Thursday, February 24, 2011

அகில உலகத்திலும் தி.மு.க. எதிரிகள்?

 

பிச்சுப் பிடுங்கும் மீடியா
முரசொலி இதழில் ஒரு கேள்வி பதில்வடிவிலான அறிக்கையை சமீபத்தில் முதல்வர் கருணாநிதி வெளியிட்டிருந்தார். ”பத்திரிகை யாளர்களுக்கு எத்தனையோ உதவி களை நீங்கள் செய்திருக்கிறீர்கள். ஆனாலும் அவர்கள் உங்களைத் தொடர்ந்து தாக்குவதற்கு என்ன காரணம்?” என்ற கேள்விக்கு, ”தாக்கி எழுதுபவர்கள் பெயரைப் பட்டியலிட்டுப் பாருங்கள். அதைப் படித்தாலே, ஏன் அவர்கள் தாக்கி எழுதுகிறார்கள் என்ற காரணம் உங்களுக்குப் புரியும்!” என்று பொடி வைத்திருந்தார் கருணாநிதி.
செய்திகளுக்கு அவர் சாதி சாயம் பூசப்பார்க்கிறாரோ என்னவோ… கடந்த இரண்டு வாரத்திய சர்வதேச பத்திரிகைகளை திருப்பிப் பார்த்தால்… அகில உலகத்திலும் தி.மு.க. எதிரிகளே ஆக்கிரமித்திருப்பதுபோலத்தான் அர்த்தம் வரும் – கருணாநிதி பார்வையில். இந்த ‘மீடியா சாதி’ விமர்சனங்கள் என்னதான் சொல் கின்றன?
நியூயார்க் டைம்ஸ் (அமெரிக்கா. – எழுதியவர் லிடியா பால்கீரின்):
மிகச் சாதாரண வக்கீலான ஆ.ராசாவுக்கு தொலைத் தொடர்புத் துறை பற்றிய தொழில்நுட்ப அறிவோ… வர்த்தக ஞானமோ இல்லை. சுருக்கமாகச் சொன்னால், வேகமாக வளர்ந்துவரும் இந்தியத் தொலைத் தொடர்பு துறையை வழிநடத்தக்கூடிய எந்தத் தகுதியும் அவருக்கு இல்லை. ஆனால், அவருக்கு இருந்தது வேறு ஒரு தகுதி. எந்த ஒரு கட்சியின் 16 எம்.பி-க்களின் ஆதரவு இல்லாவிட்டால், காங்கிரஸ் அரசு கவிழ்ந்துவிடுமோ… அந்தக்கட்சித் தலைவரின் ஆதரவு அவருக்கு இருந் தது.
உலகத்தின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் அரசியல் எப்படி இருக்கிறது என்பதற்கு ராசாவே ஓர் உதாரணம். குடும்பம், சாதி ஆகியவற்றை அடிப்படை யாகக்கொண்ட பிராந்தியக் கட்சி கள் தங்களின் கஜானாவை நிரப்பிக் கொள்ள.. பசை யுள்ள மத்திய அமைச்சர் பதவிகளைப் பெறுகின்றன. ராசா சார்ந்து இருக்கும் தி.மு.க என்ற கட்சி, பிரிவினை என்ற முழக்கத்தின் அடிப்படையில் வளர்ந்த கட்சிதான் என்றாலும் தனது கொள்கைகளை எல்லாம் அது எப்போதோ மூட்டை கட்டிவைத்துவிட்டது. சக்கர நாற்காலியில் இருந்தபடியே ஆட்சி செய்யும் அந்தக் கட்சி யின் தலைவரும், ஓயாமல் சண்டையிட்டுக்கொள்ளும் அவரது எண்ணற்ற வாரிசுகளும் செயல்படும் முறையைப் பார்த் தால், இது என்ன கட்சியா அல்லது தனியார் கம்பெனியா என்ற கேள்வியே எழும்!
எமிரேட்ஸ் (துபாய்):
2001-ம் ஆண்டு நிர்ணயித்த அதே விலையில் 2008-ம் ஆண்டு 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை இந்திய அரசு விற்பனை செய்திருக்கிறது. இந்தத் துறையில் முன்அனுபவமோ, தொழில் நுட்ப அறிவோ இல்லாதவர்களுக்கு விற்பனை செய்ததில் 1.76 லட்சம் கோடிக்கு இந்திய அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டிருப்பதாக, அந்த நாட்டின் கணக்கீட்டாளர்களே சொல்கிறார்கள். இதையடுத்து, தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு முறைகேடாக வழங்கப்பட்ட உரிமங்கள் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி மலைபோல எழுந்து நிற்கிறது. அப்படி ஏதாவது நடக்கும்பட்சத்தில், அது இந்தியத் தொலைத் தொடர்பு துறையையே பாதிக்கும் வாய்ப்புகளும் உள்ளன.
எக்கானமிஸ்ட் (லண்டன்):
