Monday, July 4, 2022

நீங்கள் மட்டும் யோக்கியரா திருமா?

 'தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான திரவுபதி முர்மு, பழங்குடியினராக இருந்தாலும், பா.ஜ.,வின் கட்டுப்பாட்டில் உள்ளார்.


அப்துல் கலாமின் பெயர் மட்டுமே முஸ்லிம்; பா.ஜ., அரசு சொன்னதை மட்டுமே அவர் செய்தார். திரவுபதி முர்மு பழங்குடியினர் என்பதால், அவருக்கு ஓட்டு போட ஆசை தான். ஆனால், சர்க்கஸ்காரன் கையில்உள்ள புலி அவர்; பா.ஜ., காட்டும் இடத்தில் கண்ணை மூடியபடியே கையெழுத்து போடுவாரே தவிர, எதிர்க்க மாட்டார்' என்று, பேசியிருக்கிறார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்.

ஜனாதிபதி மற்றும் கவர்னர் பதவி எல்லாம், 'ரப்பர் ஸ்டாம்ப்' பதவி தான். ரப்பர் ஸ்டாம்ப் எதில் இல்லை... எங்கே இல்லை சொல்லுங்கள்... வீட்டை எடுத்துக் கொண்டால், மனைவி சொல்லே மந்திரம் என, பெட்டைக் கோழியாய் அடங்கிக் கிடக்கும் கணவர்கள் கூட ரப்பர்ஸ்டாம்ப் தான்... தாய் சொல்லைத் தட்டாமல், அம்மா கோண்டுகளாக இருக்கும் பிள்ளைகளும் ரப்பர் ஸ்டாம்ப் தான். இப்படி சொல்லியபடியே போகலாம்...

ஜனாதிபதி ரப்பர் ஸ்டாம்பாக இருப்பது ஒன்றும் பெரிய குற்றமல்ல. உங்களுக்கு பிடித்தால் ஓட்டு போடுங்கள்; இல்லையேல், அடுத்த வேட்பாளருக்கு போடுங்கள். அவர் மட்டும் சுயமாகச் செயல்படுவாரா என்ன? மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை பொறுத்தவரை, அவர் ஜாதிக்கு அப்பாற்பட்ட மாமனிதராக இருந்தார் என்பதை உலகமே அறியும்.


latest tamil news



இங்கே குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டு, ஒற்றை சீட்டுக்காக கட்சியையும், கட்சிக் கொள்கைகளையும்-- அடகு வைக்கும் திருமாவளவன் போன்றோர், சாதிக்க பிறந்து, சாதித்து காட்டிய பண்பாளரான அப்துல் கலாம் பற்றி பேசுவது வேடிக்கை.

அந்த குணக்குன்று, தன்னை ஜாதி என்ற சொம்புக்குள் அடக்கிக் கொள்ளவில்லை. காகம் தட்டி விட்ட அகத்தியர் கமண்டலம் போல, பொங்கி பிரவாகமாய் மக்கள் மனதில் இடம் பிடித்திருந்தார். ஜனாதிபதியாக உள்ள முர்மு, சர்க்கஸ்காரன் கையில் உள்ள புலி போல, மத்திய அரசிடம் அடங்கிப் போவதோடு, கண்ணை மூடியபடி கையெழுத்து போடுவாராம். அவர் என்ன தற்குறியா... படிக்காதவரா... முர்மு ஒருவேளை நாளைக்கு அப்படிச் செய்வார் என்றே வைத்துக் கொள்ளுங்கள்... அதேபோன்ற தப்பை, இங்கே தமிழகத்தில் தி.மு.க., உடன் கூட்டணி வைத்திருக்கும் நீங்களும், உங்கள் கட்சியினரும், கூட்டணி கட்சியினரும் செய்யவில்லையா?

நீங்கள் மட்டும் ஸ்டாலின் உத்தரவுக்கு கட்டுப்படாமல், தினமும் தி.மு.க., அரசுக்கு எதிராகவா குரல் கொடுக்கிறீர்கள்? தேர்தலுக்கு தேர்தல் ஒன்றிரண்டு, 'சீட்'களை பெறும் நீங்களே, தி.மு.க.,விற்கும், ஸ்டாலினுக்கும் விசுவாசமாக இருக்கும் போது, நாட்டின் உயரிய பதவியை பெறும் வாய்ப்பை தந்த, பா.ஜ.,வுக்கு தலையாட்டாமல், திரவுபதி முர்மு எதிராக செயல்படுவார் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயமாகும். நீங்கள் யோக்கியராக இல்லாமல், மற்றவரை குறை சொல்வது மட்டும் சரியா? யோசித்துப் பாருங்க!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...