Sunday, March 11, 2012

ஊழல் ஒழிய ஓர் அருமருந்து...!


"ஊழல்வாதிகளுக்கு காங்கிரஸ் கட்சியில் இடமில்லை. காங்கிரஸ் ஊழலை முழுமையாக எதிர்க்கிறது. எங்கள் கட்சிக்காரர்கள் யாராவது ஊழல் செய்தால் அவர்களின் அரசியல் வாழ்வு அஸ்தமித்துவிடும். அந்த அளவுக்கு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்று உறுதி யளிக்கிறேன். கட்சியிலிருந்து மட்டுமல்ல. நாட்டிலிருந்தே ஊழலை ஒழிக்க வேண்டும் என்று உறுதிபூண்டுள்ளேன்'' என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்யும்போது அறிவித்துள்ளார்.

சுதந்திர இந்தியாவில் முதல் பெரிய ஊழலைச் செய்தவர் பிரதமராகவும் காங்கிரஸ்கட்சியின் தலைவராகவும் இருந்த ராசீவ்காந்தி என்பதை நாடு இன்னும் மறக்கவில்லை. போபர்ஸ் பீரங்கி ஊழலில் 70 கோடிக்கு மேல் கையூட்டுப் பெற்றதாக ராசீவ் காந்தி மீது எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு சுமத்தின. இக்குற்றச் சாட்டை நாடாளுமன்ற விசாரணைக்குழு உறுதிசெய்தது. அதன்பேரில் நடவடிக்கை எடுக்க முடுக்கிவிடப்பட்ட சி.பி.ஐ. கடைசிவரை எந்த நடவடிக்கை யும் எடுக்காமல் போக்குக் காட்டியது. குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான குத்ரோச்சி இந்தியாவிலிருந்து தப்பிச் செல்ல மறைமுகமாக உதவியது. இந்த உண்மைகளையெல்லாம் மறைத்துவிட்டு ராகுல் காந்தி ஊழலை ஒழிக்க கட்டியம் கூறுவது சிரிப்புக்கு இடமானது.

நீண்ட காலத்திற்கு முன் நடை பெற்ற போபர்ஸ் ஊழலை ராகுல் காந்தி மறந்திருக்கலாம். ஆனால் அண்மைக் காலத்தில் நடைபெற்ற ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் போட்டி ஊழல், மும்பை ஆதர்ச வீட்டுவசதி கழக ஊழல், இந்திய பிரிமியர் கிரிக்கெட் லீக்கில் நடைபெற்ற பெரும் ஊழல் ஆகிய இந்த முக்கியமான ஊழல்கள் அனைத்திலும் காங்கிரஸ்காரர்கள் சம்பந்தப்பட்டிருந்தார்கள். அதிலெல்லாம் காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தியும் என்ன நடவடிக்கைகளை எடுத்தனர் என்பதை நாடறியும்.

1,76,000 கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு இழப்பை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஊழலில் தி.மு.க. அமைச்சர் இராசா மட்டுமல்ல, மத்திய உள்துறை அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப. சிதம்பரமும் சம்பந்தப் பட்டிருக்கிறார் என்பது அம்பலமானது. சிதம்பரத்தின் தலைக்கு மேல் உச்சநீதி மன்றத்தின் வாள் தொங்கிக்கொண்டிருக் கிறது. சிதம்பரம் காங்கிரஸ்காரர்.

அதைப்போல காமன்வெல்த் போட்டிக்கான ஏற்பாடுகளுக்காகச் செல விடப்பட்ட 70,000 கோடி ரூபாய்களில் பாதிக்கு மேற்பட்ட தொகை சூறையாடப் பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டின் பேரில் விளையாட்டுப்போட்டிக் குழுவுக்கு தலைவரான மூத்த காங்கிரஸ் தலைவராக இருந்த சுரேஷ் கல்மாடி கைதுசெய்யப்பட்டு வழக்கு நடை பெற்றுக்கொண்டிருக்கிறது. சுரேஷ் கல்மாடி காங்கிரஸ்காரர்.

கார்கில் போரில் உயிர்த்தியாகம் செய்த படைவீரர்களின் குடும்பங் களுக்கு வீடுகள் கட்டிக்கொடுப்பதற்காக மும்பையில் ஆதர்சு வீட்டுவசதி குழு அமைக்கப்பட்டு பெரும் ஊழல் நடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்து மகாராஷ்ட்ர காங்கிரஸ் முதலமைச்சராக இருந்த அசோக் சவான் பதவி விலக நேர்ந்து வழக்கைச் சந்தித்துக்கொண்டி ருக்கிறார். அசோக் சவான் காங்கிரஸ்காரர்.

இந்திய பிரிமீயர் லீக் சார்பில் நடத்தப்பட்ட கிரிக்கெட்போட்டிகளில் பெருமளவு ஊழல் நடைபெற்று அதன் காரணமாக மத்திய காங்கிரஸ் அமைச் சராக இருந்த சசிதரூர் பதவி விலக நேர்ந்து வழக்கையும் சந்தித்துக் கொண் டிருக்கிறார். சசிதரூர் காங்கிரஸ்காரர்.

