Monday, July 18, 2022

எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் போட்டி போட்டு நிர்வாகிகளை நீக்குவதால் அ.தி.மு.க. தொண்டர்கள் குழப்பம் .

 அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் இடையே விரிசல் அதிகரித்துள்ளது. கடந்த 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அன்றைய தினம் அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் சென்றபோது மோதல் வெடித்தது. கல்வீச்சு மற்றும் கத்திக்குத்து சம்பவங்களும் அரங்கேறின. பூட்டி கிடந்த அ.தி.மு.க. அலுவலகத்தை உடைத்துக்கொண்டு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் உள்ளே புகுந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி சிறப்பு தீர்மானமும் கொண்டு வரப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் நீக்கப்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஓ.பன்னீர்செல்வம் என்னை நீக்குவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் இல்லை என்றும், அவரை கட்சியில் இருந்து நான் நீக்குகிறேன் என்றும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் 2 மகன்கள், 5 மாவட்டங்களைச் சேர்ந்த 6 மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான முன்னணி நிர்வாகிகள் என 22 பேரை அதிரடியாக நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோரை நீக்குவதாக அறிக்கை வெளியிட்டார். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு இப்படி நிர்வாகிகளை நீக்கி வருவது அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வலைதளங்களில் காரசார விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். "பேசாமல் எல்லோரையும் நீக்கி விடுங்கள் பிரச்சினையே இல்லை" என்பது போன்ற கருத்துக்களை தொண்டர்கள் பதிவிட்டு உள்ளனர். இப்படியே போனால் எப்படி? என்று தீரும் இந்த பிரச்சினை என்றும் தொண்டர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பெரும்பாலான நிர்வாகிகள் வரிசை கட்டி நிற்கிறார்கள் என்றும், இதனால் கட்சி எடப்பாடி பழனிசாமி வசமே உள்ளது என்றும் அவரது ஆதரவாளர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். தேர்தல் கமிஷனில் இந்த பிரச்சினைக்கு முடிவு எட்டப்படும் வரையில் இப்படியேதான் பிரச்சினை ஏற்பட்டுக் கொண்டிருக்கும் என்கிற கருத்துக்களும் பதிவிடப்பட்டு வருகின்றன. அ.தி.மு.க.வில் நிலவும் இந்த உள்கட்சி விவகாரம் எத்தனை மாதங்களுக்கு நீண்டு கொண்டே செல்லுமோ என்பதே இப்போது மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...