அடுக்கடுக்காகப் பல ஊழல்களை சந்தித்துக்கொண்டு இருக்கும் இந்தியாவில் இப்போது எல்லாவற்றையும்விட பெரிதான தொலைத் தொடர்புத் துறை ஊழல் ஒன்று வெளியே வந்திருக்கிறது. சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த ஊழல், தாக்குப்பிடிக்க முடியாத நெருக்கடியை சந்தித்துக்கொண்டு இருக்கும் இந்த வேலையில்… வேறு வழி இல்லாமல் இதற்குக் காரணமான அமைச்சர் ஆ.ராசாவைப் பதவி விலகச் செய்து இருக்கிறார் மன்மோகன் சிங். இதனால், இதுவரை புனிதராகக் காட்சியளித்துக்கொண்டு இருந்த பிரதமர் மன்மோகன் சிங்கும் சேற்றில் இழுக்கப்பட்டு இருக்கிறார். அந்த நாட்டின் உச்ச நீதிமன்றமே அவரைக் குறை சொல்லி இருக்கிறது. நாடாளுமன்றத்தில் ராசாவின் கட்சியின் ஆதரவு அவருக்கு வேண்டியிருந்ததால்தான் மன்மோகனால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை, பாவம்!”
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ப்ளாக் (நியூயார்க் – பிரசாந்த் அகர்வால் எழுதியது):
இந்தியாவின் மிகப் பெரிய தொழில் என்ன? தகவல் தொழில்நுட்பமா? மருந்துகள் தயாரிப்பா? அல்லது ஆட்டோமொபைலா? ஊழல்தான் இந்தியாவின் மிகப் பெரிய துறையாக இப்போது விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து நிற்கிறது. 2008-ம் ஆண்டு இந்தியாவில் வெறும் 30 கோடி தொலைத் தொடர்புகள் மட்டுமே இருந்தன. அதனால், புதிதாக 2ஜி எனப்படும் இரண்டாவது தலைமுறை டெலிபோனுக்கான நேரம் வந்தபோது… உலகின் அத்தனை பெரிய தொலைத் தொடர்பு கம்பெனிகளும் இதில் ஆர்வம் காட்டின. ஆனால், அரசு ஏலமே விடவில்லை. ஏனெனில், தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ராசா தன் சக அமைச்சர்களின் யோசனைகளை மட்டுமல்ல… டெலிகாம் ரெகுலேட்டர் யோசனைகளையும் புறம் தள்ளிவிட்டு முதலில் வந்தவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கி இருக்கிறார்.
இந்த முறைகேட்டால் அரசுக்கு எவ்வளவு வருமான இழப்பு ஏற்பட்டது என்பதை மக்களுக்கு விளக்க, இந்தியப் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் திணறிக்கொண்டு இருக்கின்றன. பூஜ்யம் என்ற எண்ணை உலகுக்குக் கொடுத்த இந்திய நாட்டில் கோடிக்கு மேல் உள்ள பெரிய தொகையைக் குறிப்பிட வார்த்தைகளே இல்லை. (பில்லியன், ட்ரில்லியன் போன்ற வார்த்தைகளுக்கு இணையான வார்த்தைகள் இந்தியாவில் புழக்கத்தில் இல்லை)
கார்டியன் (இங்கிலாந்து இதழில் பங்கஜ் மிஸ்ரா):
நீரா ராடியா விரும்பியது மாதிரியே அவரது வேட்பாளரான ராசா மத்திய அமைச்சரவையில் தொலைத் தொடர்பு அமைச்சராக ஆனார். நீரா ராடியாவின் வாடிக்கையாளரான டாடா உட்பட பல நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை உரிமங்களை விற்றதில் அமைச்சரான ராசா, நாட்டுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு இழப்பு ஏற்படுத்தி இருக்கிறார். இதையடுத்து எழுந்த பலமான நெருக்கடிகளின் காரணமாக, ராசா அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். இப்போது இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் நிலையை, அந்நாட்டின் தலைவரான சோனியாவே இப்படி வர்ணித்திருக்கிறார். ‘நாட்டின் பொருளாதாரம் நாலா திசைகளிலும் விரிவடைந்து கொண்டேயிருக்கிறது. ஆனால், நமது தார்மிக உலகம் சுருங்கிக்கொண்டே இருக்கிறது. எந்த நோக்கத்துக்காக நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் பாடுபட்டார்களோ… அந்த நோக்கங்கள் இப்போது தோல்வியடைந்துவிடுமோ என்ற அச்சம் எழுந்திருக்கிறது!’ என்கிறார். இதையே நாமும் திருப்பிச் சொல்ல வேண்டி இருக்கிறது!
இவை எல்லாம் படித்த பிறகு… கருணாநிதி சொல்லும் காரணம் ஏதாவது உங்களுக்குப் புரிகிறதா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...