திருமணமாகி, 35 ஆண்டுகளில் நினைக்காத மனைவியை, அவள் இறந்த இந்த மூன்று மாதங்களில் அதிகப்படியாக நினைத்துக் கொண்டிருக்கிறார் ராமலிங்கம்.
ஆரம்ப காலத்திலிருந்தே ராமலிங்கத்திற்கு, மனைவி லட்சுமி மீது எந்தவித ஈடுபாடும் இருந்ததில்லை. 'மனைவி என்பவள், தன் தேவைகளை நிறைவேற்றி, சேவகம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட வேலையாள்...' என்ற நினைப்பில் தான், இத்தனை ஆண்டுகளும் வாழ்ந்திருந்தார்.
ஆனால், மனைவி இறந்த பின், இந்த மூன்று மாதங்களில், அவளைப் பற்றி நினைக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் அமைந்து, மனைவியின் செயல்கள் ஒவ்வொன்றிற்கும் அர்த்தங்கள் புரிய ஆரம்பித்தன.
அதிலும், இன்று அவருடைய மருமகள் நடந்து கொண்ட விதத்தை நினைக்கையில், 'நாம் ஏன் இன்னும் உயிருடன் இருக்க வேண்டும்... நமக்கு சீக்கிரம் சாவு வந்து விடக் கூடாதா...' என்று எண்ணத் துவங்கி விட்டார் ராமலிங்கம்.
ராமலிங்கத்திற்கு உயர் ரத்த அழுத்தம் இருந்ததால், உணவில் பாதி உப்பு தான் சேர்க்க வேண்டும் என கூறியிருந்தார் டாக்டர். அதனால், கடந்த 15 ஆண்டுகளாகவே சமையலில் உப்பின் அளவை குறைத்து, அப்பளம், ஊறுகாய், கருவாடு போன்ற உப்பு அதிகமான பொருட்களை தவிர்த்து, அவரது ரத்த அழுத்தம் சீராக இருக்கும்படி வைத்திருந்தாள் லட்சுமி.
மதியம் மருமகள் சமைத்திருந்த மீன் குழம்பில் உப்பும், காரமும் சற்று தூக்கலாக இருந்தது. அதனால், பிரஷர் கூடிடுமோ என்ற பயத்தால், ''ஏம்மா... குழம்புல உப்பை கொஞ்சம் குறைச்சு போடக் கூடாதா...'' என்றார்.
''குழம்பை சாதத்துல பிரட்டி சாப்பிட்டா சரியாத் தான் இருக்கும்; நீங்க ரசம் மாதிரி ஊத்தி சாப்பிட்டா, உப்பு தூக்கலாத் தான் தெரியும்,''என, வெடுக்கென கூறினாள் மருமகள்.
இதைக் கேட்டவுடன் ராமலிங்கத்திற்கு, மனைவியின் நினைப்பு வந்தது. பார்த்துப் பார்த்து சமைத்தாலும் என்றாவது ஒருநாள் சரியாக சமைக்கவில்லை என்றால், சாப்பாட்டு தட்டை தூக்கி எறிவார். அப்போது கூட எதுவும் பேசாமல், மவுனமாக கண்ணீர் விடுவாள் லட்சுமி.
'என்ன செய்றது... எதுவும் பக்கத்துல இருக்குற வரை அதோட மதிப்பு தெரியாது; அது, நம்மை விட்டு விலகிய பின் தான், அதோட அருமை தெரியும்...' என்று நினைத்து, சாப்பிடாமல் எழுந்து, கை கழுவினார். வீட்டிலிருந்தால் கோபத்தில் ஏதாவது பேச வேண்டி வரும் என்பதால், சட்டையை மாட்டி வெளியில் புறப்பட்டார்.
அப்போது, உள் அறையில் மகனும், மருமகளும் பேசுவது ராமலிங்கத்தின் காதில் விழுந்தது.
