இன்று பரிபூரணமடைந்த மதுரை ஆதீனகர்த்தர் தருமையில் சீர்காழி திருக்கோயில் கட்டளை விசாரணை தம்பிரான தமது துறவு வாழ்க்கையை துவக்கியவர்கள்.
தருமை 26 ஆவது மகா சந்நிதானத்துடன் பழகிய நாட்களை மதுரை ஆதீன குருமகா சந்நிதானம் 26 ஆவது குருமணிகள் குருபூஜை
விழா மலருக்கு அளித்த அருளுரையில் பகிர்ந்துள்ளதை சிந்திப்போம்.
நமது தருமை ஆதீனம் 26 - ஆம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாசரிய சுவாமிகள் அவர்களை நாம் 1968- ஆம் ஆண்டு சென்னை தி.நகரில் உள்ள சமயப்பிரசார நிலையத்தின் சந்தித்தோம். அப்போது
அவர்கள் தியாகராய நகர் வடக்கு உஸ்மான் வீதியில் உள்ள சமயப்பிரச்சார நிலையத்தின் கட்டளை விசாரணைப்பணி மேற்கொண்டு வந்தார்கள். அப்போது அவர்கள் திருநாமம் ஸ்ரீமத் சோமசுந்தரத் தம்பிரான் சுவாமிகள் ஆகும். அவர்களைப் பட்டினத்துத் தம்பிரான் என்றும் சொல்வதுண்டு. ஒரு வாரம் கழித்து நம்மை தருமை ஆதீனத்திற்கு அழைத்துச் சென்று 25-ஆம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமணி அவர்களிடத்தில் அறிமுகம் செய்து வைத்தார்கள். நாம் வீழந்து வணங்கி நமஸ்காரம் செய்து திருக்கூட்டத்து அடியவர்களில் ஒருவராகத் திகழ வேண்டும் என விண்ணப்பித்துக் கொண்டோம்.
உடனே, அப்போது ஆதீனத்தின் மூத்த தம்பிரானாகத் திகழ்ந்து வந்த 26-ஆவது குருமணிகளிடம் சொன்னார்கள் "நாளை காலை சமய தீட்சை. விசேட தீட்சை, மந்திரக் காசாயம் கொடுத்துவிடலாம்” என்று உத்தரவாகியது. மறுநாள் சொன்னபடியே தீட்சை அளித்து மந்திரக் காசாயம் தந்தருளினார்கள். மேலும் அங்குள்ள கல்லூரியில் சேர்ந்து வித்வான் பட்டம் பெறுவதற்காகவும் உத்தரவாகிப் பயின்று கொண்டிருந்தோம். நம் மீது, ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமணிகள் மனோதத்துவ ரீதியில் உயர்ந்த எண்ணங்களைக் கொண்டிருந்தார்கள் என்பதை அவர்களின் ஒவ்வொரு அணுகுமுறையையும் வைத்து அறிந்து கொண்டோம்.
ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமணி அவர்கள். நம் மீது கொண்டிருந்த பேரன்பிற்காக கருணைச் செயல்களைப் பிறிதொரு நூலில் விரிவாக எழுதலாம் என்று எண்ணியிருக்கிறோம். சிவபெருமான் பார்வதி தேவி அருள்புரியட்டும். ஒரு வாரம் சென்ற பின்னர், ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமணி அவர்கள் இரண்டாவது உத்தரவை நல்கினார்கள். அந்த உத்தரவு. நமது 26-ஆவது குருமூர்த்திகள் மூலமாக நல்கி அருளப்பெற்றது. அதாவது, எமக்கு அருளப்பெற்ற திருநாமம் "சட்டைநாதத் தம்பிரான்". "குட்டித் தம்பிரானை. தினசரி மேலக் குருமூர்த்தம், வடக்குக் குருமூர்த்தம் இரண்டிலும் பூஜை செய்யச்சொல்" என்று உத்தரவாயிற்று. உத்தரவின் படி காலையில் கல்லூரிக்குச் செல்வதற்கு முன் குருமூர்த்தப் பூஜைகளை முடித்துவிட்டு வருவது வழக்கம்.
சென்னையிலிருந்து 26-ஆவது குருமணிகள் தருமைக்கு வந்தவுடன் நம்மை அழைப்பார்கள். அவர்கள் அறைக்குப் பக்கத்தில் இருந்த கல்லூரி அறை ஒன்று தான் நமக்கு ஒதுக்கப்பெற்றிருந்தது.அவர்கள் அவ்வப்போது நமது அறைக்கு வந்து நலம் விசாரிப்பது வழக்கம். அவர்கள் சென்னையிலிருந்து வந்து தருமையில் ஒருவாரம் அல்லது பத்து நாட்கள் சில காலங்களில் பதினைந்து நாட்கள் கூட தங்குவது உண்டு. அவர்கள் தருமையில் தங்கிருக்கும் காலங்களில் எல்லாம் நண்பகல், இரவு உணவு வகைகள் “சந்நிதானம் பரிகலத்திலிருந்து வரும்", அதனை நாங்கள் இருவரும் உண்பது வழக்கம். பந்திக்கட்டுக்கு செல்வதில்லை.
