ஜான் மிர்தால் (Jane Myrdal)ஒரு புகழ் பெற்ற ஸ்வீடன் நாட்டு அறிஞர். உலகின் பல நாடுகளில் நடைபெற்று வரும் அமைதி இயக்கங்களில் ஆர்வமுடன் பங்கெடுத்து சர்வாதிகார, கொடுங்கோல் அரசுகளைக் கண்டித்தும் இயக்கம் நடத்தி வருபவர். என்பத்தி ஐந்து வயதான இந்த உலகறிந்த அரசியல் அறிஞரை ‘இனிமேல் இந்தியாவுக்குள் நுழையக் கூடாது’என அறிவித்துள்ளது இந்திய அரசு. ‘மாவோயிஸ்டுகளுக்கு ஆலோசனை வழங்கினார்’ என்று குற்றத்திற்காக இப்படியொரு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிதம்பரம் தலைமை அமைச்சராக இருக்கும் இந்திய உள்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
யார் இந்த ஜான் மிர்தால்?
ஜான் மிர்தால் புகழ் பெற்ற ஆசிய நாடகம் (Asian Drama) என்ற பொருளாதார நூலை இயற்றிய மறைந்த குன்னர் மிர்தால் (Gunner Myrdal) அவர்களின் புதல்வர். அவரது தாய் ஸ்வீடன் நாட்டின் புகழ் பெற்ற அமைச்சராகவும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் பணிகளுக்காகவும் பாராட்டப் பெற்ற காலம் சென்ற ஏவா மிர்தால் (Eva Myrdal). கொள்கை அடிப்படையில் இருவரும் சமுக ஜனநாயக வாதிகள், மக்களின் நல்வாழ்வுக்கு அரசே பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையை உடையவர்கள். இவர்கள் இருவரது பணிக்காகவும் தனித்தனியாக உலகின் அதி உயர்ந்த பரிசாகக் கருதப்படும் நோபெல் பரிசு தரப்பட்டுள்ளது. இத்தகைய மிகவும் உயர்ந்த சமுக லட்சியங்களுக்காக வாழ்ந்து மறைந்த இந்தக் குடும்பத்தில் பிறந்தவர் ஜான் மிர்தால்.
தமது பெற்றோரைப் போலவே தாமும் உலக மக்களின் நல்வாழ்வுக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர் ஜான் மிர்தால். தம் வாழ்வின் பெரும் பகுதியை அதாவது சுமார் அறுபது ஆண்டுகளாக ஜான் மிர்தால் மக்கள் பணி ஆற்றி வருகிறார். உலகின் பலபகுதிகளில் நடைபெறும் அமைதி போராட்டங்களுக்கு, இயக்கங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார். போராடும் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை எப்போதும் ஆதரித்து வருபவர். தமது நாட்டு அரசாங்கத்தையும் வெளிப்படையாகக் கண்டித்து இவர் பெரிய அளவில் இயக்கங்கள் நடத்தி உள்ளார். அடிப்படையில் இவர் ஒரு ஆய்வாளர், ஜனநாயகவாதி, எழுத்தாளர், பேச்சாளர்.
இவர் சில காலம் இந்தியாவில் தங்கியும், பல முறை பயணம் செய்தும் பிரபலமான நூல்களை எழுதியிருக்கிறார். 1983 ம் ஆண்டு இவர் எழுதிய ‘இந்தியா காத்திருக்கிறது’(India Awaits) என்ற நூல் தமிழ் உள்பட பல மொழிகளில், பல பதிப்புகள் வெளிவந்துள்ளது. இதே போலவே கடந்த ஆண்டில் ‘இந்தியாவின் மீதொரு சிவப்பு நட்சத்திரம் - அடிமைப்பட்ட மக்கள் விழித்தெழும்காலையில் நமது பார்வைகள்,பிரதிபலிப்புகள், விவாதங்கள்”(Red Star Over India. Impressions, Reflections and Discussions when the Wretched of the Earth are Rising.) என்ற நூலை வெளியிட்டுள்ளார். இந்த நூல் இந்தியாவின் கல்கத்தா, டில்லி உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் இவர் நேரடியாகக் கலந்து கொண்ட கூட்டங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள்முன் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.
