தி.மு.க., உட்கட்சி தேர்தலில், துணை பொதுச் செயலர் ஆ.ராஜாவின் கை ஓங்கி இருப்பதாக, அறிவாலயத்தில் பேச்சு அடிபடுகிறது.இது குறித்து, கட்சி மூத்த தலைவர்கள் சிலர் கூறியதாவது:தேர்தல் கமிஷன் அறிவுரைப்படி, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை உட்கட்சி தேர்தல் நடத்தி, அதற்கான ஆவணங்களை, தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்ய வேண்டும்.

அதன்படி, ஆளும்கட்சியான தி.மு.க.,வில் சில மாதங்களாக உட்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. ஆங்காங்கே கட்சியினர் போட்டியிட வாய்ப்பு அளிப்பது போல, 'பாவ்லா' காட்டப்பட்டாலும், எல்லா பொறுப்புகளுக்குமே தேர்தல் இல்லாமல் பேசி தான் முடிக்கப்படுகிறது.
தேர்தல் இல்லாமல் கட்சி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது தான் தலைமையின் உத்தரவு. எனவே, மாவட்ட செயலர்கள், தொண்டர்களிடம் பேசி, சுமுகமாக நிர்வாகிகளை தேர்வு செய்து, தலைமைக்கு தகவல் அனுப்பி விடுகின்றனர்.
ஆனாலும், ஒரு சில இடங்களில் தலைமையின் விருப்பத்துக்கு தொண்டர்கள் ஆட்படுவதில்லை. தேர்தல் நடத்தியாக வேண்டும் என மல்லுகட்டுகின்றனர். பல இடங்களிலும்
ஒன்றிய செயலர் தேர்வில் பிரச்னைகள் இருக்கவே, அவற்றை பேசி முடிப்பதற்காக, கட்சி தலைவர் ஸ்டாலின் ஒரு குழுவை அமைத்தார்.
அந்த குழுவில், துணை பொதுச் செயலர் ஆ.ராஜா, அமைச்சர் தங்கம் தென்னரசு, அன்பகம் கலை, வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோர் உள்ளனர்.பிரச்னைக்குரிய பதவிகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்டோர் போட்டியிட்டால், குழுவினர் அவர்களை அழைத்து பேச வேண்டும். ஆனால், அப்படி பேசுவது முழுக்க முழுக்க ஆ.ராஜா தான். அன்பகம் கலை, கட்சி நிர்வாக பொறுப்புக்கு புதியவர் என்பதால், ராஜா என்ன செய்கிறாரோ, அதை ஆமோதித்து விடுகிறார்.
அமைச்சராக இருப்பதால், தங்கம் தென்னரசு பேச்சு நடக்கும்போது அங்கு இருப்பதில்லை. வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவும், ராஜாவின் கருத்தை வழி மொழிந்து விடுகிறார்.
இதனால், ஆ.ராஜா, யாரை பொறுப்புக்கு கொண்டு வர நினைக்கிறாரோ, அவர்களே தேர்வு செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது. ராஜாவுக்கு எதிரானவர்கள் பொறுப்புக்கு வர நினைத்தால், தேர்தலை நிறுத்தி அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் ஒன்றியம் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட ஒன்றிய செயலர்கள் தேர்வு செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆ.ராஜா, கட்சிக்குள் தன் கை ஓங்க வேண்டும் என்பதற்காகவே, இப்படி செய்து வருகிறார். ஒன்றிய செயலராக நியமிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள், ஆ.ராஜாவின் ஆதரவாளர்களே.
கடந்த 1980களில், அப்போது தி.மு.க.,வில் இருந்த வைகோ தான், உள்கட்சி தேர்தல் தொடர்பாக, கட்சியினரோடு பஞ்சாயத்து பேசி, ஆட்களை நியமித்தார். பின், அவரே தி.மு.க., தலைமைக்கு போட்டியாக உருவாகி, கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது வரலாறு. இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment