இந்தியாவையே மலைக்க வைக்கும் அளவுக்கு நடந்திருக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் கிடைத்த அறுபதாயிரம் கோடி ரூபாயை சோனியா காந்தி, ஆ.ராசா, கருணாநிதி ஆகியோர் பங்கு போட்டிருக்கிறார்கள். அதனால் இந்த ஊழல் வழக்கில் மூவரையும் வரிசையாக கைது செய்ய வேண்டும்...’’ என்று சொல்லி அதிர்ச்சி குண்டை வீச ஆரம்பித்திருக்கிறார், ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. இந்த அதிரடி, புதிரடிகள் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. தரப்பில் கடுமையான அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில், சுப்பிரமணியன் சுவாமியை சந்தித்துப் பேசினோம்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் சோனியா காந்தியையும், கருணாநிதியையும் குற்றவாளிகள் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறீர்களே...
நான் எதையும் ஆதாரம் இல்லாமல் சொல்ல மாட்டேன். ஆரம்பத்தில் இந்த விவகாரத்தை கையில் எடுத்து தவறு நடந்திருக்கிறது என்று நான் சொன்னபோதுகூட இப்படித்தான் பலரும் நம்ப மறுத்தார்கள். ஆனால், என்ன நடந்தது? மத்திய தலைமை தணிக்கை அதிகாரி தன்னுடைய விசாரணை அறிக்கையில் 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக சொல்லிவிட்டார். விசாரணை தீவிரமாகும்போது சோனியா காந்தியும் கருணாநிதியும் கடுமையாக சிக்கிக் கொள்வார்கள். உடனே, ‘அன்று சுப்பிரமணியன் சுவாமி சொன்னதுதான் நடந்திருக்கிறது...’ என்று சொல்லப் போகிறார்கள்.
எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இப்படி குற்றம் சாட்டுகிறீர்கள்?
பிரதமருக்கு இது தொடர்பாக நான் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறேன். அந்த கடிதத்தில் மிகவும் தெளிவாக எல்லாவற்றையும் குறிப்பிட்டிருக்கிறேன். கிட்டத்தட்ட ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு மூலமாக 60 ஆயிரம் கோடி ரூபாயை கொள்ளையடித்திருக்கிறார் ஆ.ராசா. அந்தப் பணம் முழுவதையும் அவர் மட்டுமே எடுத்துக் கொள்ளவில்லை. பத்து சதவீதத்தை மட்டுமே தனக்காக எடுத்துக் கொண்டு விட்டு, மீதப்பணத்தை கருணாநிதிக்கும் சோனியா காந்திக்கும் பங்கிட்டுக் கொடுத்திருக்கிறார். முப்பது சதவீதம் கருணாநிதி குடும்பத்துக்கும் அறுபது சதவீதம் சோனியா காந்தி குடும்பத்துக்கும் போயிருக்கிறது. இதை கருணாநிதியோ, சோனியா காந்தியோ இல்லை என்று மறுக்கட்டும். அல்லது என் மீது வழக்குப் போடட்டும்.
சோனியா காந்தியின் குடும்பத்தினரை ஏன் இந்த விவகாரத்துக்குள் இழுக்கிறீர்கள்?
தொடர்பு இருக்கும்போது இழுக்கத்தானே வேண்டும்? சோனியா காந்தியின் சகோதரிகள் அனுஷ்கா, நாடியா இருவருக்கும் இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்பு உண்டு. ஆ.ராசா ஊழல் மூலம் கொள்ளையடித்துக் கொடுத்த பணத்தை சோனியா காந்தி தன்னுடைய இரு சகோதரிகள் மூலமாகத்தான் பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்திருக்கிறார்.