ஆங்கிலத்தில் மட்டும் தற்போது கிடைக்கும் இந்த நூல் இந்தி, தெலுங்கு, வங்காளி, தமிழ்,பஞ்சாபி உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் அச்சில் வெளிவர இருக்கின்றது.முன்னெப்போதும் இல்லாத அளவில் வரவேற்புப் பெற்ற இந்த நூலையும் அதன் மொழி பெயர்ப்புகளையும் கண்டு கிலி கொண்ட மன்மோகன் சிங்கும் சிதம்பரமும் அதன் எழுத்தாளரையே தடை செய்துவிட்டனர். இது மட்டும் அல்லாது தம்மை‘அறிவாளிகளாக’கருதிக் கொள்ளும் மன்மோகன் சிங்கும் அவரது கூட்டாளியுமான சிதம்பரமும் செய்து வரும் படுகொலைகள் பேராசை பிடித்த தொழில் நிறுவனங்களுக்கு அவர்கள் செய்து வரும் சேவை என்ற விபரத்தை ஜான் மிர்தால் உலகின் பல பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். பல ஐரோப்பிய, ஆசிய மொழிகளில் வெளியாகும் அவரது எழுத்துகள் சமீப காலமாக இந்திய அரசியல்வாதிகள் குறிப்பாக மன்மோகன் சிங்குக்கும் சிதம்பரத்திற்கும் (அவ)மானப் பிரச்சனையாகியுள்ளது. எனவே,இவரது எழுத்துகளைத் தடை செய்ய ஒரு வழியாக அவரையே தடை செய்து விட்டனர்.
மாவோயிஸ்டுகளுக்கு ஆலோசனை?
மாவோயிஸ்டுக் கட்சியினரின் கருத்துகளை இந்தியப் பத்திரிகைகள், தொலைக் காட்சிகள் இருட்டடிப்புச் செய்து வரும் நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்களது இயக்கம் பணி செய்யும் பகுதிகளுக்குச் சென்று இயக்கத்தின் தலைவர்களையும் மக்களையும் நேரடியாகக் கண்டு பேட்டியெடுத்து வெளியிட்டவர் ஜான் மிர்தால். அவரது பேட்டிகளும் குறிப்புகளும் மத்திய இந்தியாவில் நடக்கும் அடக்குமுறை பற்றிய விபரங்களை சர்வதேசத்திற்கும் சிறப்பாக அறிமுகம் செய்தது. இதில் இருந்து தான் உலகம் மாவோயிஸ்டுகளின் உண்மையான நிலைபாடுகளை அவர்களின் வெட்டிச் சிதைக்கப் படாத முழுமையான பேட்டிகள் மூலம் நேரான வழியில் அறிந்து கொள்ள முடிந்தது. அப்போதிருந்தே அவரைக் குறி வைத்திருந்த இந்திய அரசு காரணம் எதுவும் கண்டுபிடிக்க முடியாததால் ‘மாவோயிஸ்டுகளுக்கு அவர் ஆலோசனை சொன்னதாக குற்றம் சாட்டியுள்ளது’. தாம் ஆலோசனை எதுவும் சொல்லவில்லை என்றும் தான் பேசிய அனைத்து விபரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள், இளைஞர்கள்,அறிவாளிகள் பங்கேற்ற அரங்கக் கூட்டங்கள் தவிர வேறெதுவும் செய்யவில்லை என்று மறுத்து இருக்கிறார்.
பொய்யே தொழிலாகக் கொண்ட சிதம்பரம் இந்த மட்டும் ஒரு வரியில் தம் பொய்யை நிறுத்தியது நமக்கு வியப்பு இல்லை.
இவருடைய சமீபத்திய நூல், மத்திய இந்தியப் பழங்குடிகளுக்குச் சொந்தமான நிலங்களை சிதம்பரமும் மன்மோகன் சிங்கும் பிடுங்கி வருவதை விளக்குகிறது.இந்தியாவின் போலீசையும், ராணுவத்தையும் கொண்டு பழங்குடி மக்களை வெளியேற்றி அவர்களது நிலங்களை தொழில் நிறுவனங்களுக்கு வழங்கி வருவதை இந்த நூல் தமது கள ஆய்வு விபரங்களுடன் வெளியிட்டுள்ளது. மாவோயிஸ்டுகளுக்கு எதிராக போர் நடத்துகிறோம் என்று சிதம்பரம் சொல்வது உண்மையில் பழங்குடிகளின் நிலத்திற்கான போர் என்ற விபரங்களை மீண்டும் ஒருமுறை இந்த நூல் நிறுவியுள்ளது. குறிப்பாக மாணவர்கள், அரசியல் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் மத்தியில் இந்த நூல் பிரபலம் அடைந்து வருவதைக் கண்டு சகிக்காத சிதம்பரம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.இதுவரை இந்த நூலை இந்திய அரசு தடை செய்யவில்லை. ஆயினும், அது குறித்துப் பேசவோ மீண்டும் ஆய்வுக்கான விபரங்கள் சேகரிக்கவோ ஜான் மிர்தால் இந்தியாவுக்குள் வந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் இந்தத் தடையை விதித்துள்ளது.
