Tuesday, May 8, 2012

25 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் டெசோ- என்ன சாதிக்கப் போகிறார் கருணாநிதி?

25 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் டெசோ- என்ன சாதிக்கப் போகிறார் கருணாநிதி?

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஈழத் தமிழர் ஆதவாளர்கள் அமைப்பு எனும் டெசோவை உயிர்ப்பித்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
அவர் தலைமையில்,  நடந்த அந்த அமைப்பின் முதல் கூட்டத்தில் தனி தமிழ் ஈழம் அமைக்க ஐ.நா. சபை பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதாவது முந்தா நாள் அறிவித்து, இன்று தொடங்கிவிட்டார் கருணாநிதி இந்த அமைப்பை. ஆனால் டெசோவுக்கு முன்பு கிடைத்த ஏகோபித்த ஆதரவு இந்த முறை அவருக்குக் கிடைக்கவில்லை. மாறாக கடும் விமர்சனங்களே எழுந்துள்ளன.
டெசோ மூலம் என்ன சாதிக்க முடியும் கருணாநிதியால்?
டெசோ எனப்படும் தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பு கடந்த 1985ம் ஆண்டு மே 13ம் தேதி சென்னையில் தொடங்கப்பட்டது. கருணாநிதியைத் தலைவராகவும், கி.வீரமணி, பழ. நெடுமாறன் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்டு அப்போது அது அமைந்தது. இந்த அமைப்பின் முக்கிய கோரிக்கையாக வடக்கு கிழக்கு இலங்கைப் பகுதிகளை இணைத்து தமிழ் ஈழ நாடு அமைக்க வேண்டும் என்பதே.
டெசோ அமைப்பின் சார்பில் மதுரையில் பிரமாண்ட மாநாட்டையும் கருணாநிதி நடத்தினார்.அதில் வாஜ்பாய் உள்ளிட்ட அகில இந்தியத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
அன்றைக்கு ஆளும் கட்சியாக இருந்த எம்ஜிஆரின் அதிமுக கூட இதைக் கண்டு கொள்ளவில்லை. கருணாநிதிக்கு ஏகாபித்த ஆதரவு இருந்தது.
இந்த டெசோவின் முழுமையான நோக்கமே தனி ஈழம்தான் என்று பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.
ஆனால் தனி ஈழம் வந்தால் அது பிரபாகரன் தலைமையில்தான் என்ற ஒரு நிலை அன்றே உருவாகிவிட்டது. அதைத்தான் எம்ஜிஆர் நேரடியாகக் கூறிவந்தார்.
ஆனால் பிரபாகரனோ கருணாநிதியின் ஈழ ஆதரவு கோஷங்களின் பின்னணியில் உள்ள  வெற்று அரசியல் புரிந்ததால், டெசோ விவகாரங்களில் பெரிதாக ஈடுபாடு காட்டவில்லை. டெசோ மாநாட்டுக்குக் கூட அவர் திலகர் என்பவரைத்தான் அனுப்பினார்.
இந்தப் பின்னணியில்தான் டெசோவை கலைத்துவிட்டதாக பின்னர் கருணாநிதி அறிவித்தார். தனி ஈழம் வேண்டும் என ஆரம்பிக்கப்பட்ட டெசோ, அந்த நோக்கம் நிறைவேறும் முன்பே கலைக்கப்பட்டது. இப்போது மீண்டும் டெசோ தொடங்கப்பட்டுள்ளதாக அறிவித்து முதல் கூட்டத்தையும் கருணாநிதி நடத்தியுள்ளார். இதன் மூலம் அவர் என்ன சாதிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இன்றைக்கு முழுக்க முழுக்க அவருக்கு எதிரான சூழலே ஈழ அரசியல் களத்தில் நிலவுகிறது. கருணாநிதியின் வார்த்தைகள் நம்பகத்தன்மை அற்றவையாகப் பார்க்கப்படுகின்றன. காரணம், சர்வ பலமிக்க முதல்வராக அவர் பதவியில் இருந்த போது தனிஈழம் வேண்டும் என்பதை அவர் சொல்லத் தவறினார். பிரணாப் முகர்ஜிக்கு இணையாக இலங்கையின இறையாண்மை பற்றி கவலைப்பட்டார்.