மேற்கண்ட முக்கிய ஊழல் களைத் தவிர கடந்த 20 ஆண்டுக் காலத்தில் ஈராக் எண்ணெய்க்கான உணவுத்திட்டத்தில் பெரும் ஊழல் நடைபெற்று காங்கிரஸ் அமைச்சரான நட்வர்சிங் பதவி விலக நேர்ந்தது. அவர் காங்கிரஸ்காரர்.

சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் 14 ஆயிரம் கோடி ஊழல், பங்குச் சந்தையில் ஹர்சத் மேத்தா செய்த ரூ.4 ஆயிரம் கோடி ஊழல், கேத்தன் பரேக் செய்த ரூ.1000 கோடி ஊழல் போன்ற வற்றை சொல்லிக்கொண்டே போனால் இடமிருக்காது. இவற்றில் சம்பந்தப்பட்ட எல்லோருமே காங்கிரஸ்காரர்கள்.

இத்தனை முக்கிய ஊழல் களையும் மூடி மறைப்பதற்கு மத்திய காங்கிரஸ் ஆட்சி பெருமுயற்சி செய்தது. ஆனால் உச்சநீதிமன்றம் தலையிட்டு சி.பி.ஐ. விசாரணையை தனது நேரடிக் கண்காணிப்பில் எடுத்துக்கொண்ட பிறகே சம்பந்தப்பட்ட காங்கிரஸ் அமைச்சர்கள் வழக்குகளைச் சந்திக்க நேர்ந்தது என்பதை ராகுல் காந்தி வசதியாக மறந்துவிட்டார்.

அவரது குடும்பத்தின் மீதே பெரும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டுள்ளன என்பதை அவரால் மறைக்க முடியாது. குற்றம்சாட்டியவர்கள் நமது நாட்டு எதிர்க்கட்சிகளோ அல்லது பத்திரிகைகளோ அல்ல. 1991ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதியன்று சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த நcட்ஜ்ண்zங்ழ் ப்ன்ள்ற்ழ்ண்ங்ழ்ண்ங் என்ற முக்கியமான பத்திரிகை ராசீவ் காந்தி குடும்பத்தின் மீது அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுக்களை வெளியிட்டது. ஊழல் மூலம் கிடைத்த பணத்தை சுவிஸ் வங்கிகளில் ராசீவ் காந்தி மறைத்து வைத்திருக்கிறார். அதா வது ராகுல் காந்தி மைனராக இருந்த போது ரூ. 10 ஆயிரம் கோடி சோனியா காந்தி பேரில் போட்டுவைக்கப் பட்டுள்ளது என இந்த இதழ் பகிரங்க மாக வெளியிட்டது. ஆனால் இதற்கு சோனியாகாந்தியோ அல்லது ராகுல் காந்தியோ அல்லது அவர்கள் சார்பில் வேறுயாருமோ இதுவரை மறுப்புத் தெரி விக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2009ஆம் ஆண்டு நாடாளு மன்றத் தேர்தலின் போது பா.ஜ.க. தலைவர் அத்வானி வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களுக்குச் சொந்தமான பணத்தை தாங்கள் ஆட் சிக்கு வந்தால் பறிமுதல் செய்வோம் என பகிரங்கமாக அறிவித்தார். மற்ற எதிர்க்கட்சிகளும் ஆதரித்தன. ஆனால் காங்கிரஸ் பதவிக்கு வந்தபிறகுகூட இதைப்பற்றி மூச்சுவிடவில்லை. இந்தப் பிரச்சினையை மூடிமறைக்கவே தொடர்ந்து முயற்சி செய்கிறது.

2008ஆம் ஆண்டு பிப்ரவரியில் செர்மன் நாட்டு வங்கியில் இரகசியக் கணக்குகள் வைத்துள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களின் பட்டியலையும் விவரத்தையும் அறிவிக்கத் தயார் என அந்நாட்டு நிதியமைச்சர் கூறினார். ஆனால் மத்திய காங்கிரஸ் ஆட்சி அதைக்கேட்டுப் பெறவும் - அந்தப் பணத்தை பறிமுதல் செய்யவும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால் ராகுல் காந்தி மக்களை ஏமாற்றுவதற்காக நாட்டிலிருந்து ஊழலை அறவே ஒழிப்பதாக வாய்த்தம்பட்டம் அடிக்கிறார்.

மன்மோகன்சிங் நாட்டின் நிதியமைச்சராகவும், பிரதமராகவும் ஆனபிறகு புதிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகம் செய்து நடைமுறைப்படுத்தினார். கடந்த 20 ஆண்டுக்காலத்தில் நமது நாட்டில் இக்கொள்கையின் விளைவாக இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட ஏழை விவ சாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்ற உண்மை தெரிந்தும் கூட ராகுல் காந்திக்கு அதிர்ச்சி ஏற்படவில்லை. மத்திய காங்கிரஸ் ஆட்சியினால் இந்தியப் பொருளாதார நிலை குறித்து ஆராய் வதற்காக அமைக்கப்பட்ட சென்குப்தா குழு நமது நாட்டில் 80 கோடி மக்களுக்கு மேல் நாளொன்றுக்கு ரூ.20 கூட வருமானமில்லாமல் வாடுகிறார்கள் என்று கூறியுள்ளதை ராகுல் காந்தி அறிவாரா? ஆனால் மக்களை ஏமாற்றுவதற்காக ஒடுக்கப்பட்ட மக்களின் குடிசைகளுக்குச் சென்று சாப்பிடுவதாக நாடகமாடுகிறார்.