நாமும் 26-ஆவது குருமூர்த்திகளும் திருநள்ளாறு ஸ்ரீமத் சுவாமிநாதத் தம்பிரானும், திருச்சி மலைக்கோட்டை ஸ்ரீமத் மகாலிங்கத் தம்பிரானும் (இவரை மாட்டுக் கொட்டகைத் தம்பிரான் என்றும் சொல்வதுண்டு) ஸ்ரீமத் திருநாவுக்கரசுத் தம்பிரானும், ஸ்ரீமத் சிவஞானத் தம்பிரானும் ஆகமொத்தம் எட்டு தம்பிரான்கள் அங்கு சமயத் தொண்டு செய்து வந்தோம். கல்லூரி வகுப்பு முடிந்ததும் 26-வது குருமூர்த்திகள் தங்கிருந்த வடக்கு முகப்பு அறைக்கு வந்துவிடுவோம். கட்டுரைகள் எழுதுவது, கடிதங்கள் எழுதுவது, சைய சமயம் பற்றிய கருத்துகளைப் பரிமாறிக் கொள்வது இப்படிப் பணிகள் நடந்தன.
தினசரி மாலையில் நாங்கள் இருவரும் கவேரிக்கரைக்குச் செல்வோம். ஒரு நடைப்பயிற்சி, பின்னர் காவிரி ஆற்றில் குளியல் முடித்துவிட்டு வருவது வழக்கமாக இருந்தது. 26-ஆவது குருமூர்த்திகள் அறைக்கு மூன்று தம்பிரான்கள் தான் வருவது வழக்கம், ஒன்று நாம், இரண்டாவது திருநள்ளாறு ஸ்ரீமத் சுவாமிநாதத் தம்பிரான். மூன்றாவது ஸ்ரீமத் மகாலிங்கத் தம்பிரான்.
நாங்கள் இருவரும் நித்திரைக்குப் போவதற்கு தினசரி 11.30 மணிமேல் ஆகிவிடும். ஒரே பேச்சுதான். அநேக நேரங்களில் உருத்திராக்கத்தை உருட்டிக் கொண்டே, தூக்க மயக்கத்தில் இருப்பார்கள். இந்தக் காட்சிகளைக் காண்கின்ற சம்பந்த ஓதுவார் "சாமிக்குத் தூக்கம் வந்துவிட்டது, நாம் புறப்படலாம்" என்று எம்மிடம் சொல்வார். இதைப் பலமுறை செவிமடுத்த 26-ஆவது குருமணிகள் ஏன்யா நீ
கெட்டுப்போறது மாத்திரமல்ல, நல்லாயிருக்கிற சாமியையும் கெடுக்கிறாயா, என்பார்கள். உடனே ஓதுவார் சாமி,சாமி மன்னிக்கனும் என்று சொல்லி அமர்ந்து விடுவார்.
1968,1969.1970
மூன்று ஆண்டுகளில், இரண்டரை ஆண்டுக்காலமே தம்பிரானாக
இருந்து செய்து வரக்கூடிய அமைப்பு இருந்தது. ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமணி அவர்கள் நம்மை அலகாபாத்தில் திரிவேணி சங்கமத்தில் ஸ்நானம் செய்துவிட்டு, காசி ஹரித்வார் ஆகிய தலங்களுக்குச் சென்று வருமாறு உத்தரவிட்டிருந்தார்கள். அதன்படி, எம்முடன் மேலும் இரண்டு தம்பிரான்களும் நமக்கு துணையாக வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதற்காக இராமேஸ்வரத்திலிருந்து இலட்சுமண வாத்தியார் என்ற பெயருடைய சாஸ்திரி ஒருவரையும் அனுப்பி வைத்தார்கள்.
21 நாட்கள் இப்பயணம் அமைந்தது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் கடும் குளிர் இருந்ததால் நாம் தருமைக்குத் திரும்பி வந்தவுடன் உடம்பு மிகவும் முடியாமல் ஆகிவிட்டது. 26-ஆவது குருமூர்த்திகளிடம் இதனைத் தெரிவித்தோம். எமது தாயாரும், தந்தையாரும் வாழ்ந்து வருகின்ற சீர்காழிக்குச் சென்று வருகிறோம் என்றும்,சந்நிதானத்திடம் உத்தரவு வாங்கிக் கொடுக்கட்டும் என்றும் தெரிவித்தோம்.அவர்களுக்கு,எம்மை
சீர்காழிக்கு அனுப்பி வைக்க
விருப்பமில்லை.
நாம் அழைத்து வந்து காசாயம் கொடுத்து உருவாக்கி வைத்திருக்கிற தம்பிரானை எப்படி ஊருக்கு அனுப்பி வைப்பது என்று சிந்தித்தார்கள். நாம் சொன்னோம் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதால்தான் விண்ணப்பிக்கிறோம். எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்றோம். அரைமனத்துடன் ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமணிகளிடம் இந்து விவரத்தைத் தெரிவித்து ஆதீனம் காரில் சீர்காழிக்கு நம்மை அனுப்பி வைத்தார்கள். சீர்காழிக்குச் சென்ற சம்பவம். 1970 ஆம் ஆண்டு நடைபெற்றது. எமது பூர்வாசிரமத் தந்தையார் எமக்குக் கொடுத்த சித்த மருந்துகள் மூலம் நாம் முழுமையாகக் குணமடைந்தோம்.
அதன் பின்னர் நாம் பெற்றோர்களுடன் சீர்காழியிலேயே வசித்து வந்தோம். 1971 ஆம் ஆண்டு இறுதியில் 25 ஆவது கயிலை குருமணிகள் காசியில் பரிபூரணம் ஆனார்கள்....



No comments:
Post a Comment