அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமை குறித்த கோரிக்கையால், கட்சி இரண்டாக உடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர்க்க, பொதுச்செயலர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்றும், தொண்டர்கள் ஓட்டளித்து, பொதுச்செயலரை தேர்வு செய்ய வேண்டும் என்றும், புதிய கோஷம் கிளம்பி உள்ளது.
அ.தி.மு.க.,வில் ஜெயலலிதா மறைவுக்கு பின், பொதுச் செயலர் பதவிக்கு பதிலாக, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. அப்பதவிகளுக்கு பொதுச்செயலருக்கு உரிய அதிகாரங்கள் வழங்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கு பொதுக்குழு ஒப்புதல் அளித்தது.
அதன்பின், 2021 டிச., 1ல் நடந்த செயற்குழுக் கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் என, சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது.அதன்படி, தேர்தல் அறிவிக்கப்பட்டு, மீண்டும் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இருவர் உத்தரவின்படி, கட்சி அமைப்பு தேர்தலும் நடத்தி முடிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில், கட்சியில் மீண்டும் ஒற்றைத் தலைமைப் பதவி வேண்டும் என, பழனிசாமி தரப்பினர் போர்க்கொடி துாக்கினர்; பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்தார்.கடந்த மாதம் 23ம் தேதி நடந்த பொதுக்குழுவில், ஒற்றைத் தலைமை குறித்து தீர்மானம் கொண்டு வர, பழனிசாமி தரப்பு முடிவு செய்தது. இதற்கு நீதிமன்றம் சென்று, பன்னீர்செல்வம் தடை பெற்றார்.
இவர்களுக்கு இடையிலான போட்டியில், கட்சி உடையும் சூழல் உள்ளது.இந்த சூழ்நிலையில், 'ஒற்றைத் தலைமை வேண்டும் என்றால், அதை பொதுக்குழு முடிவு செய்யக் கூடாது. எம்.ஜி.ஆர்., வகுத்து தந்த சட்ட விதிகளின்படி, அடிப்படை தொண்டர்களால் பொதுச்செயலர் தேர்வு செய்யப்பட வேண்டும்' என்ற கோஷம் எழுந்துள்ளது.
எனவே, மீண்டும் பொதுச் செயலர் பதவியை உருவாக்கி, தேர்தல் அறிவிக்க வேண்டும். பழனிசாமி, பன்னீர்செல்வம் மட்டுமின்றி, வேறு யார் விரும்பினாலும் போட்டியிட அனுமதிக்க வேண்டும்.வெற்றி பெறுபவர் தலைமைப் பதவிக்கு வரட்டும்; வீண் சண்டை சச்சரவு தேவையில்லை என, ஒரு தரப்பினர் பேசத் துவங்கி உள்ளனர்.
முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் ஆகியோர், 'கட்சிக்கு தேர்தல் அறிவித்து, தலைவரை தொண்டர்கள் தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டும்' என பகிரங்கமாக வலியுறுத்தி உள்ளனர். இந்த கோரிக்கை மேலும் வலுவடையும் என தெரிகிறது.
அ.தி.மு.க., தலைமை பிரச்னை தொடர்பாக, நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இது தொடர்பாக, சென்னையில் நேற்று, பழனிசாமி தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதேபோல், பன்னீர்செல்வமும் தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். தர்மபுரி, வேலுார் மாவட்ட தொண்டர்களை சந்தித்தார்.
No comments:
Post a Comment