கணவரால் கைவிடப்பட்ட அந்த இரண்டு சகோதரிகளுக்கும் மலேசியா, ஹாங்காங், லண்டன், அமெரிக்கா, பாகிஸ்தான் என்று பல நாடுகளிலும் நண்பர்கள் உண்டு. ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் கொள்ளையடித்த பணத்தை இந்த நாடுகளில்தான் அவர்கள் முடக்கி இருக்கிறார்கள். இதற்காக துபாயைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஏற்பாடு செய்து கொடுத்த தனியார் விமானம் ஒன்றின் மூலமாக அவர்கள் பல்வேறு நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார்கள். சீனாவுக்கும் கூட அவர்கள் சென்று வந்திருக்கிறார்கள். அருகிலிருக்கும் மக்காவ் தீவு வங்கியில் பெரும்பாலான பணம் டெபாஸிட் செய்யப்பட்டிருப்பதாக எனக்குத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
ஆன்-லைன் மூலமாகவே இந்தியா-விலிருந்து ஆயிரக்கணக்கான கோடிகளை வெளிநாடுகளுக்கு டிரான்ஸ்பர் செய்திருக்-கிறார்கள். இதில் அன்னிய செலாவணி மோசடியும் நடந்திருக்கிறது. அதனால்தான் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளும் தீவிரமாக இறங்கி விசாரித்துக் கொண்டிருக்-கிறார்கள்.
இந்தப் பணமெல்லாம் வெளிநாட்டில் டெபாஸிட் செய்யப்பட்டது ஒருபக்கம் இருக்கட்டும். இந்தப் பணம் தீவிர-வாதத்-துக்கோ, மதமாற்றத்துக்கோ, இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்துக்கோ, இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தவோ பயன்-படுத்தப்பட மாட்டாது என்பதற்கான எந்த உறுதியும் இல்லை.
இதனையெல்லாம் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன். பிரதமரிடம் இது தொடர்பாக பேசியும் இருக்கிறேன்.
ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு அரசு அனுமதி இல்லாமல் ஆன்-லைன் மூலமாக பணம் பரி-மாற்றம் செய்யப்பட்டால், அது யாருக்கு எவ்வளவு செய்யப்பட்டது என்கிற விவரத்தையெல்லாம் நொடியில் அமெரிக்காவில் இருக்கும் ஒரு அமைப்பு மூலமாக கண்டறிந்து-விடலாம். அதற்கு ஒபாமா உதவக்கூடும். அதற்காக ஒபாமாவிடம் பிரதமர் பேச வேண்டும்.
கூடவே, உலக அளவில் நடந்திருக்கும் இந்த பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில், ஊழலில் ஊறித் திளைக்கும் சோனியா குடும்பத்தினர் வசமாகச் சிக்கிக் கொள்வார்கள். கருணாநிதியும் அவருடைய குடும்பத்தினரும் கட்டாயம் கம்பி எண்ணி, களி திங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
இல்லையென்றால், என்னிடம் இருக்கும் ஆதாரங்களையெல்லாம் வைத்து நானே ராசாவைத் தொடர்ந்து சோனியா காந்தி மற்றும் கருணாநிதி மீதும் கிரிமினல் வழக்குத் தொடர்ந்து, நடவடிக்கை எடுக்க வைப்பேன். இந்தியாவின் உளவு அமைப்புகள் சி.பி.ஐ., ரா, அமலாக்கப் பிரிவு எல்லாம் ஒன்றாக சேர்ந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டிய மிகப் பெரிய ஊழல், இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல். எல்லாம் சரி, இந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்குத் தொடர்பில்லாதது போல பேசுகிறீர்களே...
