சென்னையில் உள்ள தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தில், ஈ.வெ.ரா., சிலை ஏன் வைக்கப்படவில்லை என்ற, கேள்வி எழுந்துள்ளது.
சென்னை, மதுரவாயலில் சமீபத்தில், ஹிந்து முன்னணி நடத்திய நிகழ்ச்சியில் பேசிய, அதன் நிர்வாகியும், சினிமா ஸ்டன்ட் மாஸ்டருமான கனல் கண்ணன், 'ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் எதிரே, கடவுளே இல்லை என்று சொன்னவரின் சிலை இருக்கிறது. 'அது என்று உடைக்கப்படுகிறதோ, அன்று தான் ஹிந்துக்களின் எழுச்சி நாள்' என்றார்.
இதற்கு ஒரு பக்கம், தி.மு.க.,வினரிடம் கடும் எதிர்ப்பு எழுந்தாலும், மறு பக்கம், 'கடவுள் நம்பிக்கையாளர்களை இழிவுபடுத்தும் வகையிலான வாசகங்களுடன் கோவில்கள் முன்பு, ஈ.வெ.ரா., சிலைகள் இருப்பது நியாயமா?' என்ற விவாதத்தையும் எழுப்பியது.
பா.ஜ.,வினர் கேள்வி
தி.மு.க.,வின் தாய் அமைப்பான, தி.க., நிறுவனரான ஈ.வெ.ரா.,வுக்கு தமிழகம் முழுதும் சிலைகள் உள்ளன. அந்த சிலைகளின் கீழே, 'கடவுள் இல்லை, இல்லை, இல்லவே இல்லை. கடவுளை கற்பித்தவன் முட்டாள். கடவுளை பரப்பியவன் அயோக்கியன். வணங்குகிறவன் காட்டுமிராண்டி' போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
இதற்கு பதிலடியாக, ஈ.வெ.ரா., சிலைகளுக்கு எதிரே, கடவுள்களின் சிலையை வைத்து, 'கடவுளை நம்பு; மனிதனுக்கு உதவு. கடவுள் இருக்கிறார்; கடவுளை மறந்தவன் முட்டாள். 'கடவுளை பரப்பாதவன் அயோக்கியன்; கடவுளை வணங்காதவன் காட்டுமிராண்டி என்பது போன்ற வாசகங்களை வைத்தால், தி.மு.க., அரசு அனுமதி அளிக்குமா?' என, பா.ஜ.,வினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
![]() |
இந்நிலையில், 'ஊரெல்லாம் ஈ.வெ.ரா., சிலை இருக்கும்போது, சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் இல்லாதது ஏன்?' என்று, சமூக ஊடகங்களில் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்துள்ள தி.க.,வினர், அறிவாலயத்தில் ஈ.வெ.ரா., சிலை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
எந்த விதத்தில் நியாயம்
அறிவாலயத்தை உருவாக்கிய கருணாநிதி அங்கு, தி.மு.க., நிறுவனரான அண்ணாதுரையின் சிலையை வைத்தார். கருணாநிதி மறைவுக்குப் பின், அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோரின் சிலைகள் அங்கு வைக்கப்பட்டுள்ளன.ஆனால், தி.மு.க.,வினர் தங்கள் கொள்கை ஆசானாக போற்றும் ஈ.வெ.ரா.,வுக்கு மட்டும் சிலை இல்லை.
இது தொடர்பாக, தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:கருணாநிதி இருக்கும்போதே, அறிவாலயத்தில் ஈ.வெ.ரா., சிலை பற்றிய கேள்வி எழுந்தது. ஈ.வெ.ரா.,விடம் முரண்பாடு ஏற்பட்டு தான், தி.மு.க.,வை அண்ணாதுரை துவக்கினார். அப்போது, தி.க.,வின் கடவுள் மறுப்பு கொள்கை பற்றி கேட்டபோது, 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றார். ஈ.வெ.ரா., சிலையை வைத்தால், அந்த சிலையின் கீழே, 'கடவுள் இல்லவே இல்லை' என்ற வாசகங்களை வைக்க வேண்டும். அப்படி வைத்தால், கடவுள் மறுப்பு கொள்கையை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டதாகி விடும்.
வெறும் சிலையை மட்டும் வைத்தாலோ, வேறு வாசகங்களை வைத்தாலோ, தி.க.,வினர் வம்புக்கு வருவர். எனவே தான், அறிவாலயத்தில் ஈ.வெ.ரா., சிலையை கருணாநிதி தவிர்த்து விட்டார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.தங்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் கூட, ஈ.வெ.ரா., சிலையை வைக்க முடியாதவர்கள், கோவில்கள் முன்பு வைப்பது எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வியை, பா.ஜ.,வினர் எழுப்பி வருகின்றனர்.

No comments:
Post a Comment