சில வருடங்களுக்கு முன் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள உலகத்தில் முதன்முதலாய் தோன்றிய அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தினை பற்றி பார்த்தோம்.. அர்த்தநாரீஸ்வரரை தரிசித்து வந்தபின், அறுபது அடி நீளமுள்ள நாகர் சிலை ஒன்றை பார்த்தோம்..
முன்பு வாகன வசதியில்லாத காலத்தில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்திற்கு படிகட்டின்மூலமாகத்தான் சென்றார்கள். அப்படி செல்லும்போது பிரம்மாண்டமான மலைப்பாறையில் செதுக்கப்பட்ட அறுபது அடி நீளமுள்ள நாகர் சிலையை கண்டு வழிபட்ட பிறகே அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்திற்கு செல்லமுடியும். இப்ப வாகன வசதி வந்துட்டதால் இந்த பாதையை ஒருசிலர்தான் பயன்படுத்துறாங்க. அதுமில்லாமல் குடியிருப்புகளும் இந்த பாதையை ஒட்டி ஆக்கிரமிச்சிருக்குறதால் இந்த நாகர் சிலை வெளியூர் ஆட்களின் கண்களில் படுவதில்லை:-(
திருச்செங்கோட்டிற்கு நாகமலைன்னு இன்னொரு பேர் இருக்கு. ஆதிசேஷனே மலை உருவில் இங்கு தவம் செய்வதோடு, அர்த்தநாரீஸ்வரரையும் தன் தலைமீது சொல்லப்படுகிறது. அதனால்தான் இந்த மலைக்கு சர்ப்ப சைலம், அரவகிரின்னு புராணங்களில் சொல்லப்படுது.
திருச்செங்கோட்டு அர்த்தநாரீஸ்வரரை தரிசிக்க மலைக்கு செல்ல நாகர் பள்ளம் என்ற இடத்தில்தான் படிகள் ஆரம்பிக்கின்றது. இந்த நாகர் பள்ளத்தில் அறுபதடி நீளமுள்ள நாகர் வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. நாகர் சிலையின் படத்தின் நடுவே சிவ லிங்கம் ஒன்று உள்ளது. பெரிய பாம்பை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட பாம்புகள் பின்னிப்பிணைந்தபடியும், தனித்தும் காணப்படுகிறது.
நாக தோசத்திற்கு பரிகாரத்தலமாக இந்த நாகர் பள்ளம் விளங்குகின்றது. ராகு, கேது தோசம் நீங்க இச்சிலைக்கு பால் ஊற்றி, மஞ்சள், குங்குமம் சார்த்தி வழிபடுகின்றனர். நாட்பட்ட திருமணம் நடக்க தாலிச்சரடும், குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டியும் வழிபாடு நடக்குது.
நாகர் சிலையையொட்டி இருக்கு அறுபது படிகளுக்கு சத்திய படிகள் எனப்பேராம்.. இந்த படிகளில் நின்றுக்கொண்டு பொய்சத்தியம் செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடுமாம். சாட்சிகள் இல்லாத வழக்குகள், சொத்து தகராறுகள், கணவன் மனைவி பிரச்சனைகளை இந்த படிக்கட்டுகளில் அமர்ந்து பஞ்சாயத்து செய்யப்படுமாம். பொய்சாட்சி சொன்னாலோ, கொடுத்த வாக்கை மீறினாலோ மரணம்கூட தண்டனையாய் கிடைக்குமாம்.
நாக பஞ்சமி இங்கு விசேசமாய் கொண்டாடப்படுகிறது. இங்கிருக்கும் நாகர்களுக்கு பொங்கலிட்டு, கோழி, ஆடு மாதிரியான காணிக்கைகளையும் செலுத்துகிறார்கள். திருச்செங்கோடு நகரத்தின் மையத்திலேயே இருந்தாலும் சரியான அறிவிப்பு பலகை கிடையாது. விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்டுதான் போகனும்..
திருச்செங்கோட்டிற்கு சேலம், பெருந்துறை, நாமக்கல்லிருந்து பேருந்து வசதி உண்டு. கார் மூலமா போனாலும் ரொம்ப இடுக்கான பாதை. ரொம்ப தேர்ந்த டிரைவர்களால் மட்டுமே போகமுடியும். எதிரில் எதாவது ஒரு வாகனம் வந்தாலும் சிக்கல்தான். அதனால், பாதுகாப்பா வண்டியை நிறுத்திட்டு நடந்துப்போறது நல்லது.
ஓம் ஸ்ரீ காருண்யாய
கருடாய வேத ரூபாய
வினதா புத்ராய
விஷ்ணு பக்தி பிரியாய
அமிர்த கலச ஹஸ்தாய
பஹு பராக்ரமாய
பக்ஷி ராஜாய சர்வ வக்கிர
சர்வ தோஷ, விஷ சர்ப்ப
விநாசனாய ஸ்வாஹா
No comments:
Post a Comment