யாழ்நகர் நிருபர் : விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாவின் பூதவுடல் தகனம் செய்யப்பட்ட இடத்திலிருந்த அஸ்தி நேற்று முன்தினம் நள்ளிரவு இனந்தெரியாத ஆயுத பாணிகளால் அகற்றப்பட்டதுடன், அவ்விடத்தில் நாய்களைச் சுட்டுக்கொன்று விட்டு அவற்றின் உடல்களும் போடப்பட்டுள்ளன.
இறந்த ஆன்மாக்களைக் கூட விட்டு வைக்காத இந்த காட்டுமிராண்டித்தனத்தை மிக வன்மையாகக் கண்டிப்பதாக யாழ்.மாவட்ட முன்னாள் எம்.பி.யும் மரணச் சடங்கை முன்னின்று நடத்தியவருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் தெரிவிக்கையில்;
பார்வதி அம்மாவின் பூதவுடல் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் அக்னியுடன் சங்கமமான இரவு பத்து மணியளவில் சிதை முற்றாக சாம்பலாக, அங்கிருந்தவர்கள் வீடுகளுக்குத் திரும்பிவிட்டனர்.
நள்ளிரவில் மயானத்திற்கு வாகனமொன்று வந்துள்ளது. அந்தப் பகுதி மக்கள் அதை அவதானித்த போதும் அச்சத்தால் எவரும் வெளியே வரவில்லை.
சுமார் 40 நிமிடத்திற்குப் பின் அந்த வாகனம் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.
நேற்றுக் காலை அப்பகுதி மக்கள் மயானத்திற்குச் சென்று பார்த்த போது, பூதவுடல் எரிந்த சாம்பல் அவ்விடத்திலிருந்து சமயக் கிரியைகளுக்கு சேகரிக்க முடியாதவாறு முற்றாக அகற்றப்பட்டு வெளியே வீசப்பட்டிருந்ததுடன் அவ்விடம் முழுவதும் கழிவு எண்ணெயும் டீசலும் ஊற்றப்பட்டிருந்ததுடன், சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் மூன்று நாய்களின் உடல்களும் சிதை எரிந்த இடத்தில் போடப்பட்டிருந்தன.
இதனால் அந்தப் பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியும் சினமும் அடைந்துள்ளனர்.
இந்தக் காட்டு மிராண்டித்தனமான செயலை யார் செய்தனர், ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. எனினும் மூன்று நாய்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கொல்லப்பட்டுக் கிடந்ததால் துப்பாக்கிகள் வைத்திருப்போரே இந்தச் செயலைச் செய்திருப்பது தெளிவாகத் தெரிவதாகவும் கூறினார்.
No comments:
Post a Comment