'பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில், பல்லாயிரம் பேர் பணிபுரிகின்றனர். அவர்கள் என்ன செய்கின்றனர் என்றே தெரியவில்லை' என, தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் பேசியுள்ளார்.
இதற்கு, புள்ளியியல் துறை சார் நிலை அலுவலர் சங்க மாநில பொதுச் செயலர் கண்ணதாசன் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, 'மத்திய - மாநில அரசுகளின் வளர்ச்சிக்கு அறிவியல் பூர்வமான முறையில், புள்ளி விபரங்களை சேகரித்து வழங்குகிறோம்' என்று பதிலடி கொடுத்துள்ளார்.

கண்ணதாசன் கூறுவது உண்மை தான்.பிரதமர் மோடி, 'மன்கிபாத்' என்ற நிகழ்ச்சி வாயிலாக, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று ரேடியோவில் உரை நிகழ்த்துகிறார். அப்போது, நாட்டின் எங்கோ ஒரு மூலையில் உள்ள, சிறிய கிராமத்தில் நடைபெறும் செயலை கூட மேற்கோள் காட்டி புகழ்ந்து கூறுவார்.
உதாரணமாக, கொரோனா காலத்தில், விழுப்புரத்தில் ஹேமா என்ற ஆசிரியை இணைய வழி கல்வியை சிறப்பாக செய்தது, மதுரையில் முடி திருத்தும் தொழிலாளியின் மகள் கொரோனா நிதியாக, 5 லட்சம் ரூபாய் வழங்கியது போன்ற அரிய நிகழ்வுகளை, மோடி தன் உரையில் குறிப்பிட்டார்.
கொரோனா பொது முடக்கம் முடிந்த பின், நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், 'பொம்மைகள் உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய வேண்டும்' என்றார். அதற்கு, பல விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், சமீபத்தில் வெளியான தகவலில், 'இந்தியாவின் பொம்மைகள் ஏற்றுமதி, 900 கோடியிலிருந்து, 3,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், இறக்குமதி குறைந்துள்ளது.
பொம்மைகள் ஏற்றுமதி வாயிலாக, நமக்கு கணிசமான அன்னிய செலாவணி கிடைத்துள்ளது' என்பது தெரிய வந்துள்ளது. இத்தகைய தரவுகளை சேகரித்து தருவது, புள்ளியியல் சார் நிலை துறையின் பணி. மோடிக்கு நாட்டு மக்களை பற்றிய கனவு, ஈடுபாடு அதிகம். அதனால், இத்துறை வல்லுனர்கள் வாயிலாக, மக்களை பற்றிய, நாட்டின் பொருளாதாரத்தை பற்றிய புள்ளி விபரங்களை கேட்டறிந்து கொள்கிறார்.
அதேபோல, தமிழக நிதியமைச்சர் நினைத்தால், புள்ளியியல் துறை வாயிலாக, பல அரிய தரவுகளைப் பெற்று, மாநிலத்தை முன்னேற்ற முடியும். தமிழகத்தில் தயாராகும் பல பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
உதாரணமாக, பத்தமடை பாய், மதுரை மல்லிகை, கும்பகோணம் பாவை விளக்கு போன்றவற்றை கூறலாம். தரவுகள் வாயிலாக, இவற்றின் ஏற்றுமதியை அதிகரிக்கலாம். இது தவிர, மக்களின் பொருளாதார நிலைமை உயர்வதற்கான வேறு பல நல்ல காரியங்களையும் செய்யலாம். அதை விடுத்து, துறையை விமர்சிப்பது சரியல்ல.
'ஆடத் தெரியாதவள் தெரு கோணல் என்றாளாம்' என்பர். அதுபோல, மக்களின் பொருளாதார நிலை அறிந்து நடவடிக்கை எடுக்க, என்ன தரவுகள் வேண்டும் என்பது தெரியாத நிதி அமைச்சர், புள்ளியியல் துறையை குறை கூறுகிறார்; விபரம் தெரியாமல் புலம்புகிறார்... பாவம்!
No comments:
Post a Comment