காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனுமான, சிவகங்கை லோக்சபா தொகுதி எம்.பி., கார்த்தி, 'தி.மு.க.,வுடன் காங்., கூட்டணியில் இருப்பதால், முழு சுதந்திரம் இல்லை' என்று வேதனைபட்டு உள்ளார்.
கருணாநிதி காலத்தில் துவங்கிய, தி.மு.க., - காங்., உறவு, தற்போதைய ஸ்டாலின் காலத்திலும் தொடர்கிறது. அவருக்குப் பின்னும் கூட்டணி தொடர்ந்தால், கார்த்தியை போன்று காங்கிரஸ் தொண்டர்கள் வேதனைபடுவதும் தொடரவே செய்யும். தமிழகத்தில் பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்த, தேசிய அரசியல் கட்சியான காங்., தனித்து அரசியல் செய்யவும், தேர்தலை சந்திக்கவும் திராணி இல்லாமல், மாநில கட்சியிடம் மண்டியிட்டால், அதற்கு எப்படி மரியாதை கிடைக்கும்; கறிவேப்பிலை போல, தேவைப்படும் போது பயன்படுத்தியதும், பின் குப்பையில் துாக்கி வீசத்தானே செய்வர் தி.மு.க.,வினர்.
தன்மானமில்லாத காங்கிரஸ் கட்சியினர், தி.மு.க.,வினரின் மூக்கறுப்பை அவ்வப்போது சந்தித்து தானே ஆக வேண்டும். பதவியில் அமர வேண்டும் என்பதற்காக, தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்தது காங்கிரஸ் தானே. 'கூடா நட்பு' என காங்.,கை கருணாநிதி விமர்சித்த போதும், அவர் காலில் விழுந்து மன்றாடி கூட்டணி அமைத்த போது இனித்தது, இப்போது கசக்கிறதா?
ஒரு காலத்தில் மத்தியில் மட்டுமின்றி, பல மாநிலங்களில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், இன்று இரண்டு மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது.சோனியா மற்றும் ராகுலின் பொறுப்பற்ற செயல்பாடுகளால், கட்சித் தலைவர்கள் விரக்தியில் உள்ளனர். காங்கிரஸ் மரம் இனி பழுக்காது என உணர்ந்த பறவைகள் போல, மூத்த தலைவர்கள் ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர். அப்படி இருக்கையில், தி.மு.க.,வினர் மட்டும் காங்கிரஸ் கட்சியினருக்கு உரிய மரியாதை கொடுப்பரா?
தி.மு.க.,வினரை பொறுத்தமட்டில், காங்கிரஸ் கட்சியானது காலில் அணியும் செருப்பு போன்றது. தேவைப்படும் நேரத்தில், அதாவது தேர்தல் வந்தால் மட்டும் போட்டுக் கொள்வர்; மற்ற நேரத்தில் கழற்றி விட்டு விடுவர்.
இனி, அடுத்த தேர்தல் வரும் போது தான், உங்களை தேடுவர். தேர்தல் நேரத்தில் தந்த வாக்குறுதிகளை நம்பி, ஓட்டு போட்ட பொதுமக்களுக்கே 'பெப்பே' காட்டிய தி.மு.க.,வினர், காங்கிரஸ் கட்சியினருக்கு மட்டும் பெப்பே காட்டாமல் இருப்பரா என்ன? தி.மு.க.,வினரை நினைத்து வேதனைபடுவதை விடுத்து, கட்சியை வளர்க்கும் வேலையை பாருங்க மிஸ்டர் கார்த்தி.
No comments:
Post a Comment