நமது நாட்டில் 10 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலை வாய்ப்பில்லாமல் தவிக்கிறார்கள் என் பதையாவது அவர் உணர்ந்திருக்கிறாரா? இந்தியாவில் வாழும் மக்களில் 26 சதவீதமானவர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழேயே இன்னும் வாழுகிறார்கள் என்பதாவது அவருக்குத் தெரியுமா? அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான திட்டமோ முயற்சியோ செய்யாமல் அவர்களின் சோற்றில் பங்குபோட்டுக்கொள்வது என்பது மன்னிக்கமுடியாததாகும்.

அவருடைய கொள்ளுப்பாட்ட னார் ஜவஹர்லால் நேரு இந்தியாவின் முதல் பிரதமராக இருந்தபோது, காஷ்மீரத்தை இந்தியாவுடன் இணைப் பது பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சேக் அப்துல்லா புதுடில்லி வந்தார். அவருக்கும் அவரது குழுவினருக்குமாக அரசாங்க கார் ஒன்று ஒதுக்கப்பட்டி ருந்தது. அது போதாது என்பதற்காக அதிகாரிகள் வாடகைக் கார் ஒன்றிற்கும் ஏற்பாடு செய்தார்கள், அதற்கு 1200 ரூபாய் செலவாயிற்று. ஆனால் கணக் காய்வாளர்கள் இந்தச் செலவு அனாவசி யமான செலவு என்றுகூறி ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டனர். இந்த விவரம் அறிந்த பிரதமர் நேரு உடனடியாக 1200 ரூபாய்க்கு தனது சொந்தப் பணத்தில் காசோலை எழுதி அந்தக் கணக்கை முடித்துவைத்தார் என்பதாவது ராகுல் காந்திக்கு தெரியுமா?

நேருவின் காலத்தில் முதலாவது பெரும் ஊழலாகக் குற்றம்சாட்டப்பட்ட முந்திரா ஊழலில் சம்பந்தப்பட்ட பணம் வெறும் 3 கோடிதான். அந்தக் குற்றச் சாட்டை நாடாளுமன்றத்தில் எழுப்பிய வர் ராகுல்காந்தியின் பாட்டனாரும் இந்திராகாந்தியின் கணவருமான பெரோஸ் காந்திதான். அவரும் காங் கிரஸ்காரர். குற்றச்சாட்டுக்கு ஆளான நிதியமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி நேருவிற்கு மிகமிக நெருக்கமானவர். ஆனாலும் நேரு உடனடியாக விசார ணைக் கமிசன் அமைத்து விசாரிக்க ஏற்பாடு செய்து அதன் விளைவாக டி.டி.கே. பதவி விலக நேர்ந்தது. எத்த கைய சிறந்த முன்னுதாரணங்களை அவருடைய கொள்ளுப்பாட்டனாரும் பாட்டனாரும் ஏற்படுத்திவிட்டுச் சென்றி ருக்கிறார்கள் என்பது கூட தெரியாமல் ஊழலை ஒழிப்போம் என தவளைக் கூச்சல் போடுகிறார் ராகுல் காந்தி.

நேரு ஒருபோதும் ஊழலை ஒழிப் பேன் என வாய்க்கூச்சல் போடவில்லை. செயலில் அதை நிரூபித்துக் காட்டினார்.

சோனியா காந்தி காங்கிரஸ் தலை வராகவும் ராகுல் காந்தி பொதுச் செயலாளராகவும் பொறுப்பேற்ற பிறகு இந்திய நாடே கண்டிராத வகையில் அடுக்கடுக்கான பெரும் ஊழல்கள் நடைபெற்றன. அவற்றை மூடிமறைக்க மத்திய ஆட்சி முயற்சி செய்ததே தவிர அதை விசாரித்து நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. உச்சநீதிமன்றம் தலை யிட்டு குட்டிய பிறகே விசாரணைகள் நடைபெற்றுவருகின்றன.

இந்த நிலையில் கட்சியிலிருந்தும் நாட்டிலிருந்தும் ஊழலை ஒழிப்பேன் என்று வீரவசனம் பேசும் ராகுல் காந்தி, தனது வார்த்தையைக் காப்பாற்ற வேண்டுமானால் ஒன்றுமட்டும் செய்தால் போதும். அவரது குடும்பம் வெளியேறி னாலே போதும் ஊழலின் ஊற்றுக்கண் அடைக்கப்பட்டுவிடும். இதை யாராவது அவருக்குத் தெரியப்படுத்துங்களேன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...