Friday, December 1, 2023

நதிபோல் ஓடுவோம்...

 திமுகவின் இளைஞர் அணி மாநாடு சேலத்தில் டிசம்பர் 17ம் தேதி நடக்கிறது.

இளைஞர் அணி மாநாடு தொடர்பாக 2007 இல் நடந்த சம்பவம்...
கடந்த 16.12.2007 அன்று திருநெல்வேலியில் இளைஞரணி மாநாடு அப்போதைய மாநில இளைஞரணி செயலாளர் மு க ஸ்டாலின் தலைமையில் நடந்தது. அதில் நடக்கும் புகைப்படக் கண்காட்சியில் வைக்க வேண்டும் என்று திருச்சியில் 1996ம் ஆண்டு நடந்த திமுக மாநாட்டில் எடுக்கப்பட்ட சில படங்களை ஸ்டாலினே கேட்கிறார்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு தலைமை எதைச் சொன்னாலும் செய்து முடிக்கும் செயல்வீரர் நேரு. தளபதி ஒரு விஷயம் கேட்கிறார் அதுவும் தன்னுடைய படத்தையே கேட்கிறார் என்றால் அதை செய்து முடித்து விட்டு தான் அடுத்த வேலையை பார்ப்பார் என்பது எல்லோருக்கும் தெரியும்.
அந்த மாநாட்டுக்கு படம் எடுத்த திருச்சி சாலை ரோட்டில் உள்ள "ப்ரொபஷனல் வீடியோஸ்" நிறுவனத்தில் அந்தப் படங்கள் வேண்டும் என்று கேட்கிறார். அவர்களோ 'படங்களை கொடுத்த போதே நாங்கள் நெகட்டிவ்களையும் ஒப்படைத்து விட்டோம்' என்கிறார்கள். அது எங்கே இருக்கிறது என்று தன்னுடைய அலுவலகத்தில் உள்ளவர்களை கேட்க அவர்களோ, 'அதையெல்லாம் அப்போதே அறிவாலயத்துக்கு அனுப்பி விட்டோம்' என்று சொல்லிவிட்டார்கள்.
ஆக, படத்தை எடுத்த நிறுவனத்திலும் நெகட்டிவ் இல்லை;
திருச்சி திமுக அலுவலகத்திலும் இல்லை;
அறிவாலயத்தில் கேட்டுப் பார்த்தால் அங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை.
அப்போதைய துணை மேயர் அன்பழகன், திருச்சி தினகரன், தினமலர் உள்ளிட்ட தினசரி பத்திரிகையாளர்கள் மத்தியில் விசாரித்துப் பார்க்கிறார்.
சில புகைப்படக்காரர்கள் 'அந்த சமயத்தில் நான் திருச்சியில் இல்லை' என்று சொல்லிவிட்டார்கள். அந்த சமயத்தில் திருச்சியில் இருந்த புகைப்படக்காரர்கள் 'அதை எங்கே வைத்தேன் என்று தெரியவில்லை' என்று சொல்லிவிட்டார்கள். 'அமைச்சர் ரொம்ப டென்ஷனா இருக்காரு... யாருமே பக்கத்துல போக முடியல. எல்லாரையும் கடிச்சு கொதறிக்கிட்டு இருக்காரு. தயவு செய்து கொஞ்சம் தேடிப் பார்த்து எடுத்து குடுங்க. என்ன வேணாலும் செய்றேன். எவ்வளவு பணம் வேன்னாலும் குடுக்கிறேன்' என்று கெஞ்சி இருக்கிறார் அன்பழகன்.
அவர்களும் ஓரிரு நாள் தேடிப் பார்த்து ' இல்லை ' என்று சொல்லிவிட்டார்கள்.