''தேவி... அப்பாவுக்கு பிளட் பிரஷர் இருக்குன்னு தெரியுமில்ல... அவருக்கு, உப்பு கம்மியா போட்டு சமைச்சு, கிண்ணத்தில் எடுத்து வச்சிட்டு, மீதி குழம்பில, தேவையான உப்பை போடலாம்ல,'' என்றான் மகன்.
''என்ன விளையாடுறீங்களா... கிண்ணத்தில அவருக்கு எடுத்து வச்சுட்டா, நாளைக்கு, நான் அளவு சாப்பாடு போடறதா பேசுறதுக்கா... இந்த பேச்செல்லாம் என்கிட்ட வச்சுக்க வேணாம். வயசான மனுசனுக்கு வாயையும், மனசையும் கட்டத் தெரியணும்; இல்லன்னா அவருக்கு மட்டுமில்ல, நமக்கும் சேர்த்து தான் இம்சை,'' என்றாள்.
தேவியின் பேச்சு மீண்டும் மனைவியை நினைவூட்டியது. 'நான் சாப்பிட்டு முடிச்ச பிறகு தானே புள்ளைகளுக்கு கூட சாப்பாடு போடுவா... நான் வயிறார சாப்பிடணும் என்பதற்காகத் தான் அது மாதிரி நடந்துக்கிட்டான்னு புரிஞ்சுக்காம போயிட்டேனே...' என்று தன்னைத் தானே நொந்து கொண்டவர் வாசலில் இறங்கி நடந்தார்.
ராமலிங்கம் தன் மனைவியை ஒரு பொருட்டாக நினைத்ததுமில்லை; மதித்ததும் இல்லை. எந்தக் காரியம் என்றாலும், அதன் முடிவெடுக்கும் அதிகாரம் தனக்கு மட்டுமே உரியது என்ற மனப்பாங்கை கொண்டிருந்தார்.
மனைவி இருந்த வரை ராஜா மாதிரி வாழ்ந்தவருக்கு, அவள் இறந்த பின் ஏற்பட்ட சறுக்கல், அதிர்ச்சியைத் தந்தது. 'சுயமரியாதையையும், கவுரவத்தையும் இழந்து, உணவுக்காக மகனை அண்டி வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டதே... இப்படிப்பட்ட வாழ்க்கைய வாழ்ந்து தான் ஆகணுமா...' என்ற கேள்வி மனதில் எழுந்தது.
மனைவியின் நினைவுகளுடனும்,
சுயபச்சாதாபத்துடனும், கால் போன போக்கில் நடந்து சென்றவர், சிவன் கோவிலில் போய் அமர்ந்தார்.
நினைவு தெரிந்த நாளிலிருந்து ஒருநாள் கூட ராமலிங்கம் கோவிலுக்கு வந்தது கிடையாது. ஆனால், லட்சுமியோ நாள் தவறாமல் கோவிலுக்குப் போவாள்.
கோவிலில் நுழைந்தவுடன், மனதில் ஒருவித அமைதி ஏற்பட்டது. 'இந்த அமைதியை தேடித்தான் லட்சுமி தினமும் கோவிலுக்கு வந்தாளோ...' என, நினைத்தார்.
ராமலிங்கம் எப்பொழுதும், யாருடனும் ஒத்துப் போக மாட்டார். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் எனும் கொள்கையுடையவர்.
ஒருமுறை, தான் வெளியில் சென்று வீட்டிற்குள் நுழைந்ததை அறியாமல், மகள் பேசிக் கொண்டிருந்தாள்...
'ஏன்ம்மா நீ, அப்பாவுக்கு இப்படி பயந்து நடுங்குற... தைரியமா அவரை எதிர்த்துப் பேசும்மா... நானா இருந்தா இந்நேரம் விவாகரத்து வாங்கிட்டு போயிருப்பேன்...' என்றாள்.
அதற்கு லட்சுமி, 'உங்க அப்பா குணம் அவ்வளவு தான். அவர் தான் என்னைப் புரிஞ்சுக்கல; ஆனா, நான் அவரை நல்லா புரிஞ்சு வச்சிருக்கேன்...' என்றாள்.
'ஆமா... என்னத்த புரிஞ்சு வச்சிருக்கீயோ... ஆனா, ஒண்ணு மட்டும் தெரிஞ்சுக்க... குட்ட குட்ட குனியிறவனும் முட்டாள்; குனிய குனிய குட்றவனும் முட்டாள்...' என்றாள் மகள்.
இதைக் கேட்ட ராமலிங்கத்திற்கு கோபம் தலைக்கேறி, மகளை அடித்து விட்டார். தடுத்த மனைவியையும், விட்டு வைக்கவில்லை.
இச்சம்பவம் நடந்ததிலிருந்து, மகள் தன் தந்தையிடம் பேசுவதை நிறுத்தி விட்டாள். அவரும் அதைப் பற்றி கவலைப்படவில்லை. ஆனால், லட்சுமி தான் இருவரையும் எப்படியும் பேச வைத்து விட வேண்டும் என்று பிரயத்தனம் செய்தாள். ஆனால், அவள் முயற்சி கடைசி வரை பலிக்கவில்லை.
மனைவி இறந்த பின், ராமலிங்கத்தை யார் கவனித்துக் கொள்வது என்ற பேச்சு எழுந்தபோது, மகள் மறுத்து விட்டாள். 'வேணும்ன்னா செலவுக்கு மாசாமாசம் பணம் அனுப்புறேன்; இதை செய்யணுங்கிற அவசியம் எனக்கு இல்ல. ஆனாலும், அண்ணனோட சுமைகள்ல பங்கெடுத்துக்க விரும்புறேன். அதனால தான்...' என்று கூறி சென்றவள், தன் அப்பாவிடம் இது நாள் வரை போனில் கூட பேசியதில்லை.
'மகள் தன்னிடம் பேசாமல் இருப்பது கூட, 'அம்மாவ புரிஞ்சுக்காம அப்பா நடந்துக்கிறாரே' என்கிற ஆற்றாமை தானோ...' என்ற எண்ணம், இப்பொழுது அவர் மனதில் ஓடியது.
அச்சமயத்தில், யாரோ விசும்பி அழும் சத்தம் ராமலிங்கத்தின் நினைவுகளைக் கலைத்தது.
கோவில் பிரகாரத்தில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணி, தன் மகனிடம் அழுது கொண்டே பேசியது காதில் விழுந்தது.
''கண்ணா... உன் அப்பா ஏன்டா இப்படி இருக்காரு? என்னால பொறுத்துக்க முடியலடா... உங்க அப்பாவுக்கு முன்னாடி நான் போய் சேர்ந்திரணும்; அப்பத்தான், என்னோட அருமை உங்க அப்பாவுக்கு தெரியும்,'' என்றார் விசும்பிக் கொண்டே!
இவரைப் போல தான், என் லட்சுமியும் அழுது புலம்பியிருப்பாளோ... அதனால் தான், சீக்கிரம் என்னை விட்டு போய் விட்டாள் போல!
மனைவி உயிருடன் இருக்கும் வரையில், அவளைப் புரிந்து கொள்ளாததை நினைத்து, ராமலிங்கத்திற்கு வருத்தம் ஏற்பட்டது.
'இனி, எக்காரணம் கொண்டும் சீக்கிரம் சாகணும்ன்னு நினைக்கக்கூடாது; வாழும் ஒவ்வொரு நிமிடமும், என் மனைவி என்ற தெய்வத்தை நினைத்து உருகணும். இது, அந்த தெய்வத்திற்கு நான் செலுத்தும் பிராயச்சித்தம் மட்டுமல்ல, நன்றிக் கடனும்...' என, நினைத்தவராய் வீட்டிற்குப் புறப்பட்டார்..
No comments:
Post a Comment