‘சட்ட அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகத்தின் ஒப்புதலோடுதான் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும்...’ என்று தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவிடம் பிரதமர் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். ஆ.ராசாவும் இது தொடர்பாக சட்ட அமைச்சகத்திடம் விசாரித்திருக்கிறார். அவருடைய எண்ணங்களுக்கு சட்ட அமைச்சகம் உடன்படவில்லை என்றதும், கடந்த 2007&ம் ஆண்டு நவம்பர் 2&ம் தேதி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்புகிறார் ஆ.ராசா. அதில் முழுக்க முழுக்க சட்ட அமைச்சகத்தைப் பற்றி புகார் சொல்லியிருக்கிறார். அதற்கு அன்றைக்கு மதியமே பதில் அனுப்பி இருக்கிறார் பிரதமர். ‘இரண்டு அமைச்சரவைக்குள் பிரச்னை என்றால், அமைச்சரவை கூடி முடிவெடுக்க வேண்டும். அதேபோல, அதிகாரம் படைத்த அமைச்சர்கள் குழுவிடமும் பேசி இது தொடர்பாக முடிவெடுத்து செயல்படுவதே நல்லது...’ என்று அந்தக் கடிதத்தில் சொல்லியிருக்கிறார்.
பிறகு ஒருமாதம் கழித்து 26.12.2007&-ல், அப்போது வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜியும், சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த வாகன்வதியும் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளித்துவிட்டதாக கடிதம் மூலம் பிரதமருக்குத் தெரிவித்திருக்கிறார்.
ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு மன்மோகன் சிங் ஆதரவாக இருந்ததாகவும் பிரணாப் முகர்ஜி எதிர்ப்பாக இருந்ததாகவும் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்-கிறார்கள். அதில்லை. ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு ஆரம்பத்திலிருந்தே பிரணாப் முகர்ஜிதான் ஆதரவாக இருந்திருக்கிறார். உச்ச நீதிமன்றம் கடுமையான அழுத்தத்தை மத்திய அரசுக்குக் கொடுத்ததும், சோனியா காந்தியிடம் மன்மோகன் சிங் கடுமையாக ரியாக்ட் செய்ய ஆரம்பித்துவிட்டார். உடனே காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்பு கமிட்டி கூட்டத்தைக் கூட்டி சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரணாப் முகர்ஜி, அகமது பட்டேல், சோனியா காந்தி, ஏ.கே. அந்தோணி ஆகியோர், ராசாவை பதவி விலக்கத் தேவையில்லை என்று வாதிட்டிருக்கிறார்கள். ஆனால், அதற்கு பிரதமர் சம்மதிக்கவில்லை. அதன்பிறகுதான், ராசாவை பதவி விலக வைத்திருக்கிறார்கள். இப்பப் புரியுதா... சோனியா காந்தி கடைசிவரையில் ராசாவுக்கு ஆதரவாக நின்றிருப்பது?
தற்போதைய நிலையில் ஆ.ராசா சிறையில் இருப்பதுதான் அவருக்கு நல்லது என்று சொல்லி-இருக்கிறீர்களே...
ஆமாம். ஊழலில் கொள்ளையடித்த பணத்தை அவர் கருணாநிதி குடும்பத்துக்குத்தான் கொடுத்திருக்கிறார். இப்போது அவர் வசமாக சிக்கிவிட்டார். சி.பி.ஐ. விரைவில் அவரை வளைத்துவிடும். அவர் உண்மைகளை கக்குவார். இதனால், கருணாநிதி குடும்பத்துக்கு சிக்கல் வரும். அப்படியொரு நிலையை கருணாநிதி அனுமதிப்பாரா? அதனால்தான் ராசா பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சொல்கிறேன். ‘என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது...’ என்று, அவர் தன்னுடைய நண்பர்களிடம் பதட்டமாகச் சொன்ன செய்தி எனக்கு வந்தது. பிறகுதான், ராசாவுக்கு பாதுகாப்புக் கோரி பிரதமருக்கு கடிதம் அனுப்பினேன்.
ஊழலுக்கென்று யாரும் பெரிதாக இதுவரை தண்டிக்கப்படவில்லையே...
