அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்டுள்ள, 'சீல்' அகற்றப்பட்டு, மீண்டும் திறக்க அனுமதிப்பது குறித்த வழக்கில், உடனடியாக விசாரிக்க அவசரமில்லை என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழக்கு எண் பதிவு செய்து, வரிசைப்படி வரும் போது விசாரிப்பதாகவும் கூறியுள்ளது. உயர் நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக இருந்தாலும், வரிசைப்படி வழக்கு விசாரணை என்பது, அ.தி.மு.க., ஆபீஸ் திறப்பு குறித்த வழக்குக்கு மட்டும் தானா அல்லது இனி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அத்தனை வழக்குகளுக்குமா என்ற ஐயப்பாடு எழுவதை மறுப்பதற்கில்லை.
'வரிசை முறையே சிறந்த முறை' என்பது, அனைத்து இடங்களிலும் எழுதி வைக்கப்பட்டிருக்கும் ஒரு அருமையான அறிவிப்பு. ஆனாலும், முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதே, மில்லியன் டாலர் கேள்வி.பஸ் மற்றும் ரயில் நிலையங்களில், பயணம் செய்ய காத்திருக்கும் பயணியர், வாகனம் வரும் வரை, சமர்த்து பிள்ளைகளாக வரிசையை, 'மெயின்டெய்ன்' பண்ணிக் கொண்டிருப்பர். வண்டி வந்து நின்றதும், வரிசையாவது, வெங்காயமாவது என வரிசையிலிருந்து விலகி, ஒலிம்பிக் வேகத்தில் இருக்க இடம் பிடிக்க ஓடுவர். கோவில்களிலும் அப்படியே.
பொது தரிசன வரிசையில், பக்தர்கள் வரிசையாக மணிக்கணக்கில் காத்திருப்பர். சிலர் சிறப்பு தரிசன வழியில், ஒரு குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி, வரிசையில் காத்து கொண்டிருப்போரின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டு, சுவாமி தரிசனம் செய்து விட்டு வருவர். குறிப்பாக, அரசியல்வாதிகளின் வழக்குகளுக்கு நீதிமன்றங்கள் நேரம், காலம் பார்ப்பதில்லை. உறங்கும் நீதிபதியை கூட எழுப்பி உட்கார வைத்து, உத்தரவுகள் பெற்று வருவது சர்வ சாதாரணம். மெரினா கடற்கரையில், கருணாநிதி உடலை அடக்கம் செய்வதற்கான உத்தரவு நள்ளிரவில் தான் பிறப்பிக்கப்பட்டது. அ.தி.மு.க., பொதுக்குழு விவகாரத்தில், பன்னீர்செல்வம் தொடுத்திருந்த வழக்கில், காலை, 9.00க்குத் தான் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 'பழனிசாமி குழுவினர் பொதுக்குழு நடத்த தடையில்லை' என்று, அதில் தெரிவிக்கப்பட்டது.
அப்படிப்பட்ட நிலையில், இந்த வரிசைப்படி உத்தரவானது, அ.தி.மு.க., தலைமை அலுவலக திறப்பு தொடர்பான வழக்குக்கு மட்டும் தானா அல்லது இனி உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்படும் வழக்குகள் அனைத்துக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. வரிசைப்படி வழக்கு விசாரணை திட்டவட்டமாக தொடருமா இல்லை முடியுமா?
No comments:
Post a Comment