'அடாவடி, அராஜகம், கட்டிங், கமிஷன், மாமூல்' என, குறுகிய காலத்தில் கொடி கட்டிப் பறக்கும் சென்னை மாநகராட்சி தி.மு.க., கவுன்சிலர்கள், 94 பேரிடம் நேற்று அறிவாலயத்தில் விசாரணை நடத்தப்பட்டது. நேரு தலைமையில் மூன்று அமைச்சர்கள் நடத்திய விசாரணையில் ஆஜரான, பெண் கவுன்சிலர்கள் உள்ளிட்ட 94 பேருக்கு, 'இனிமேல் இது போன்ற புகார்களில் சிக்கினால், பதவி பறிக்கப்படும்' என கடும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள, 200 கவுன்சிலர்களில், 102 பெண் கவுன்சிலர்கள், 98 ஆண் கவுன்சிலர்கள் உள்ளனர். தி.மு.க.,வுக்கு 153 கவுன்சிலர்கள் உள்ளனர். அ.தி.மு.க., சார்பில் 15 கவுன்சிலர்களும், பா.ஜ., - அ.ம.மு.க.,வுக்கு தலா ஒரு கவுன்சிலரும், சுயேச்சையாக நான்கு கவுன்சிலர்களும் உள்ளனர்.
குற்றச்சாட்டு
மாநகராட்சியில் கவுன்சிலர்களாக பதவி ஏற்ற குறுகிய காலத்தில், ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் மீது சரமாரியான குற்றச்சாட்டுகள் அறிவாலயத்தில் குவியத் துவங்கின.
தங்களது வார்டுகளில், புதிய வீடு கட்டுவதற்கு மண் கொட்டினால் போதும்; வீட்டின் உரிமையாளர், கவுன்சிலர்களுக்கு 'கட்டிங்' தர வேண்டும். பெட்டி கடை முதல் தள்ளுவண்டி வியாபாரிகளிடம், தினமும் கல்லா கட்ட வேண்டும். மாநகராட்சி கழிப்பறை வசூலிலும் கப்பம் கேட்கின்றனர்.மீன் மார்க்கெட், கறிக் கடைகளில் மாமூல் மட்டுமின்றி, கவுன்சிலரின் வீடுகளுக்கு 'ஓசி'யில் கறி, மீன் அனுப்பி வைக்க வேண்டும். கட்டுமான நிறுவனங்களும் மாமூல் தர வேண்டும். 'டாஸ்மாக் பார்'களில் அடாவடி மாமூல் கேட்பதுடன், கட்ட பஞ்சாயத்து புகார்களும் கவுன்சிலர்கள் மீது கணக்கில்லாமல் குவிந்துள்ளன.
பட்டியல்
கவுன்சிலர்களின் மக்கள் விரோத குற்றச்சாட்டுகளால் எழுந்த புகார்கள் குறித்து, உளவுத் துறை போலீசார் பட்டியல் தயாரித்து கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில், ஜூலை ௧ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் நேரடி விசாரணை நடத்த திட்டமிட்டுஇருந்தார். ஆனால், அவரது வெளியூர் சுற்றுப்பயணம் நிகழ்ச்சியால், அவருக்கு பதிலாக, கட்சியின் முதன்மை செயலரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான நேரு, சென்னை அறிவாலயத்தில் நேற்று விசாரணை நடத்தினார்.
94 கவுன்சிலர்கள்
அவருடன், அமைச்சர்கள் சேகர்பாபு, சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட செயலர்கள் சுதர்சனம், மயிலை வேலு, இளைய அருணா ஆகியோரும் பங்கேற்றனர். குற்றச்சாட்டுக்குள்ளான 94 கவுன்சிலர்கள் மற்றும் மாவட்டச் செயலர் ஒருவரிடமும் தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டது.
அண்ணா நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லுார், ஆயிரம் விளக்கு, சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், சாலிகிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் செய்த தவறுகளை ஒவ்வொன்றாக, அமைச்சர் நேரு பட்டியலிட்டார். மாவட்ட செயலர் ஒருவர், முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டப்பட்ட 'பில்டர்' ஒருவரிடம் வசூல் வேட்டை நடத்தியதாகவும், அதனால் அவருக்கு தலைகுனிவு ஏற்பட்டதாகவும், நேரு கடிந்து கொண்டார்.பெண் கவுன்சிலர்கள் பணியே செய்வதில்லை என்றும், அவர்களின் கணவர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதாகவும், அமைச்சர் நேரு ஆதாரங்களை அடுக்கியுள்ளார். குறிப்பாக, அண்ணா நகர், ஆயிரம் விளக்கு பகுதி பெண் கவுன்சிலர்களின் வசூல் அராஜகத்தை பட்டியலிட்ட நேரு, அவர்களை கடுமையாக
எச்சரித்துள்ளார்.
வேளச்சேரி பகுதி கவுன்சிலர் ஒருவர், மாநகராட்சி இடத்தை வளைத்து, 'பார்' கட்ட அனுமதி தந்துள்ளார். எனவே, வார்டு வளர்ச்சி பணிகளுக்கு, ஆய்வுக்கு செல்லும் பெண் கவுன்சிலர்கள், தங்கள் கணவரை அழைத்துச் செல்ல வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இனிமேலும் கவுன்சிலர்கள் மீது புகார்கள் வருமானால், அவர்கள் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்; கவுன்சிலர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவர் என, நேரு எச்சரித்து அனுப்பி உள்ளார்.விசாரணைக்கு ஆஜரான கவுன்சிலர்கள் சிலர் கூறுகையில், 'பருவ மழை துவங்கவுள்ள நிலையில், சென்னையில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் கட்டுமானப் பணிகளை துரிதமாக முடிப்பது குறித்தும், மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் இதர திட்டப் பணிகள் குறித்தும் ஆலோசித்தோம்' என்றனர்.
No comments:
Post a Comment