ஆக மொத்தத்தில் எல்லோரும் கை விரிக்க, படங்கள் இல்லை என்ற தகவல் நேருவுக்கு வந்து சேர்கிறது. படத்தை எடுத்த ப்ரொபஷனல் வீடியோஸ் உரிமையாளர் சேகர் அண்ணன் 'இந்தப் படங்கள் கிடைக்கும் வரை நீ எங்கேயும் போகக்கூடாது' என்று நேருவின் அலுவலகத்திலேயே உட்கார வைக்கப்பட்டார். (இப்படி மறைமுக நிர்ப்பந்தம் கொடுத்தால் ஏதாவது செய்து அந்த படத்தை எடுத்துக் கொடுப்பார் என்கிற நல்ல நோக்கத்தில்)
அந்த நான்கு, ஐந்து நாட்களும் கல்யாண பத்திரிகை கொடுக்கப் போனவர்கள் கூட கடுப்படித்து துரத்தப்பட்டார்கள்;
பிறந்தநாள் வாழ்த்து வேண்டி அவர் (நேரு) காலில் விழுந்தவர்களுக்கு ஜென்மத்துக்கும் மறக்க முடியாத வசவுகள் கிடைத்தன. அன்பாய் நேரு பேசினாலே அதில் செந்தமிழ் கலந்து தான் இருக்கும்; இந்தப் பிரச்சனை தந்த ஆத்திரத்தில் செம்மையான செந்தமிழ் அர்ச்சனை எல்லோருக்கும் கிடைத்தது.
தளபதி சொன்ன வேலையை செய்ய முடியாமல் படபடத்துக்கிடந்த அந்த நான்கு நாட்களும் நிச்சயம் அவர் தூங்கி இருக்க மாட்டார் என்பது உண்மை.
வேறு வழியே இல்லை என்கிற நிலையில் (துணை மேயர்) திமுகவின் நகரச் செயலாளர் அன்பழகன் என்னைத் தொடர்பு கொண்டார். தில்லை நகர் ஐந்தாவது கிராஸில் மட்டும் அந்த மழை சீசனையும் தாண்டி ' அனல் ' அடித்துக் கொண்டிருக்கும் விஷயத்தை சொல்லி, 'உங்ககிட்ட கேட்டா கிடைக்கும் னு சொன்னாங்க. எப்படியாவது கொடுத்து உதவி பண்ணுங்க ஷானு. எவ்வளவு பணம் வேணும்னாலும் குடுத்துடறேன்' என்றார்.
இப்படி ஏதாவது ஒரு நிகழ்வு நடக்கும் போது அது தொடர்பான பழைய விஷயங்களை அலசி எடுத்து ஒரு செய்தி எழுதுவது என்னுடைய வழக்கம் என்பதால் இவர்கள் இந்தப் படங்களை தேடுவதற்கு பத்து நாட்களுக்கு முன்னரே நான் அந்த நெகடிவ் களை தேடி எடுத்திருந்தேன்.
(பத்திரிகைத் துறையில் சேர்ந்த முதல் நாள் எழுதிய முதல் செய்தி முதல் இன்றைய செய்தி வரை சேகரித்து பெரிய நோட்டுகளில் ஒட்டி வைத்திருக்கிறேன். இப்போது அதை ஸ்கேன் செய்து டிஜிட்டல் வடிவத்தில் மாற்றி கம்ப்யூட்டரில் சேகரித்து விட்டேன். எடுத்த படங்களையும் இப்படி கட்சி வாரியாக, அமைப்பு வாரியாக பெயர் போட்டு பிரித்து கம்ப்யூட்டரில் சேமித்து வைத்திருக்கிறேன். நெகட்டிவ் களையும் நிகழ்ச்சி பெயர் எழுதி கவரில் போட்டு பத்திரமாக வைத்திருக்கிறேன் என்பது என்னுடன் பழகும் பத்திரிகை நண்பர்கள் உள்ளிட்ட எல்லோருக்கும் தெரியும். இது குறித்து என்னை பலமுறை பலரும் பாராட்டி உள்ளார்கள். ('எங்களால் இந்த நடைமுறைகளை பின்பற்ற முடியவில்லையே...' என்று ஏக்க பெருமூச்சு விட்டவர்களும் உண்டு)
'நெகட்டிவ் கையிலே இருக்கிறது' என்று சொல்லிவிட்டால் உடனே வேண்டும் என்று கேட்பார்கள். இல்லாவிட்டால் உடனே வீட்டில் வந்து நிற்பார்கள் என்பதால் 'தேடி எடுத்துக் கொண்டு வருகிறேன்' என்று சொல்லிவிட்டு கையில் இருந்த செய்தியை முடித்து அலுவலகத்துக்கு மெயில் அனுப்பிவிட்டு அந்த பத்து ரோல் நெகட்டிவ்களையும் எடுத்துக் கொண்டு போய் மாநகராட்சி துணை மேயர் அலுவலகத்தில் அவரை சந்தித்தேன்.
