இவரை போல உலகின் மிகப்பெரும் செல்வந்தர் எக்காலத்திலும் இல்லை என கூறப்பட்டவர். அமெரிக்க ஜிடிபியில் சுமார் 5% இவரது சொத்தின் மதிப்பாக இருந்தது. ஒப்பீட்டளவில் ஜெப் பிசோஸ், பில் கேட்ஸிடம் எல்லாம் கூட அந்த அளவு சொத்துகள் இல்லை.
இவரது வாழ்நாளின் முற்பகுதி முழுக்க கடும் கஞ்சராக இருந்தார். சொத்துகளை குவித்து வந்தார். ஆனால் கடும் மன அழுத்தம், வியாதிகளால் பாதிக்கபட்டார். எழுந்து நடக்க முடியாத அளவு உடல் உபாதைகள்.
“சிகாகோ நகரில் இந்தியாவில் இருந்து ஒரு துறவி வந்து தங்கியுள்ளார். உன் நண்பர் வீட்டில் தான். அவரை சந்தித்தால் உன் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்” என ஆலோசனை சொன்னார்கள்.
அதை தொடர்ந்து நிராகரித்தார் ராக்பெல்லர். பிறகு ஒரு நாள் ஏதோ உந்துதல் வந்து அவரை சந்திக்க சென்றார்.
“எங்கே அந்த துறவி?” என பட்லரிடம் கேட்டு அவர் இருந்த அறைக்குள் சென்றார்.
ஏதோ எழுதிகொண்டிருந்த துறவி அவரை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. யார் எனவும் விசாரிக்கவில்லை. அதன்பின் அவரது உடைகளை வைத்தே அவர் பெரும்பணக்காரர், உடல் நலிவுற்றவர் என யூகித்திருக்கலாமோ என்னவோ “உன் செல்வம் உன்னுடையதல்ல. அதன் கஸ்டோடியன் நீ. அதை மக்களுக்கு நீ பயன்படுத்த வேண்டும் என்பதே ஆண்டவன் விருப்பம். அதை செய்தால் நீ என்ன பிரச்சனைக்கு என்னை தேடி வந்தாயொ அது நிறைவேறும்” என்றார்
கோபமடைந்த ராக்பெல்லர் பதில் எதுவும் சொல்லாமல் அறையை விட்டு வெளியேறினார். ஒரு வாரம் யோசித்தார். அதன்பின் ஒரு பெரும் பல்கலைகழகம் அமைக்க ஒரு தொகையை செக்காக எழுதி , அந்த டாக்குமெண்டுடன் அந்த துறவியை தேடி சென்றார்.
மேஜை மேல் அந்த பத்திரத்தை தூக்கி போட்டார். “செய்தாகி விட்டது. நீங்கள் எனக்கு நன்றி சொல்ல வேண்டும்” என்றார்
எதுவும் பேசாமல் ஒரு காகிதத்தில் துறவி எதையோ எழுதி நீட்டினார். அதில்
“நீங்கள் தான் எனக்கு நன்றி சொல்லவேண்டும்” என எழுதபட்டு இருந்தது
எதுவும் பேசாமல் சிந்தித்தபடி அறையை விட்டு வெளியேறினார் ராக்பெல்லர்
அதன்பின் அவரது வாழ்க்கை தலைகிழாக மாறியது. தன் மாபெரும் செல்வத்தை அப்படியே ஒவ்வொரு நல்ல காரியமாக செலவு செய்து அவரை போன்ற வள்ளல் வரலாற்றில் இல்லை என பெயர் வாங்கினார். அவரது உடல் தேறி மிக ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக 97 வயதுவரை வாழ்ந்தார்.

No comments:
Post a Comment