களுக்கு எதிரான கட்சிதான்' என, அடித்துக் கூறுவதுபோல், எம்.பி.,யின் செயல்பாடு உள்ளது. இது தி.மு.க.,வின் ஓட்டு வங்கியையும் சுக்கு நுாறாக்கும் செயலாக அமைந்து விட்டது. இவர் ஒருவர் போதும்; ஆட்சிக்கு முடிவு கட்ட என, சொந்த கட்சி யினரே நொந்து போய் உள்ளனர். இந்த பிரச்னைக்கு தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...