ஸ்வீடனும் இந்தியாவும்
ஸ்வீடன் நாட்டு பீரங்கிக் கம்பெனியான போபார்ஸ் நிறுவனத்திடம் இருந்து அமைச்சர் சிதம்பரத்தின் எஜமான் ராஜிவ் காந்தி லஞ்சம் பெற்றதை அறிந்த அளவுக்கு ஸ்வீடன் நாட்டு அறிவாளிகளை அறியவில்லை. இது துரதிர்ஷ்டமே.
ஸ்வீடன் நாட்டின் அறிவாளிகள் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு மிகப்பெரும் பங்கு ஆற்றியுள்ளனர். ஐரோப்பிய மக்களுக்கு இந்தியா, இலங்கை, மலேசியா போன்ற அடிமைப்பட்ட நாடுகளில் வெள்ளையின அரசாங்கங்கள் நடத்தும் படுகொலைகளையும் கொடுங்கோல் ஆட்சியையும் வெளிக் கொண்டுவந்ததில் இவர்களது பணி மிகவும் முக்கியமானது. இந்த வகையில் ஜான் மிர்தால் அவர்களின் குடும்பம் அளப்பறிய பணியாற்றியிருக்கிறது.
அடிப்படைப் பொருளாதாரக் கல்வி பயிலும் இந்திய மாணவர்கள், அரசியல் ஊழியர்கள் தாம் அவசியம் படித்துத் தேற வேண்டிய அடிப்படை நூல்கள், ஆய்வுகள் பலவும் ஸ்வீடன் நாட்டு அறிவாளிகளால் வெளியிடப் பட்டுள்ளது என்றால் அது மிகையல்ல. அதிலும் குறிப்பாக, இன்றளவும் இந்திய அரசு பொருளாதார ரீதியாக விவசாயிகளைப் பிரித்து ஆராயவும், அதற்கான திட்டங்களை செயல்படுத்தவும் பயன்படுத்தும் மூல விபரங்கள் குன்னர் மிர்தால் எழுதிய ‘ஆசிய நாடகம்’என்ற ஆய்வு நூலில் இருந்தே எடுக்கப்பட்டுள்ளது. அவர் வழங்கிய ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தான் இந்திய அரசால் விவசாயிகள் தரம் பிரிக்கப்பட்டு சிறிய (small), நடுத்தர (medium), பெரிய (Big)விவசாயிகள், நிலச்சுவான்தார்கள்(Landlords)என்று வகைப் படுத்தப் பட்டுள்ளனர்.இதனையே அரசின் திட்டங்கள் அடிப்படியாகக் கொண்டுள்ளன.
இவரைப்போலவே, வெள்ளையர் ஆட்சியின் பொழுது, இந்தியாவின் வறுமையின் காரணம் என்ன?, நாடு எப்படி வெள்ளையர்களால் கொள்ளையிடப் படுகிறது என்பதை ஒரு நீண்ட ஆய்வின் அடிப்படையில் மிகப் பெரும் புள்ளி விபரங்களுடன்“இன்றைய இந்தியா (India Today)” என்ற ஒரு மிகப் பெரிய நூல் வெளியிட்ட ரஜனி பாமி தத் (Rajani Palme Dutt) என்ற அறிஞரும் ஸ்வீடன் நாட்டு வம்சாவழியில் வந்தவரே.
சிதம்பரமும் ஜான் மிர்தாலும்
இந்தியாவை ஒட்டச் சுரண்டும் ஐரோப்பியக் கம்பெனிகள், அமெரிக்கக் கம்பெனிகளின் அதிகாரிகள், சூதாட்டத்தில் ஈடுபடும் கிரிக்கெட் ஆட்டக் காரர்கள், அழகிப் போட்டி நடத்தும் நிறுவனங்கள், மூட நம்பிக்கையைப் பரப்பும் மதவெறிப் பிரச்சாரகர்கள், ஆபாசப் படங்களில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் இந்தியாவில் பயணம் செய்யவும், கூட்டங்கள் நடத்தவும், தொழில் நடத்தவும் சிதம்பரம் தலைமையிலான உள்துறை அமைச்சகம் சிறப்புச் செய்து அவர்களுக்குப் பாதுகாப்புத் தருகிறது. ஏன், உலகறிந்த கொலைகாரன் ராஜ பக்சேவும் அவன் சகோதரர்களும் இந்தியாவுக்கு வரவும் அவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கவும் இதே சிதம்பரம் தயங்கியதில்லை. இப்படிக் கொள்ளையர்கள்,கொலைகாரகள், சரச சல்லாபத் தொழில் செய்வோரை வரவேற்று அவர்களுக்கு ஜமுக்காளம் விரித்து, உடனிருந்து பாதுகாப்பும் உபச்சாரமும் செய்யும் சிதம்பரத்தின் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிவாளியை இந்தியாவுக்குள் வரக் கூடாது என்ற அறிவிப்புச் செய்துள்ளது நமக்கு வியப்பைத்தரவில்லை.
