எறும்பு ஊறக் கல்லும் தேயும்’ என்கிறார்களே... சத்தியமாக இது நிஜமில்லை. ஆனால் இந்த எறும்புகள் தமது புற்றிலிருந்து
கிளம்பி எத்தனை தூரத்திற்கு இரை தேடிச் சென்றாலும் மாலையில் மறுபடியும் அதே ரூட்டில் தடம் கண்டு புற்றுக்கு வந்து சேர்ந்துவிடும். ஆறறிவு படைத்த நமக்குக் கூட ஒரு அடர் கானகத்தில் இது சாத்தியமில்லை. ஆனால் இந்த புத்திசாலி எறும்புகள் தாம் புற்றிலிருந்து புறப்படும்போதே, போகும் வழித்தடம் நெடுக திரும்பி வருவதற்கான பல்வேறு அடையாளங்களை விட்டுச் செல்லுகின்றன. அதைப் பின்பற்றியே மாலையில் மீண்டும் புற்றுக்குத் திரும்பி விடுகின்றன. இது எறும்புகளின் ஆச்சரியமூட்டும் அறிவியல் நுட்பம்!
உலகத்தில் 12 ஆயிரம் எறும்பு இனங்கள் இருப்பதாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஆயினும் உண்மையில் 22 ஆயிரம் இன எறும்புகள் பூமியில் இருப்பதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். அநேகமாக மற்ற இனங்கள் காலப்போக்கில் வகைப்படுத்தப்படக் கூடும். எறும்புகள் தங்கள் சக அங்கத்தினர்களிடமிருந்து உடலமைப்பில் மிகவும் வேறுபடுகின்றன. குறிப்பாக எறும்புகளின் தலையில் உள்ள நுகர் ஆன்டெனாக்களில் மடிந்து வளையும் மூட்டுகள் இருக்கின்றன. இது வேறெந்தப் பூச்சிகளுக்கும் இல்லை.
எறும்புகளின் உடலமைப்பு மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது தலை, மிசோஸோமா எனும் மார்புப் பகுதி மற்றும் மெட்டாஸோமா எனும் வயிற்றுப்பகுதி. இந்த மூன்று பிரிவுகளுக்கு மேலாக அதன் கெட்டியான இடுப்புப் பகுதி பெட்டியோல் என்று அழைக்கப்படுகிறது. எறும்புகளின் சின்னஞ்சிறு தலையில் நிறைய கணினி யுக்திகள் இருக்கின்றன. இதன் கண்கள் மிக மெல்லிய லேயர்களால் ஆன ஒரு காம்பவுண்ட் கண்ணாக அமைந்துள்ளன. இதன் மூலம் கிடைக்கும் பார்வையால் மெல்லிய இயக்கம், போக வேண்டிய திசை போன்றவற்றைத் தெளிவாகக் காட்டினாலும் கூட, நல்ல தீர்க்கமான பார்வையை இக்கண்கள் கொடுப்பதில்லை. இதனால் எறும்புகள் சற்றும் சோர்ந்து போவதில்லை. கண்களின் வேலையை எறும்புகளின் தலையில் உள்ள உணர் கொம்புகள் செய்துவிடுகின்றன.
இந்த உணர்கொம்புகள் இடையில் முழங்கால் போன்ற வளையும் முட்டிகளோடு இருக்கின்றன. இவை ரசாயனப் பொருட்கள், காற்றின் வேகம், மற்றும் ஒவ்வாத அதிர்வுகள் போன்றவற்றை எளிதில் கண்டறிந்து எறும்புகளை எச்சரிக்கின்றன. இது இயற்கை எறும்புகளுக்குக் கொடுத்த ராடார் டெக்னாலஜி. மனிதர்களுக்கு இருப்பது போல சுவாசிப்பதற்கு ஏற்ற நுரையீரல்கள் எறும்புகளுக்கு இல்லை. நுரையீரல்கள் இன்றி சுவாசிக்கும் சாதுர்யத்திற்கு ஏற்ப எறும்புகள் சில உபரி சமாசாரங்களைக் கொண்டிருக்கின்றன. அதாவது இவற்றின் கெட்டியான உடலின் மேற்புறத் தோலில் எண்ணற்ற சின்னஞ்சிறு துவாரங்கள் இருக்கின்றன. இவற்றிற்கு ‘ஸ்பைரக்கில்’ என்று பெயர்.
இந்த ஸ்பைரக்கில் துவாரங்களின் வழியேதான் ஆக்ஸிஜன் உள்ளே செல்வதும், வேண்டாத கார்பன்-டை-ஆக்ஸைடு வாயு வெளியேறுவதும் நிகழ்கிறது. மார்புப் பகுதியில் அமைந்து இருக்கும் இறக்கைகள் எல்லா எறும்புகளுக்கும் இருப்பதில்லை. இனவிருத்தி செய்யும் ஆண்களுக்கும் புற்றின் மகாராணிக்கும் மட்டுமே பறக்கும் ஆற்றல் கொடுக்கும் இறக்கைகள் இருக்கின்றன. அதுவும் ராணி எறும்புகள் காதல் கொண்டு களிப்புற்று, சினையுற்ற உடனே இறக்கைகளை வேண்டாமென உதிர்த்து விடுகின்றன.
எறும்புகளின் மூன்றாவது கடைப்பகுதியான‘மெட்டாஸோமா’ என்னும் வயிற்றுப் பகுதியில்தான் இனவிருத்தி மற்றும் உடற்கழிவு மண்டலங்கள் அமைந்துள்ளன. கூடவே வித்தியாசமாக சுவாச மண்டலமும் அமைந்துள்ளது. இது ஒரு அபூர்வ அமைப்பு! எத்தனை உடல் தகவு களைக் கொண்டிருந்தாலும் இந்த மிகச்சிறு எறும்புகளின் வாய்த் தாடைகள் மிகவும் வலுவாகவே அமைந்திருக்கிறது. இதைக் கொண்டுதான் எந்த ஒரு பெரிய இரைப் பொருளையும் இவை கையாள்கின்றன. இது எறும்பிற்குக் கிடைத்த வரம்.
No comments:
Post a Comment