Friday, July 1, 2022

ஒழுக்கத்தை சலுான் கடையில் தேடுவதா?

 பள்ளி மாணவர்களின் சிகை அலங்காரம் பற்றி, சமீப நாட்களாக பல்வேறு அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக மாணவர்களின், 'புள்ளிங்கோ ஸ்டைல்' பற்றி, ஆசிரியர் சங்கங்களும், காவல் துறையினரும், சலுான் கடைக்காரர்களுக்கு, 'நோட்டீஸ்' கொடுத்து வருகின்றனர்.வேலுார் மாவட்ட கலெக்டர், இன்னும் ஒரு படி மேலே போய், 'சலுான் கடைக்காரர்கள் மீது, சட்ட நடவடிக்கை பாயும்' என்று, எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.பள்ளி மாணவர்களை ஒழுக்க சீலர்களாக மாற்ற வேண்டியது, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரது கடமை. சலுான் கடைக்காரர்களுக்கும் சமூகப் பொறுப்பு உண்டு என்பதை மறுக்க முடியாது. அதே நேரத்தில், ஒரு பள்ளி மாணவனின் சிகை அலங்காரம், எப்படி இருக்க வேண்டும் என்பதை, சலுான் கடைக்காரர் முடிவு செய்வதில்லை; அதை மாணவனோ அல்லது அவனது பெற்றோரோ தான் முடிவு செய்கின்றனர். நிலைமை இப்படி இருக்கையில், சிகை அலங்காரத்திற்கு சலுான் கடைக்காரர் எப்படி பொறுப்பாவார்? ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல, ஆசிரியர்களும், பெற்றோரும் தங்களது தவறுகளை மறைப்பதற்காக, சலுான் கடைக்காரர்கள் மேல் குற்றம் சுமத்துவது, எந்த வகையிலும் நியாயமில்லை. இப்போது மட்டுமல்ல... இதற்கு முன்னரும், பள்ளி மாணவர்களுக்கு பொருந்தாத சிகை அலங்காரங்கள் இருந்துள்ளன. 1980, 90களில், மாணவன் தலையில் கொஞ்சம் முடி அதிகம் இருந்தாலே, பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் பிரம்பை எடுத்து, அடி அடி என்று அடித்து முடியை வெட்டச் சொல்வார். அப்போதெல்லாம், ஆசிரியர்களின் அடிக்கு பயந்தே, மாணவர்கள் அனைவரும் ஒழுக்கத்தை கடைப்பிடித்தனர். தற்போது, ஆசிரியர்களின் கைகளை கட்டிப்போட்டு ஒழுக்கத்தை ஊமையாக்கி விட்டது அரசு. வீட்டிலும், பள்ளியிலும் ஒழுக்கத்தை தொலைத்து விட்டு, அதை சலுான் கடையில் தேடுவது எந்த விதத்தில் நியாயம்? இன்றைய மாணவர்கள் பலர், மொபைல்போன் மற்றும் சினிமா மோகத்திற்கும், மது மற்றும் போதைப் பழக்கத்திற்கும் அடிமையாகி இருப்பது, இந்த சமூகத்தின் அவலமே. எனவே, சீர்கெட்ட சமூகத்தை மாற்ற வேண்டிய பொறுப்பு, ஆட்சியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் தான் உள்ளதே அன்றி, சலுான் கடைக்காரர்களுக்கு அல்ல... உண்மையை உணருங்கள் மக்களே!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...