இந்தியப் பாரம்பரியம் பற்றி அடிக்கடி பேசும் சிதம்பரத்தின் முன்னோர்கள் கந்து வட்டிக்குக் கடன் கொடுத்து வந்த பரம்பரை என்பது தமிழர்கள் அறிந்த விஷயம்.தமிழரான சிதம்பரத்தின் முன்னோர்கள் (நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள்) இந்தியா,மலேசியா, பர்மா போன்ற உலகின் பல நாடுகளில் வெள்ளையர்களின் துணையோடு வட்டிக் கடைகள் நடத்தச் சென்ற போது ஐரோப்பியரான ஜான் மிர்தாலின் குடும்பம் உலகெங்கும் உள்ள அடிமைப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்தது, போராடியது. அது இன்றும் தொடர்கிறது. சிதம்பரம் கொள்ளைக்காரக் கம்பெனிகளுக்கு எடுபிடியாக,துணைவனாக இருந்து நாட்டைக் காட்டிக் கொடுக்கிறார். மிர்தால் போராடும் மக்களுக்கு துணையாக இருந்து அவர்களது நியாயத்தை பேசுகிறார். எழுதுகிறார்.
சிதம்பரத்தின் முன்னோர்கள் வெள்ளையர்களுக்கு சேவகம் செய்த காலத்தில் அதற்கு எதிராக சர்வதேச மக்களுக்காகக் குரல் கொடுத்த ஸ்வீடன் நாட்டு அறிவாளிகளின் மரபில் வந்தவர் ஜான் மிர்தால். சிதம்பரம் தன் முன்னோர்கள் சென்ற அதே துரோகப் பாதையில் செல்கிறார். மிர்தால் மக்களுக்காக பாடுபடுகிறார்.
எப்படி வேசமிட்டாலும் சிதம்பரம் போன்றவர்கள் இனம் இனத்தோடே சேரும் என்ற விதியை மீண்டும் மீண்டும் நமக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
தடையை விலக்குக
கிடைக்கும் இடங்களில் எல்லாம் தம்மை ஒரு படிப்பாளியாக அறிவாளியாகக் காட்டிக் கொள்ளும் சிதம்பரம் தாம் உண்மையில் ஒரு ஒரு பொய்யர் மட்டும் அல்ல அறிவாளிகளின் எதிரி என்பதை மீண்டும் ஒரு முறை நிலை நாட்டியுள்ளார்.அறிவாளிகளை, ஆய்வாளர்களை இந்தியாவுக்குள் நுழையவும், ஆய்வு செய்யவும்,பேசவும், எழுதவும் அனுமதியில்லை என்று அறிவிப்புச் செய்திருக்கும் மன்மோகன் சிங் சிதம்பரத்தின் கூட்டணி ஒரு நேர்மையில்லாத ஒரு அயோக்கியர்களின் கூட்டணி என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும். இதை இந்திய மாணவர்கள் அறிவாளிகள் அனுமதிக்க முடியாது, கூடவும் கூடாது. இந்திய அறிவாளிகள்,மாணவர்கள், இளைஞர்கள் பலவாறாக ஸ்வீடன் நாட்டு அறிவாளிகளுக்கு கடன் பட்டுள்ளார்கள். இந்த அநீதிக்கும் சிதம்பரத்தின் துரோகத்திற்கும் முற்றுப் புள்ளி வைக்க வேண்டியது தமிழ் நாட்டு மாணவர்கள், இளைஞர்கள், அறிவாளிகளது கடமை.
இந்திய அரசின் இந்த தடையை கண்டிக்க வேண்டியது அனைத்து சனநாயக சக்திகளின் கடமையும்கூட.
|
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Sunday, June 3, 2012
சிதம்பரத்தின் துரோகம்: ஜான் மிர்தால் இந்தியா வரத் தடை
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment