'செஸ் ஒலிம்பியாட்' போட்டி துவக்க விழாவில் பங்கேற்க வரும் பிரதமரை சந்திக்க, பழனிசாமி - பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளனர். பிரதமர் வருகை, தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் முதன்முறையாக, 'செஸ் ஒலிம்பியாட் - 2022' போட்டிகள் நடத்தப்படுகின்றன. வரும் 28 முதல் ஆக., 10 வரை, மாமல்லபுரத்தில் போட்டிகள் நடக்க உள்ளன. 187 நாடுகளைச் சேர்ந்த, விளையாட்டு வீரர் - வீராங்கனையர்
பங்கேற்க உள்ளனர்.
சமரசம்
போட்டி துவக்க விழா, 28ம் தேதி மாலை, சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடக்க உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, போட்டிகளை துவக்கி வைக்க உள்ளார்.இதற்காக, பிரதமர் 27ம் தேதி தனி விமானத்தில் சென்னை வருகிறார். பின், ஹெலிகாப்டரில் புதுச்சேரி செல்கிறார். அங்கு நடக்கும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதன்பின் சென்னை திரும்பும் அவர், மறுநாள் மாலை, 6:00 மணிக்கு, செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை துவக்கி வைக்கிறார். இடைப்பட்ட நேரத்தில், பல்வேறு பிரமுகர்களை பிரதமர் சந்திக்க உள்ள தகவல் வெளியாகி உள்ளது.அ.தி.மு.க.,வில் ஜெயலலிதா மறைவுக்கு பின், பழனிசாமி - பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனி அணிகளாக செயல்பட்டு வந்தனர். ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள, இருவரும் இணைந்தனர்.
இதற்கு பிரதமர் செய்த சமரசம் தான் காரணம் என்றுகூறப்பட்டது.'அணிகள் இணைந்தபோது, அமைச்சர் பதவியை மறுத்தேன். பிரதமர் வேண்டுகோளை ஏற்றே, துணை முதல்வர் பதவியை ஏற்றேன்' என, பன்னீர்செல்வம் வெளிப்படையாகவே கூறியுள்ளார். தற்போதும் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, கட்சி பிளவு பட்டுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்துள்ளனர். கட்சியின் இடைக்கால பொதுச் செயலராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதாக, அவர் கூட்டிய பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பழனிசாமிக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால், பிரதமரிடம் இருந்தோ, பா.ஜ., மேலிடத்தில் இருந்தோ எந்த வாழ்த்தும் வரவில்லை.
எதிர்பார்ப்பு
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்ததாக, இரு தினங்களுக்கு பின், நிருபர்கள் கேட்டதற்கு பதிலாக தெரிவித்தார். தனக்கு வாழ்த்து தெரிவித்த, அரசியல் கட்சி தலைவர்களுக்கு, பழனிசாமி நன்றி தெரிவித்தார். அதில், அண்ணாமலை பெயர் இல்லை. அதில் இருந்து, பழனிசாமியும், பன்னீர்செல்வமும் தனித்து செயல்படுவதை, பா.ஜ., மேலிடம் விரும்பவில்லை என தெரிய வந்துள்ளது.இந்த சூழ்நிலையில், சென்னை வரும் பிரதமரை, பழனிசாமி - பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.இருவரும் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைத்து, தங்களுக்கு பிரதமர் ஆதரவுதர வேண்டும் என, வலியுறுத்த உள்ளனர். பிரதமர் ஏற்கனவே நடந்ததுபோல், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்துவாரா அல்லது யாரேனும் ஒருவருக்கு மட்டும் ஆதரவு அளிப்பாரா என்பது, அன்றைய சந்திப்புக்கு பின்னரே தெரிய வரும் என்கிறது, பா.ஜ., வட்டாரம்.
முதலில் செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவுக்கு, பிரதமர் வருவதாக இல்லை. தமிழக பா.ஜ., நிர்வாகிகள் வேண்டுகோளை ஏற்றே, அவர் வர உள்ளதாக தெரிகிறது.சென்னை வரும் பிரதமரை, முக்கிய பிரமுகர்கள் பலரை சந்திக்க வைக்க, தமிழக பா.ஜ., நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். எனவே, செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவை விட, பிரதமர் வருகை, தமிழக அரசியலில் எவ்வித மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதே, அனைவருடைய எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
No comments:
Post a Comment