சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. மேலும், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர்.
வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துகள் சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடி அபராதமும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா ரூ. 10 கோடி அபராதமும் விதித்து, கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பளித்தார்.
இதைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்தும், தண்டனை, அபராதத்தை ரத்து செய்யக் கோரியும், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை விசாரிக்க கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தலைமையில் சிறப்பு இருக்கை அமைக்கப்பட்டது.
கடந்த ஜனவரி 5-ஆம் தேதி முதல் மார்ச் 11-ஆம் தேதி வரை இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி குமாரசாமி, மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை திங்கள்கிழமை அறிவித்தார்.
தீர்ப்பு விவரம்:
மொத்தம் 919 பக்கங்களைக் கொண்ட இந்தத் தீர்ப்பின் சாராம்சம் வருமாறு:
மேல்முறையீடு செய்திருப்பவர்களின் வழக்குரைஞர்கள், பிரதிவாதி வழக்குரைஞர்கள், சிறப்பு அரசு வழக்குரைஞர் பி.வி.ஆச்சார்யா, சுப்பிரமணியன் சுவாமி, க.அன்பழகன் ஆகியோரின் எழுத்துப்பூர்வமான வாதங்களைப் பரிசீலித்த பிறகு, ஒருசில கேள்விகள் எழுகின்றன.
மேல்முறையீடு செய்துள்ள ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான குற்றங்களும், தண்டனையும் சரியானவை தானா? ஜெயலலிதா பெயரில் சொத்துகள் குவிக்கவும், பண ஆதாயம் பெறவும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் அவருடன் குற்றவியல் கூட்டுச் சதியில் ஈடுபட்டார்களா?
இந்தக் கேள்விகளுக்கு என்னுடைய பதில் வருமாறு:
சட்டப் போராட்டம் என்ற போர்வையில் அரசியல் லாபங்களுக்காக வழக்குத் தொடுக்கப்படுவதை ஊக்குவிக்கக் கூடாது. சட்ட நடைமுறைகள், அரசியலமைப்புச் சட்டம், குற்றவியல் நடைமுறைகளுக்கு உள்பட்டு குற்றவாளிகளின் உரிமைகளைப் பறிக்கக் கூடாது.
வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துகள் குவித்ததாகக் கூறப்படும் கணக்குகளை ஆராய குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு விசாரணை அதிகாரி வாய்ப்பளிக்க வேண்டும்.
அரசு ஊழியர்களின் வருமானத்துக்குப் பொருந்தாத சொத்துக் குவிப்பைக் கணக்கிடும்போது, தெரிந்த வருமானத்தின் மொத்தத் தொகையில் 20 சதவீத கூடுதல் வருமானத்தை அனுமதிக்கலாம் என்று 1989-இல் காவல் துறையின் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு வழங்கிய வழிகாட்டுதலில் ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
வருமானத்துக்குப் பொருந்தாத சொத்து என்பதை வரையறுக்கும் விகிதம் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. எனவே, தெரிந்த வருமானத்தைக் காட்டிலும் கூடுதலாக உள்ள சொத்துகள் குறித்து சொந்த நிலைப்பாட்டை எடுக்க நீதிமன்றத்துக்கு சுதந்திரம் உள்ளது.
சொத்துகளைக் குவிப்பதற்காக ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவியல் கூட்டுச் சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரத்தை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது.
கட்டுமானம் தொடர்பாக பொதுப் பணித் துறைப் பொறியாளர்களின் மதிப்பீடுகள் அதிகப்படியாக உள்ளன என்று மேல்முறையீடு செய்துள்ளவர்களின் வழக்குரைஞர் கூறுகிறார். பொதுப் பணித் துறையினரின் மதிப்பீடுகள் அளவுக்கு அதிகமாக உள்ளன. எனவே, மொத்தக் கட்டுமானச் செலவினங்களை ரூ. 5,10,54,060 என மதிப்பிட்டுள்ளேன்.
திருமணச் செலவினங்களும் சரியாக மதிப்பிடப்படவில்லை. திருமணச் செலவினங்களுக்கு மணமகள் வீட்டார்தான் பொறுப்பாவார்கள்.
போயஸ் தோட்டத்தில் 4 பேரும் ஒன்றாகக் குடியிருந்ததை அரசுத் தரப்பு சுட்டிக் காட்டுகிறது. சொத்துகளின் பத்திரப் பதிவுகள் ஜெயலலிதாவின் வீட்டில் நடந்ததாகவும், அந்த வீட்டில் 4 பேரும் ஒன்றாகக் குடியிருந்ததாகவும் கூறுவதை ஏற்க இயலாது.