விமானங்களிலிருந்து குண்டுமழை பொழிவது நிறுத்தப்பட்டாலும், பீரங்கிக் குண்டு வீச்சும், துப்பாக்கிச் சூடுகளும் தொடர்வதாக அவரது புகழ்பெற்ற 3 மணி நேர உண்ணாவிரதத்தின் போது தகவல் சொல்லப்பட, ‘மழைவிட்டும் தூவானம் விடவில்லை’ என கொடூரமான உவமையைச் சொன்னதை யாரும் இன்னும் மறக்கவில்லை.
இன்றைய கூட்டத்துக்குப் பின் கருணாநிதி பேசுகையில், “சிங்களர்களை ஒருபோதும் நாம் நம்ப முடியாது. நம்ப வைத்துக் கழுத்தறுப்பவர்கள் அவர்கள். அவர்களின் உறுதிமொழியை நம்பித்தான் நான் கூட சென்னையில் உண்ணாவிரதம் இருந்ததை வாபஸ் பெற்றேன். ஆனால் அவர்கள் பொய்யான உறுதியமொழியை அளித்து விட்டு ஒட்டுமொத்தத் தமிழர்களையும் கொன்று குவித்தனர்.
இனியும் தமிழ் மக்களால் சிங்களர்களுடன் இணைந்து வாழ முடியாது. தமிழர்களுக்கென் தனி் நாடு, தமிழ் ஈழ நாடு அங்கே அமைந்தால் மட்டுமே தமிழ் இனம் அங்கு பிழைக்கும். எனவே இதை ஐ.நா. பொது வாக்கெடுப்பு மூலம் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இந்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,” என்றார்.
கருணாநிதியிடம் உள்ள பிரச்சினையும் இதுதானே. 2008-லிருந்து 2009 தொடக்கம் வரை ஈழப் போராட்டம் என்ற பெயரில் அனைவரையும் பலமாக உசுப்பேற்றி நம்ப வைத்துக் கழுத்தறுத்தார் என்பதுதானே இவர் மீதுள்ள குற்றச்சாட்டும். இவரை ராஜபக்சேவை நம்பச் சொன்னது யார்? அதையெல்லாம் தாண்டி உறுதியோடு நின்று மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்காமல் போனாதுதானே கருணாநிதி மீது தீராத பழியாக நிற்கிறது!
சொந்த அரசியல் காரணங்கள், தன் பிடியைவிட்டு நழுவும் தமிழகத்தை இழுத்து நிறுத்துததல் போன்ற காரணங்களுக்காகவே அவர் இத்தனை நாட்களும் இல்லாமல் இப்போது தனி ஈழக் கோரிக்கையை கையில் எடுத்திருக்கிறார் என்ற விமர்சனங்களை அவரே கூட புறக்கணிக்க முடியாது.
ஈழத்தில் போர் உக்கிரமடைந்து லட்சக்கணக்கில் அப்பாவி மக்கள் உயிரிழந்து கொண்டிருந்த நேரத்தில் ஒரே ஒரு வார்த்தை தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக கருணாநிதி பேசியிருந்தால் கூட, தமிழ் வரலாறு அவரைக் கொண்டாடி இருக்கும். போர் என்றால் அப்பாவி மக்கள் சாவது சகஜம் என ஜெயலலிதா ஒரு பக்கம் வேல் பாய்ச்ச, இன்னொரு பக்கம், முத்துக்குமாரின் உயிர்த்தியாகத்தைக் கொச்சைப் படுத்தியும், அதன் தொடர்ச்சியாக எழுந்த மாநிலம் தழுவிய அசாதாரண மாணவ எழுச்சியை பிரிட்டிஷாரை விட மிக மோசமாக கருணாநிதி அரசு கையாண்டதும்… இதோ நேற்றுதான் கண்முன் நடந்ததைப் போலுள்ளது.
இப்போது அவர் கையில் எடுத்துள்ள தனி ஈழ கோரிக்கை எத்தனை நாளைக்கு நிலைத்திருக்கும்? காங்கிரஸை விட்டு உண்மையிலேயே பிரிந்து வந்து, தனி ஈழத்துக்காக கடைசி மூச்சு வரைப்போராடப் போகிறாரா கருணாநிதி?
இந்தக் கேள்விக்கு உறுதியான விடையை அவர் தந்தாலும் அதை ஏற்கவிடாமல் தடுக்கிறது அவரது கடந்த கால அரசியல்.
தனித்த அரசியல் லாபங்களைப் புறக்கணித்து, இந்த இறுதிக் கட்ட ‘போரை’ அவர் இதயசுத்தியோடு முன்னெடுத்தால், டெசோ மீது நம்பிக்கைப் பிறக்கும். மாறாக 2014 மக்களவைத் தேர்தலுக்காகவும், மகன்களின் அரசியல் போரை திசை திருப்பவும்தான் இந்த டெசோ என்றால், கருணாநிதி தன் ஜெ எதிர்ப்பு அறிக்கைப் போரை மட்டும் தொடரலாம்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...