நெகட்டிவ் களில் பார்த்து தாங்கள் தேடும் படங்கள் இருப்பதை உறுதி செய்து கொண்டு 'இதில் இருக்கிற எல்லா படத்தையும் பிரிண்ட் போட்டு தர முடியுமா? ' என்றார்.
உடனே திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தினகரன் அலுவலகத்திற்கு எதிரே உள்ள தீபம் கலர் லேப்பில் போய் அந்த நெகட்டிவ் களை 'சைஸ் டு சைஸ்' அப்படியே பிரிண்ட் போட்டுக் கொண்டு வந்து காட்டினேன்.
அதில் குறிப்பிட்ட படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து 'இதை மட்டும் பெருசா போட்டு குடுங்க' என்றார். நெகடிவ்களை அவர்களிடம் கொடுக்க விரும்பாமல் நானே போய் பிரிண்ட் போட்டு வந்து கொடுத்தேன்.
அப்படி என்ன படம் ? என்று யோசனை இந்நேரம் உங்களுக்கு ஓடிக்கொண்டிருக்கும்...
1996 ம் ஆண்டு அம்மையார் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு ஒரு மோசமான ஆட்சியை தந்து முடித்திருந்த நேரம், திருச்சியில் நடந்த திமுக மாநாட்டு நிகழ்வு அது.
திருச்சி அண்ணா சிலையில் தொடங்கிய திமுக மாநாட்டு பேரணி விமான நிலையத்துக்கு அருகே திமுக மாநாடு நடந்த திடலுக்கு போய் சேர்ந்தது.
முழுவதும் வெள்ளை நிறத்தில் திறந்த ஜீப்;
அதில் வெள்ளை பேண்ட், வெள்ளை சட்டை, கருப்பு சிவப்பு நிற டை, கையில் வெள்ளை கிளவுஸ் அணிந்து வெள்ளை நிற கொடி கம்பத்தில் கருப்பு-சிவப்பு நிற திமுக கொடி பிரம்மாண்டமாக பறக்க, அதை 50 டிகிரியில் சாய்த்து பிடித்து கொடியை ரசித்துப் பார்க்கிறார் இளமையான ஸ்டாலின். அந்த ஜீப்பில் 96 ஆம் ஆண்டே அவரது சாரதியாக ஜீப்பில் நின்று கொண்டு வருகிறார் தலை நிறைய முடியும் கருப்பு நிற பிரம்மாண்ட மீசையுமாய் நேரு...
இந்த மாநாட்டு ஊர்வலம் ஜமால் முகமது காலேஜ் அருகில் டிவிஎஸ் டோல்கேட் போய் சேர்ந்ததும் அங்கே மேடையில் இருந்து பேரணியை பார்வையிட்டு கையசைத்துக் கொண்டிருந்த கருணாநிதி, கனிமொழி, ராசாத்தி அம்மையார் ஆகியோர் அருகில் போய் ஸ்டாலின் நின்று பேரணியை பார்க்க, அவருக்கு உடனடியாக டீ கொடுத்தார் கனிமொழி. அவர்களை குடும்பத்துடன் சேர்த்து படம் எடுத்தேன். அப்போது படம் எடுக்கும் ஆர்வத்தில் கருணாநிதி அமரும் நாற்காலியில் காலை வைத்து விட்டேன். அதற்கு துரைமுருகன் என்னை ஒரு கெட்ட வார்த்தை சொல்லி திட்டினார். அதன் பிறகு சென்னை நண்பர்களிடம் கேட்டு அந்த கெட்ட வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்து கொண்டேன். (மலரும் நினைவுகள்)
(இந்த) படங்களை பார்த்ததும் தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்ற அன்பழகன், கையை நீட்டினார். கைகுலுக்கத்தான் கை நீட்டுகிறார் என்று கையை நீட்டினேன். என்னுடைய வலது கையை தன்னுடைய இரண்டு கைகளாலும் அப்படியே பிடித்துக் கொண்டு 'இந்த உதவிக்கு நான் என்ன கைமாறு செய்யப் போறேன்னு தெரியலையே...' என்றார். 'கூட்டங் கும்பல்ல அடிக்கும் போது பார்த்து மெல்லமா அடிங்க' என்று சொன்னேன்.
(திமுக தரப்பு விமர்சன செய்திகளை, அதிலும் குறிப்பாக அமைச்சர் நேரு தொடர்பான நேரடி விமர்சன செய்திகளை தொடர்ந்து எழுதி வருபவன் என்பதால் பெரும்பாலான (99 சதவீதம்) திமுகவினர் என்னிடம் பேச மாட்டார்கள்; அல்லது என்னை விரோதமாக பார்ப்பார்கள் என்பதால் அப்படி சொன்னேன்.)
துணைமேயரது அலுவலகத்தில் இருந்த காஜாமலை விஜய், டோல்கேட் சுப்பிரமணி, கிராப்பட்டி செல்வம், முத்துச்செல்வம் உள்ளிட்ட திமுகவினர் அந்தப் படங்களை மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் கதவை திறந்து கொண்டு வந்து படியில் இறங்க ஆரம்பித்து விட்டேன்.
திடீரென பின்னால் பரபரப்பு... துணை மேயர், அவருக்கு பின்னால் கட்சிக்காரர்கள் எல்லோரும் படியில் ஓடி வந்து கொண்டிருந்தார்கள். என்னை நெருங்கிய அன்பழகன் "பிரிண்ட் போட்டதுக்கு எவ்வளவு காசுன்னு சொல்லலையே..." என்றார். (அந்த நேரத்தில் எவ்வளவு பணம் கேட்டாலும் கொடுப்பார்கள். ஆனால் இப்படி நேரத்துக்கு தகுந்தார் போல பணம் கேட்கும் ஆள் நான் அல்ல; அல்பமாய் பிரிண்ட் போட்ட செலவை கைநீட்டி வாங்குவதை விட, பணம் வேண்டாம் என்று கௌரவமாய் சொல்லிவிடலாம் என்று முடிவெடுத்தேன்). "திமுக இளைஞரணி மாநாட்டுக்கு இது என்னுடைய அன்பளிப்பு" என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தேன். அவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
"எதுனாலும் எப்பனாலும் என்னக் கேளுங்க" என்றார்.
அந்த எதுனாலும் இந்நாள்வரை வரவில்லை...
அந்த ஸ்டாலின் இன்று முதலமைச்சர்;
அந்த நேரு இன்றும் அமைச்சர்;
அந்த அன்பழகன் இன்று திருச்சி மாநகர மேயர்.
அடுத்த இளைஞரணி மாநாடும் வந்துவிட்டது.
நாம் நதி போல ஓடிக் கொண்டிருப்போம்.
குறிப்பு : அப்புறமாய் ஒரு நாள் என்னை பார்த்த ப்ரொபஷனல் வீடியோஸ் சேகர் அண்ணன், ' நல்லவேளை ... படத்தைக் கொடுத்து என்னை மீட்டிங்க...' என்றார். அப்போதுதான் அங்கே அவர் அன்பாய் அமர வைக்கப்பட்டிருந்த விஷயத்தையும் சொன்னார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...