அப்படிச் சொல்ல முடியாது. அந்த வாதத்துக்கு ராசா விஷயம் முற்றுப்புள்ளி வைக்கும். ராசா விரை-விலேயே ஜெயிலுக்குப் போவார். டிசம்பர் முதல்வாரத்திலேயே அவர் மீது ஊழல் தொடர்பாக கிரிமினல் வழக்குப் போட்டுவிடுவேன். விசாரித்து தண்டனையும் வாங்கித் தருவேன். விசா-ரணையில் சோனியா காந்தி, கருணாநிதி, கனிமொழி, ராசாத்தியம்மாள் ஆகியோர் கட்டாயம் சிக்கலுக்கு ஆளாவார்கள். முடிவில் கருணாநிதியும் ஜெயிலுக்குப் போவார். டெல்லியில் உங்களை சந்தித்த கனிமொழி, ‘ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம்’ என்று கேட்டுக் கொண்டாராமே...
யார் என்னை சந்தித்தாலும் சரி... இந்த ஊழல் விவகாரத்தில் யாரிடமும் எதற்காகவும் காம்ப்ரமைஸ் கிடையாது. இது தொடர்பாக என்னை சந்தித்த எல்லோரிடமும் நான் இதையேதான் சொல்லி வந்திருக்கிறேன். இதற்காக நிறைய பேர் என்னை சந்தித்திருக்கிறார்கள். அவர்கள் பெயரையெல்லாம் சொல்வது நாகரிகமல்ல.
தலித் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், பிராமணர்கள் ஒன்று சேர்ந்து ராசாவை ஒழித்துக்கட்ட முயற்சிக்கிறார்கள் என்கிறாரே கலைஞர்..?
அவர் வாதப்படியே வைத்துக் கொள்வோம். ‘தலித்’ என்பதால் ஊழல் செய்ய சட்டம் அனுமதித்திருக்கிறதா? சரி, இந்தியாவின் சட்டமேதையாக இருந்த தலித் தலைவர் டாக்டர் அம்பேத்கர் இப்படித்தான் ஊழல் செய்தாரா? இதில் சாதி எங்கேயிருந்து வந்தது? ஊழலைப் பொறுத்தவரையில் ஊழல் ஒரு சாதி என்றால், ஊழலுக்கு எதிரானவர்கள் இன்னொரு சாதி. மற்றபடி, சாதிப் பிரச்னையை கிளப்பி அல்ப அரசியல் நடத்தக் கூடாது. ஏற்கனவே ராமகிருஷ்ண ஹெக்டே என்கிற உயர் சாதி இந்துவை பதவி இறக்கம் செய்தேன். அதேபோல, ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்குப் போட்டேன். ஒரு வழக்கில் அவருக்கு தண்டனையும் வாங்கிக் கொடுத்தேன். அப்படியிருக்க, இதில் சாதி எங்கே வருகிறது? ஜெயலலிதா மீது போட்ட வழக்குகளை அரசுத் தரப்பில் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொன்ன கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு ஒரு வழக்கிலும் தண்டனை வாங்கித் தரவில்லையே? அப்ப, கருணாநிதி பிராமண இனத்து ஜெயலலிதாவுக்கு சாதகமாக நடக்கிறாரா? கருணாநிதி வாயில் சனி புகுந்து விட்டது. இனி, அவர் இப்படித்தான் கண்டதையும் பேசுவார். கைது பயத்தில் உளறுகிறார்.
அ.தி.மு.க. தொண்டர்கள் நடத்திக் காட்டிய ‘சாகச’க் காட்சிகளையெல்லாம் சுவாமி மறந்திருக்கலாம். ஆனால், தமிழக மக்கள் மறக்கவில்லை என்று சொல்லியிருக்கிறாரே கலைஞர்...
ஆடு நனையுதுன்னு ஓநாய் ஏன் அழ வேண்டும்? நாகரிகத்தைப் பொறுத்த வரையில் அ.தி.மு.க. என்ன? தி.மு.க. என்ன? எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். அந்த சம்பவங்களெல்லாம் இப்போது எதற்காக சொல்கிறார் கருணாநிதி? ஸ்பெக்ட்ரம் ஊழலில் பங்குண்டா என்று கேட்டால், அதற்கு பதில் சொல்ல முடியாமல் பிரச்னையை திசை திருப்புகிறார்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment