Monday, July 4, 2022

அட அவசர குடுக்கைகளா...

 

😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄
கதவைத் திறந்துகொண்டு இண்டர்வியு ரூமின் உள்ளே தலையை நீட்டினான் ரமேஷ்.
‘பிளீஸ் கம் இன்’ என்றார் ஒருவர்.
போனான்.
‘சிட் டவுன்’
உட்கார்ந்தான்.
அது ஒரு பெரிய ஹால். வலப்பக்கக் கோடியில் பெரிய திரை. சீலிங்கிலிருந்து டிஜிட்டல் புரஜக்டர் தொங்கியது. கீழே உயர்ந்த கார்ப்பெட். நாற்காலிகள் ஒவ்வொன்றும் அக்பர் சக்கரவர்த்தியின் அரியாசனம் போல் இருந்தன. ஸ்பிளிட் ஏஸிக்கள் ஓசையின்றி ஓடிக் கொண்டிருந்தன. இடப் பக்கச் சுவரின் ஓரம் கசக்கிப் போட்ட காகிதம் ஒன்று உறுத்தலாக இருந்தது.
ஒரு நீள்வட்ட மேசையின் எதிர்ப் புறத்தில் நான்கு பேர் உட்கார்ந்திருந்தார்கள். ரமேஷ் வருவதைப் பார்த்ததும் இடது கோடியில் இருந்தவரைப் பார்த்து கொஞ்சம் பவ்யமாக மற்ற மூவரும் ‘ஐயா, நீங்க கேக்கறீங்களா?’ என்பது போல் வளைந்தார்கள்.
அதற்கு அவர் ‘இட்ஸ் ஓக்கே.. நீங்க ஆரம்பியுங்க’ என்பது போல் ஜாடை காட்டிவிட்டு கொஞ்சம் தளர்ந்து உட்கார்ந்து கொண்டார்.
வலக் கோடியில் இருப்பவர் ஆரம்பித்தார்.
‘எப்படி இருக்கு இந்த அட்மாஸ்பியர்?’ என்றார்.
‘இது ஒரு நல்ல கான்ஃபரன்ஸ் ஹால். புரஜக்டர், ஸ்க்ரீன், வொய்ட் போர்ட், மார்க்கர், சவுண்ட் புரூஃபிங், வசதியான நாற்காலி, உயர்ந்த கார்ப்பெட். மனசுக்கு இதமான அட்மாஸ்பியர்’ என்றான் ரமேஷ்.
‘இவ்வளவு நல்ல அட்மாஸ்பியர்ல அந்த கசக்கிப் போட்ட காகிதம் உறுத்தலா இல்லையா? அதை ஏன் சொல்லல்லை?’
‘கவனிச்சேன் சார் அதை. அந்தக் காகிதம் அதோ உட்கார்ந்திருக்காரே அவரோட ஸ்க்ரிப்ளிங் பேடோட முதல் பக்கம். கிழிக்கிறப்போ கொஞ்சம் கோணலா கிழிச்சிருக்காரு. பேடிலே முக்கோணமா கொஞ்சம் பாக்கி இருக்கு அந்தப் பக்கத்தில். நான் பாட்டுக்க சுத்தமா இருக்கிற இந்த ரூம்ல யாரோ ஒரு மடையன் குப்பை போட்டிருக்கான்னு சொன்னா அவர் மனசு புண்படும்ன்னுதான் சொல்லல்லை’
நாலு பேரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
‘சரி, வெளியில ஒரு அம்மா தரையை துடைச்சிக்கிட்டு இருக்கும், அதைக் கூப்பிட்டு குப்பையை எடுத்துப் போடச் சொல்லுங்க’ என்றார் வலது.
‘அந்தம்மா பேர் என்ன சார்?’
மறுபடியும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டார்கள்.
‘இட்ஸ் ஓக்கே. உங்க யாருக்கும் அந்தம்மா பேரு தெரியாதுன்னு நினைக்கிறேன்’ என்றவன் எழுந்து நடந்து போய் கதவைத் திறந்து வெளியில் உட்கார்ந்திருந்த பியூனிடம் ‘அந்தம்மா பேர் என்ன?’ என்று கேட்டான். பியூன் சொன்னான்.
‘பவானி, இங்கே வாம்மா’ என்று கூப்பிட்டான். சுத்தம் செய்யச் சொன்னான். மறுபடி வந்து நின்றான்.
‘சிட் டவுன். ஏன் நிக்கறீங்க?’
உட்கார்ந்தான்.
‘எல்லா விஷயத்தையும் நல்லா கவனிக்கிறீங்க. வேலைக்காரர்களைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவது எவ்வளவு முக்கியம்ன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கு. இன்னும் ஒரே ஒரு கேள்வி. அதுக்கும் சரியா பதில் சொல்லிட்டீங்கன்னா உங்களுக்கு நூறு மார்க்’
‘கேளுங்க சார்’
‘எங்க நாலு பேர்ல ஒருத்தர் தொழிற்சாலை முதன்மை அதிகாரி, ஒருத்தர் பர்ஸான்னல் டிப்பார்ட்மெண்ட் ஹெட், ஒருத்தர் ஃபைனான்ஸ் ஹெட், ஒருத்தர் உங்க பாஸ். யார் யார் என்னென்னன்னு சொல்லல்லைன்னா கூட பரவாயில்லை. தொழிற்சாலை ஹெட் யாருன்னு மட்டும் சொல்லுங்க பார்ப்போம்?’
‘நான் வரும்போது நீங்க மூணு பேரும் இடது கோடியில் இருக்கிறவர் கிட்டே ரொம்ப பவ்யமா நடந்துகிட்டீங்க. அது என்னை கன்ஃப்யூஸ் பண்ணத்தானே ஒழிய அவர் ஃபேக்டரி ஹெட் இல்லை. நீங்களும் ஃபேக்டரி ஹெட் இல்லை. நீங்கதான் பாஸ். நான் சரியா பதில் சொல்லச் சொல்ல உங்க முகத்தில் பெருமை தாங்கல்லை. எப்படிப்பட்ட ஆளை செலக்ட் பண்ணியிருக்கேன் பார் என்கிற பெருமை தெரியுது.
மீதம் ரெண்டு பேர் அமைதியா இருக்காங்க. அவங்கள்ள ஒருத்தர்தான் ஃபேக்டரி ஹெட். நீங்க எல்லாருமே ஒரு ஸ்க்ரிப்ளிங் பேட் வச்சி ஏதோ நோட் பண்ணிக்கிட்டே இருக்கீங்க. அந்த ரெண்டு பேர்ல ஒருத்தர் இதுவரை எதுவுமே எழுதிக்கல்லை. அவர் ஃபைனான்ஸ் ஹெட்டா இருப்பார். சம்பளம் பேசும்போதுதான் எழுதுவார். ஆகவே ரெண்டாவதா இருக்கிறவர்தான் ஃபேக்டரி ஹெட். இடது கோடியில் இருக்கிறவர் பர்ஸான்னல் மேனேஜர். அவர்தான் இந்த நாடகத்துக்கெல்லாம் டைரக்டர்.
‘ஸ்ப்ளெண்டிட்.. உங்க ஆப்ஸர்வேஷன் பவர் பிரமாதம். ஒரு மெய்ண்ட்டனன்ஸ் ஆளுக்கு இருக்க வேண்டிய தகுதி அது. வெய்ட் பண்ணுங்க. வீ வில் லெட் யு நோ’
‘சார், புது விதமான இண்ட்டர்வியூ சார். வழக்கமா வந்ததும் ஃபைலை வாங்கிப் பார்க்கிறது. டெல் அஸ் சம்திங் அபௌட் யூ மிஸ்டர் ரமேஷ்ங்கிறது. இதெல்லாம் எதுவுமே இல்லை. டக்குன்னு ஆரம்பிச்சிட்டீங்க. எனக்கும் ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது. சூப்பர் சார்’
‘தேங்க் யூ. பட், பேரென்ன சொன்னீங்க, ரமேஷா? நீங்க சுந்தரேசன் இல்லையா?’
‘அவர் வெளியில வெய்ட் பண்றார் சார்’
‘பின்னே நீங்க?’
‘நான் கேன்டீன்ல புதுசா வேலைக்குச் சேர்ந்திருக்கேன். கான்ஃபரன்ஸ் ஹாலுக்கு எத்தனை செட் டீ ஸ்னாக்ஸ் அனுப்பணும்ன்னு பார்த்துகிட்டு வரச் சொன்னாரு சூப்பரவைசர். எட்டிப் பாத்தேன், உள்ளே கூப்பிட்டீங்க, உக்காரச் சொன்னீங்க, கேள்வி எல்லாம் கேட்டீங்க. ஜாலியா இருந்திச்சு சார்’....!!
😂😂😂😂

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...