வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு விபத்து காப்பீடு அளிக்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு, பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. ஆனால், அதற்கேற்ப பலன் கிடைக்குமா என்ற சந்தேகமும் எழுந்து உள்ளது.
சமூகப் பாதுகாப்பின் அடிப்படையில், வங்கியில் கணக்கு வைத்திருப்போருக்கு, 12 ரூபாய் கட்டணத்தில், இரண்டு லட்சம் ரூபாய்க்கு விபத்து காப்பீடு செய்யும் திட்டம், 'பிரதமர் ஜன்தன் யோஜனா' மூலம் அமலுக்கு வந்துள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட யுனைடெட் இந்தியா, ஓரியண்டல், நேஷனல், நியூ இந்தியா காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வங்கி கிளைகளிடமிருந்து கணக்கு வைத்திருப்பவர்களின் பட்டியலை பெற்றுக் கொண்டு, வங்கி கிளையின் பெயருக்கு காப்பீட்டு பாலிசியை, காப்பீட்டு நிறுவனங்கள் அளிக்கின்றன. ஒவ்வொரு வாடிக்கையாளர் கணக்கில் இருந்தும், 12 ரூபாயை பிடித்தம் செய்து, வாடிக்கையாளரின் எண்ணிக்கைக்கு ஏற்ப, காப்பீட்டு நிறுவனத்துக்கு பிரிமியம் தொகையை, வங்கிக் கிளை அளிக்கும். இத்திட்டத்தில், காப்பீடு செய்யும் நாளில் இருந்து, ஓராண்டுக்குள் விபத்தில் சிக்குபவர்களுக்கு, காப்பீட்டு நிறுவனம், இழப்பீட்டுத் தொகையை அளிக்கும். காப்பீட்டு பாலிசி, வாடிக்கையாளர்களின் பெயருக்கு அளிப்பதில்லை. வங்கிக் கிளையின் பெயருக்குத் தான் அளிக்கப்படுகிறது. எனவே, விபத்தில் வாடிக்கையாளர் பாதிக்கப்பட்டால், அவருக்கான இழப்பீட்டைவங்கி மூலமே கோர முடியும். வங்கியின் அன்றாடப் பணிகளுக்கிடையே, வாடிக்கையாளரின் காப்பீட்டு தொகையை பெற்றுத் தருவதில், போதிய கவனம் செலுத்த முடியாது. இதற்கென, தனி பணியாளர் இல்லை என்று வங்கியாளர்கள் தெரிவிக்கின்றனர். வாடிக்கையாளர் ஒருவருக்கு காப்பீடு செய்வது குறித்த தகவலை, வங்கி தனியாக அளிப்பதில்லை. காப்பீட்டு பாலிசியும்; வாடிக்கையாளர் பெயரில் இருப்பதில்லை. இதனால், பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு, விபத்து காப்பீடு செய்த தகவலே தெரிவதில்லை. இதனால், விபத்தில் பாதிக்கப்பட்டவர், இழப்பு காப்பீடு கோருவதே இல்லை என்றும் கூறுகின்றனர்.
விபத்து காப்பீட்டு விவரத்தை, வாடிக்கையாளர்களின் மொபைல் எண்ணுக்கு அனுப்ப வேண்டும். அதில், எந்த நாளில் இருந்து எந்த நாள் வரை, காப்பீடு செல்லும்; பாலிசி எண் போன்றவற்றை தெரிவிக்கவேண்டும். காப்பீடு செய்யப்பட்ட வாடிக்கையாளர் விவரங்களை, வங்கிகள் எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும். இதே தகவல்களை, காப்பீட்டு நிறுவனங்களும் பராமரிக்க வேண்டும் என, வங்கி வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். விபத்து காப்பீட்டின் மூலம் சமூக பாதுகாப்பு அளிப்பது, வரவேற்புக்கு உரியது. வாகன நெரிசல் அதிகரித்தபடி இருக்கும் இந்த காலத்தில், இது போன்ற திட்டம் மிகவும் பயனுள்ளது. ஆனால், இவற்றை முறையாக அமல்படுத்த வேண்டும் என்றும், வங்கி வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment