சமீப நாட்களாக நடைபெறும் நிகழ்வுகளை பார்க்கும் போது, தமிழக கவர்னரை குறை கூறுவது மட்டுமே, முதல்வர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க., அமைச்சர்களின் வேலையாக இருக்கும் போல தெரிகிறது.
தமிழகத்தில் கவர்னராக இருப்பவர், அமைச்சர்களுக்கு அடிபணிந்து நடக்க வேண்டும்; ஆட்சியாளர்கள் சொல்வதற்கு எல்லாம் தலையாட்ட வேண்டும் என்றே, தி.மு.க., வினர் நினைக்கின்றனர். மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை பற்றி கவர்னர் பேசக்கூடாதாம்; பட்டமளிப்பு விழாக்களுக்கு செல்லக்கூடாதாம். பல்கலை பட்டமளிப்பு விழாக்களுக்கு செல்வதென்றால், உயர் கல்வி அமைச்சரின் உத்தரவு பெற்றுத் தான் செல்ல வேண்டுமாம். இப்படி எல்லாம் உத்தரவு போடுகின்றனர் ஆட்சியாளர்கள்.
அதே நேரத்தில், அரசியலில் வீணாய் போன வைகோவோ, 'கவர்னர் என்ன வானளாவிய அதிகாரம் பொருந்தியவரா' என்று கேட்கிறார். தி.மு.க.,வின் அடிவருடிகளான திருமாவும், காங்கிரசாரும் கூட, கவர்னரை வரம்பு மீறிய வார்த்தைகளால் விமர்சிக்கின்றனர். 'தாய்மொழிக்கு முக்கியத்துவம் தரும், மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையால் மாணவர்களின் திறனும், கல்வித் தரமும் மேம்படும்' என்கின்றனர் கல்வியாளர்கள்.
அதை கிடப்பில் போட்டு, புதிய கல்வி கொள்கை உருவாக்க குழு அமைத்து உள்ளது தமிழக அரசு. தமிழகத்தில் ஏற்கனவே தரமான கல்வி கிடையாது; ஆசிரியர்களின் தரமும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இந்நிலையில், கல்வியை அரசியலாக்கி, அதன் தரத்தை மேலும் குறைக்கவே முயற்சிக்கிறது தி.மு.க., அரசு.
இவர்கள் அரசியல் செய்வதற்கு மாணவர்களை எதற்கு பகடைக் காயாக்க வேண்டும்? ஏழை மாணவர்கள் உருப்படாமல் போக வேண்டும்; அப்போது தான் தங்கள் கட்சிக்கு கோஷம் போடவும், கொடி பிடிக்கவும் ஆள் கிடைப்பர் என்பது தானே, திராவிட செம்மல்களின் எண்ணம். ஏழை மாணவர்களின் கல்வியை வைத்து, அரசியல் பிழைப்பு நடத்துவதில், அகில உலகிலேயே தி.மு.க.,வை தவிர, வேறு எந்தக் கட்சியும் கிடையாது.
சமூக நீதிக்கு உதாரண மாக, எந்த அமைச்சராவது தி.மு.க.,வில் உள்ளனரா... காட்டுங்கள் பார்க்கலாம். சமூக நீதியை முதல்வரும், மற்ற அமைச்சர்களும், முதலில் தங்கள் குடும்பத்தில் கடைப்பிடித்துக் காண்பித்து விட்டு, அதன்பின் மக்களுக்கு எடுத்துரைத்தால் வரவேற்கலாம்.
ஆக்கப்பூர்வமாக செய்ய வேண்டிய பணிகள் மலை போல் குவிந்திருக்கையில், கவர்னரையும், மத்திய அரசையும் விமர்சிப்பதிலேயே காலத்தை வீணடிப்பது சரியல்ல. தி.மு.க.,வினரின் இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால், மக்கள் செல்வாக்கை இழக்க நேரிடும் என்பதை மறுப்பதற்கு இல்லை.
No comments:
Post a Comment