ஆடிப்பெருக்கு மதப்பண்டிகையா?
~
ஆடிப்பெருக்கு விழா குறித்து தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை ஆணையர் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டிருக்கிறார். அந்தக்குறிப்பு, ஆடிப்பெருக்கை இந்துமதப் பண்டிகையாகவும், காவிரியை,
சரஸ்வதி நதியைப்போல் ஒரு புராணிக நதியாகவும் சித்தரிக்கிறது.
தமிழர் வாழ்வியலுக்கும் இலக்கணம் கண்டவர். அவர்மீது எண்ணற்ற பண்பாட்டுத் தாக்குதல்கள். இத்தாக்கு
தல்கள் அவர்களது பண்டிகைகளையும் விட்டுவைக்கவில்லை.
அவர்கள் தீபமேற்றி கொண்டாடியதை தீபாவளி, கார்த்திகை தீபம் என்றார்கள்.
அதுபோலவே ஆடிப் புதுவெள்ளத்தில் அவர்கள் மகிழ்ந்ததே ஆடிப்பெருக்கு.
வழக்கம்போல் அதை மகாபாரதத்துடன் இணைத்து கதைகட்டினார்கள். ஆடிப்
பெருக்கு என்பது ஆற்றில் வருகிற புது நீரை தமிழ்க்குடிகள் வரவேற்கிற நிகழ்வு.
பரதவர், கோசர், ஆவியர், ஓவியர், ஆயர், வேளிர், ஆண்டார், வில்லோர், மறவர்,மழவர், கொங்கர், குறவர், மலையர், குடவர், புலியர், புலையர், கடம்பர், கள்வர் உள்ளிட்ட பதினெண் குடிகள் கொண்டாடுகிற பண்டிகை என்பதால் பதினெட்டாம் பெருக்கு என்றும் அழைப்பதுண்டு.
ஆடியில் பெருகிய நீர்நிலைகளை வழிபட்டதாலும் அது ஆடிப்பெருக்கு!
ஒரு இனத்தை அழிப்பதற்கு அதன் பெருமிதமான நினைவுகளை அழிக்கிறது அதிகாரம்.
இந்த வகையில்தான் நாம் ஆடிப்பெருக்கை வரவேற்க வேண்டும்.
எமது பால்ய பருவத்தில் சிறுதேரோட்டி, இவ்விழா நாளில்தான் அன்னப்பறவை
கள் போல வெள்ளாற்றை நோக்கி நாங்கள் நடந்தோம். எங்கள் கைகளில் வெல்லத்தோடு பிசைந்த பச்சரிசி அலுமினியத் தூக்கில் இனித்தது.
கோடை தணிந்து வயல்களில் புது நடவு பச்சைகட்டி கண்களுக்கு விருந்தளிக்கும். வயற்காடெங்கும் பூத்திருந்த வெண்ணிறக் குருகுகள் உழுகுடியின் வளம்பாடும். கண்களில் காதல் வழிய கனவுகள் நிறைவேறிய இன்பக்கதை
களைப் பேசியபடி எம்முடன் புதுமண
மானவர்கள் வருவார்கள். தாங்கள் மாற்றிக் கொண்ட மாலைகளை ஆற்றின் பெருக்கில் விட்டு தம்குடி பெருக வேண்டுவர்.
மண்சட்டிகளில் கொண்டுவந்த முளைப்பாரியை நீரில் விட்டு கருவுற வேண்டியும் நிலத்தில் மகசூல் பெருகவும் வேண்டுவர். இயற்கையன்னையிடம் வேளாண்குடிகள் வைக்கும் அர்த்தம் நிறைந்த பிரார்த்தனைகளவை!
'வசையில்புகழ் வயங்குவெண்மீன் திசைதிரிந்து தெற்குஏகினும் தற்பாடிய தளியுணவின் புள்தேம்பப் புயல்மாறி வான்பொய்ப்பினும் தான்பொய்யா மலைத்தலைய கடற்காவிரி'
காவிரி குடகுமலையில் தோன்றுவதை இப்படி, தெளிவாகப் பாடுகிறது பட்டினப்பாலை.
'புனிறு திர்குழவிக்கிலிருந்து பசும் பயிறுவளர்த்து பொன்கதிருக
ஆக்குபொன் கொழிக்கும் காவேரியே'
எனப் புறநானூறும்,
'புனலாடு மகளிற்கதுமெனக் குடையக்
சூடு கோடாக பிறக்கி நாடொறுங்
குன்றெனக்குவை இயக்குன்றாக் குப்பை
சாலிநெல்லின் சிறை கொள்வேலி
காவேரிபுரக்கு நாடுகிழவோனே.'
என பத்துப்பாட்டும்
'உழவ ரோதை மதகோதை உடைநீ ரோதை தண்பதங்கொள் விழவ ரோதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி'
'மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடை அது போர்த்துக் கருங்கயற்கண் விழத்தெல்கி நடந்தாய் வாழி காவேரி'
என சிலப்பதிகாரமும் ,
போற்றிய காவிரியின் கரையெங்கும் தமிழர் நிறைந்து கொண்டாடும் திருநாளே ஆடிப்பெருக்கு.
ஆனால், தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறையோ ,
'செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்கும் கஞ்சவேட்கையிற் ‘காந்தமன்’ வேண்ட அமரமுனிவன் அகத்தியன் தனது
கரகம் கவிழ்த்த காவிரிப்பாவை
பொங்கு நீர்பரப்பப் பொருந்தித்தோன்ற'
என மணிமேகலை கூறிய புராணிகக் கதையை காவிரியின் தோற்றமாகக் சித்தரிக்கிறது.
குபேரன் மகள் காவிரியை இன்று
மணல் வியாபாரிகள் கொள்ளையடித்து பாலையாக்கியிருக்கிறார்கள். தற்கொலை செய்த டெல்டா உழுகுடிகளின் பிணங்கள் காவிரிக்கரைகளில் புதைக்கப் பட்டிருக்கின்றன.
இந்நிலையில் காவிரியை, ஆடிப்பெருக்கை, இந்து மதத்தோடு இணைத்து புனிதப்படுத்துவதில்
எவ்வித அர்த்தமும் இல்லை.
கன்னட காவிரிக்கரை பகுதிகளில் சமணம் தழைத்திருந்தது.
தமிழக காவிரிக்கரை நாகரிகத்தில் பரவிக்கிடந்ததும் இந்து பண்பாடு அன்று. நாட்டார் வழக்காறுகளும், சைவ, பௌத்த, சமணப் பண்பாடுகளுமே விரவிக் கிடந்தன. இத்தகைய பன்முகப் பண்பாட்டு அடையாளமே ஆடிப்பெருக்கு.
இதை இந்து மதப் பண்டிகையாகச் சித்தரிக்கும் தமிழக இந்து அறநிலையத் துறையின் செயல் கண்டனத்துக்குரியது!
No comments:
Post a Comment