Sunday, August 14, 2022

முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்!

  அதிக வட்டி தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து, ஏஜென்ட்கள் வாயிலாக, ௮௦ ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பெற்று மோசடி செய்த, சென்னையைச் சேர்ந்த, 'இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீசஸ்' நிறுவனம் தற்போது மூடப்பட்டுள்ளது. அதற்கு முன், சென்னையைச் சேர்ந்த, 'ஆருத்ரா கோல்டு டிரேடிங்' என்ற நிதி நிறுவனமும், ௧,௬௮௦ கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் பெற்று மோசடி செய்த தகவல் வெளியானது. கவர்ச்சி விளம்பரங்களுடன் துவக்கப்படும் இத்தகைய நிறுவனங்கள், ஐந்து அல்லது ஆறு மாதங்களுக்கு சரியான வட்டியை கொடுக்கின்றன. அதாவது, அடுத்தடுத்து முதலீடு செய்பவர்களிடம் இருந்து கணிசமான தொகையை வசூலித்து, அதை முதலில் முதலீடு செய்தவர்களுக்கு வட்டியாக தருகின்றன. ஒரு கட்டத்தில், இந்த நிறுவனங்களுக்கு வரும் டிபாசிட் குறைந்து, அதுவரை பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு வட்டி கட்ட முடியாத நிலைமை உருவாகும் போது, நிதி நிறுவனங்களை துவக்கியவர்கள் தலைமறைவாகி விடுகின்றனர்.சில ஆண்டுகளுக்கு முன்னரும், இது போன்ற நிதி நிறுவன மோசடிகள் குறித்த செய்திகள் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் இருந்தன. இருந்தும், அதிலிருந்து நம் மக்கள் பாடம் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை. சதுரங்க வேட்டை திரைப்படத்தில் ஒரு வசனம் சொல்லப்படும்... அதாவது, 'ஒருவனை ஏமாற்ற வேண்டும் என்றால், அவனின் ஆசையை துாண்ட வேண்டும்' என்பர். அப்படித்தான், மோசடி நிதி நிறுவனங்களும், பொதுமக்களின் ஆசையை துாண்டி, அவர்களிடம் உள்ள பணத்தை பெற்று மோசடி செய்கின்றன.பல ஆண்டுகளாக அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் வங்கிகள், அஞ்சலகங்களில், ஒருவர் லட்சம் ரூபாய் டிபாசிட் செய்தால், மாதம், 5௦௦ முதல், ௫௫௦ ரூபாய் வரை தான் வட்டி கொடுக்க முடிகிறது.

அப்படிப்பட்ட நிலையில், தனியார் நிறுவனங்கள் எப்படி, 1 லட்சத்திற்கு, மாதம், ௮,௦௦௦ ரூபாய் வட்டி கொடுக்க முடியும் என்பதை, பொதுமக்கள் சிந்தித்து பார்ப்பதில்லை. இனியாவது மக்கள் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும். அதே நேரத்தில், புதிதாக நிதி நிறுவனங்கள் துவக்கப்பட்டு, அவை கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிடும் போதே, அவற்றை போலீஸ் துறையினர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரசு துறையினர் கண்காணிக்க வேண்டும்.அவர்கள் பொதுமக்களிடம் பெறும் டிபாசிட்களை, எந்த வகையில் முதலீடு செய்து வருவாய் பெறுகின்றனர் என்பது உள்ளிட்ட விபரங்களை கேட்டுப் பெற வேண்டும். இல்லையெனில், அந்த நிறுவனங்களை உடனே கறுப்புப் பட்டியலில் சேர்த்து, அவற்றில் பொதுமக்கள் முதலீடு செய்யாமல் தவிர்க்க வேண்டும். இது தொடர்பான சட்ட நடைமுறைகளை அரசும் உருவாக்க வேண்டும். மோசடி நிதி நிறுவன பிரச்னைகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லையெனில், அவை ஆங்காங்கே முளைத்துக் கொண்டே தான் இருக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...