4 பேரும் அரசுடைமை வங்கியிலிருந்து ரூ. 24,17,31,274 கடனாகப் பெற்று, அசையாச் சொத்து வாங்கியதை சட்ட விரோதம் என்று கூற முடியாது.
சொத்துக் குவிப்புக்கு ஜெயலலிதா உடந்தையாக இருந்தார் அல்லது கூட்டுச் சதியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டை அரசுத் தரப்பு சரியான ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தவறிவிட்டது.
இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆதாரங்களைச் சரியான முறையில் கணிக்க விசாரணை நீதிமன்றம் தவறி விட்டது.
கிருஷ்ணானந்த் அக்னிஹோத்ரி வழக்கில் வகுக்கப்பட்ட விதியின்படி, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரது நிறுவனங்களின் மொத்த சொத்துகள், வருமானத்தைக் கணக்கிட்ட பிறகு, வருமானத்துக்குப் பொருந்தாத சொத்துகளைக் கணக்கிட முடியும்.
தமிழக ஊழல் தடுப்பு, கண்காணிப்புத் துறையின் மதிப்பீட்டின்படி 4 பேர் மற்றும் நிறுவனங்களின் வருமானத்துக்குப் பொருந்தாத சொத்து மதிப்பு ரூ. 66,44,73,573. கட்டுமானச் செலவை ரூ. 22,69,34,885 ஆகவும், திருமணச் செலவை ரூ. 6,16,36,222 ஆகவும் மறு மதிப்பீடு செய்ததில் மொத்த பொருந்தாத சொத்து மதிப்பு ரூ. 37,59,02,466.
4 பேர் நிறுவனங்களின் மொத்த வருமானம் ரூ. 34,76,65,654. அப்படியானால், மொத்த சொத்தில் மொத்த வருமானத்தைக் கழித்தால் வருமானத்துக்குப் பொருந்தாத சொத்து மதிப்பு ரூ. 2,82,36,812 ஆகும். இது 8.12 சதவீதமாகும்.
கிருஷ்ணானந்த் அக்னிஹோத்ரி வழக்குப்படி, வருமானத்துக்குப் பொருந்தாத சொத்து மதிப்பு, மொத்த வருமானத்தில் 10 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யத் தகுதியுடையவர்கள் ஆவர்.
வருமானத்துக்குப் பொருந்தாத சொத்து விகிதம் 8.12 சதவீதம் என்பது மிகவும் குறைவாகும். எனவே, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை விடுதலை செய்கிறேன். இவர்கள் அனைவரும் நிரபராதிகள் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபணமாகியுள்ளது.
கீழமை சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானதாகும். எனவே, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரையும் விடுதலை செய்கிறேன்.
கீழமை சிறப்பு நீதிமன்றம் 4 பேருக்கும் விதித்த தண்டனையும், அபராதத் தொகையும் ரத்து செய்யப்படுகின்றன. 4 பேரின் பிணைப் பத்திரங்களையும் விடுவிக்கிறேன்.
இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட அசையும், அசையாச் சொத்துகள் குறித்து கீழமை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிடுகிறேன் என்று நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்தார்.
கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்த, 919 பக்க தீர்ப்பின் முக்கிய பகுதிகள்: சொத்துக்களின் மொத்த மதிப்பு, 37.59 கோடி ரூபாய். மொத்த வருமானம், 34.76 கோடி ரூபாய். சொத்துக்களின் மொத்த மதிப்பில் இருந்து, வருமானத்தை கழிக்கும்போது, 2.82 கோடி ரூபாய் அதிகமாக வருகிறது. இதை சதவீத கணக்கில் பார்த்தால், 8.12 சதவீதம். கிருஷ்ணானந்த் அக்னிஹோத்ரி வழக்கில், சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவில், 'வருமானத்திற்கு அதிகமாக, 10 சதவீத அளவில் சொத்துக்கள் இருந்தால், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை பெற உரிமை உள்ளது' என, தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திர அரசு பிறப்பித்த சுற்றறிக்கையில், 'வருமானத்திற்கு அதிகமான சொத்து, 20 சதவீதம் அளவிற்கு அனுமதிக்கலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களின் மதிப்பு, 10 முதல் 20 சதவீதத்திற்குள் இருந்தால், அதை அனுமதிக்கப்பட்ட வரம்பாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.