Sunday, August 14, 2022

பச்சோந்திகளாக மாறிய கொள்கை குன்றுகள்!

 'தமிழகத்திற்குள் எந்த ரூபத்திலும், ஹிந்தி மொழி நுழைவதை அனுமதிக்க மாட்டோம்' என்ற கொள்கையோடு அரசியல் செய்து, போராட்டங்கள் பல நடத்தி, பலரின் உயிரை காவு வாங்கி, சாதனை படைத்த கட்சி தி.மு.க., என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், காரியம் ஆக வேண்டும் எனில், ஹிந்தி மொழி பேசுவோரின் காலுக்கு செருப்பாகவும் தயங்க மாட்டார்கள், இந்த திராவிட செம்மல்கள்.


அப்படித்தான் ஊழல் தொடர்பாக, தன் மீது எந்த நடவடிக்கையும் பாயக்கூடாது என்பதற்காக, பிரதமராக இருந்த இந்திராவிடம் சரணடைந்தார் கருணாநிதி. இப்போது, தி.மு.க.,வின் பட்டத்து இளவரசர் உதயநிதி, தன், 'ரெட் ஜெயன்ட்' நிறுவனம் வாயிலாக, பாலிவுட் நடிகர் அமீர்கான் நடித்த, ஹிந்தி படத்தை வெளியிட தீர்மானித்துள்ளார். இது தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய அவர், 'ஹிந்தி மொழியை கற்கக் கூடாது என்று, நாங்கள் சொல்லவில்லை. யார் வேண்டுமானாலும், எந்த மொழியையும் கற்கலாம். ஆனால், ஹிந்தி கற்க வேண்டும் என, வற்புறுத்தக் கூடாது என்பதே எங்களின் கொள்கை' என்று, தி.மு.க.,வின் ஹிந்தி எதிர்ப்புக்கு புதிய விளக்கம் தந்துள்ளார்.


தமிழகத்தில் ஹிந்தியே இருக்கக்கூடாது என்று பேசி, மைல் கல் மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள பெயர் பலகைகளில் இருந்த ஹிந்தி எழுத்துகளை, கறுப்பு மை பூசி அழித்த பெருமைக்குரியவர் கருணாநிதி. அதே கொள்கை செம்மல், தன்னை சார்ந்தவர்கள் நடத்தும் பள்ளிகளில், ஹிந்தி கற்றுக் கொடுத்ததை கண்டுக்காமல் இருந்தார். அதற்கு காரணம், அவர்கள் வாயிலாக கணிசமான நிதி, தி.மு.க.,வுக்கு வந்தது.


அதே பாணியில், 'ஹிந்தி தெரியாது போடா' என்று, பனியன் போட்டு ஹிந்திக்கு எதிர்ப்பை காட்டி விட்டு, பணம் கிடைக்கும் என்பதற்காக, அமீர்கான் நடித்த ஹிந்தி படத்தை, தமிழகத்தில் திரையிட சம்மதித்துள்ளார் உதயநிதி. படம் வெளியிடும் தன் வியாபாரத்திற்காக, 'ஹிந்தி கற்கலாம்; திணிப்பு தான் கூடாது' என்று, கழுவுற மீனில் நழுவுற மீனாக பேசியுள்ளார்.


கருணாநிதி காலத்தில் இலைமறை காயாக இருந்த, தி.மு.க.,வினரின் கொள்கை மீறல், தற்போது பட்டவர்த்தனமாகி, தி.மு.க.,வை பச்சோந்தியாக்கி விட்டது. ஹிந்தி மொழி படம் என்ன... எந்த மொழி படத்தை வேண்டுமானாலும் வெளியிடலாம். காற்றுள்ள போதே துாற்றிக் கொள்வதே புத்திசாலித்தனம் என்பதே, தி.மு.க.,வின் தற்போதைய கொள்கையாக மாறி விட்டது. இவர்களின் இந்த பச்சோந்திதனத்தை மக்கள் புரிந்து கொண்டால் சரி தான்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...