Friday, December 1, 2023

ஒயின்_பிஸ்கெட்ஸ்

 சில ஊர்களில் முட்டை பிஸ்கெட்ஸ் என்றழைக்கும் இந்த பீன்ஸ் பிஸ்கெட்டுகளை நான் சிறுவயதில் சாப்பிட்டதை இன்றும் மறக்கவே முடியாது! எனது பால்யத்தில் சேலத்தில் குடியிருந்த போது இந்த பிஸ்கெட் இல்லாத பேக்கரிகளையோ, பெட்டிக் கடைகளையோ காண்பது அரிது! அப்படி என்ன தான்யா இருக்கு அந்த பிஸ்கெட்டில் என்பவர்களுக்கும் இதுவரை அதை ருசித்ததேயில்லை என்று..

சொல்பவர்களுக்கும் நான் சொல்லிக் கொள்வது.. ருசிகரமான சம்பவம் என்னும் சொல்லுக்கு உதாரணமே இந்த பிஸ்கெட்டை சாப்பிடுவது தான் என்பேன்.! இதை எனக்கு அறிமுகப்படுத்தியது எங்கள் பெரியப்பா இராஜகோபால் தான்!என் தந்தை ஸ்வீட்ஸ், மற்றும் ஓட்டல் வைத்திருந்ததால் எங்கள் வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் பழங்கள் அல்லது எங்கள் கடையில் கிடைக்காத..
தின்பண்டங்களை வாங்கி வருவது வழக்கம்! எங்கள் அசோகன் அண்ணன் தேங்காய் பன்னை எங்களுக்கு அறிமுகப் படுத்தியது போல எங்கள் பெரியப்பா அறிமுகப் படுத்தியது இந்த பிஸ்கெட்! கமகமன்னு பேக்கரிக்கான பிரத்யேக பிஸ்கெட் வாசனையில் ஓரத்தில் பிரவுனாகவும் நடுவில் மஞ்சளாகவும் குட்டி நாலணா சைசில் இருக்கும் கர கர மொறுன்னு வாயில் கரையும்! அளவான இனிப்பு..
அப்புறம் அந்த ஒயின் கலப்பால் மைதாவில் ஏற்பட்ட அந்த க்ரிஸ்ப்பி தான் இந்த பிஸ்கெட்டின் தனிச்சிறப்பு! அதுவம் ஹென்றி உல்சி பேக்கரி ஒயின் பிஸ்கெட் என்றால் கேட்கவே வேணாம்.! இயேசுநாதர் காலத்தில் இந்த பிஸ்கெட் இருந்திருந்தால் அவர் அப்பமும் ஒயினும் இரண்டும் தந்து நிகழ்த்திய அற்புதத்தை டூ இன் ஒன்னாக இதையே தந்து நிகழ்த்தியிருப்பார் என இந்த பிஸ்கெட்டின் மீது சத்தியம்..
செய்து சொல்லலாம்! மேலும் ஹென்றி உல்சியில் இந்த பிஸ்கெட் சிறிது சூடாகவே கிடைக்கும்! பிரவுன் நிற கவரில் எடை போட்டு தருவதற்குள் என் நாவு நடை போட்டு சென்று.. அண்ணா கொஞ்சம் அள்ளி கையில் கொடுங்கன்னு கேட்க வைக்கும். அதிலும் கண்ணாடி பாட்டிலில் கொட்டி வைத்திருக்கும் இந்த மொறு மொறு பிஸ்கெட்டுகள் உதிர்வதால் பாட்டிலின் அடியில் தூளாக..
குவிந்து இருக்கும், தூள் பக்கோடா போல தூள் பிஸ்கெட்! அதன் சுவையும் படு தூளாக இருக்கும்! ஹென்றி உல்சி ஒயின் பிஸ்கெட் மட்டும் பார்த்தவுடனே தெரிந்துவிடும் ஏனெனில் அந்த பிஸ்கெட் முழுவதுமே பிரவுன் கலரில் இருக்கும்.. மஞ்சளாக இருப்பது செகண்ட் குவாலிட்டி! இதெல்லாம் பிற்காலத்தில் தான் அறிந்து கொண்டேன்! குகை பகுதியில் வசிக்கும் போது அடிக்கடி..
வசப்பட்ட இந்த ஹென்றி உல்சி பிஸ்கெட் கிச்சிப்பாளையத்தில் குடியேறிய பின்பு மாதமொரு முறையே கிடைத்தது ஆனால் இதே பிஸ்கெட்டை நல்ல சுவையில் திவான் பீடி கம்பெனி அருகேV போல பிரியும் இரு சாலைகளில் Vயின் கீழ்ப்புறம் இருக்கும் அம்பின் முனை போன்ற பகுதியில் இருக்கும் பெட்டிக் கடையில் அனுமன் கண்டேன் சீதையை என்றது போல கண்டறிந்தேன்!பிறகு அடிக்கடி..
அங்கே தான் சாப்பிடுவேன் நாலணாவுக்கே 50 கிராம் அளவில் நியூஸ் பேப்பரில் பொட்டலம் கட்டித் தருவார்கள். எங்கள் சிந்தி இந்து பள்ளியில் எப்போதும் பேன்ட் சட்டையில் பார்த்தே பழகிய அஞ்சாவது ஏ சார் என்று நாங்கள் அழைக்கும் அர்த்தநாரி சாரை அவ்வப்போது இந்தக் கடையில் கைலியில் பார்த்து வியந்து மாலை நேரத்திலும் குட்மார்னிங் சார் சொல்லிவிட்டு பிஸ்கெட்டை..
வாங்கிக் கொண்டு திரும்புவோம்! ஒரு நாள் அவரிடம் அவசரத்தில் பிஸ்கெட் பொட்டலம் வாங்கிய கையை குட்மார்னிங் சொல்ல தூக்க பொட்டலம் பிரிந்து வாங்கிய பிஸ்கெட்டுகள் எல்லாம் ரோட்டில் கொட்டிவிட அது தரையில் தாறுமாறாக வரைந்த பிஸ்கெட் கோலம் போல.. இல்லையில்லை அலங்கோலமாய் கிடக்க.. சிரித்துக் கொண்டே அர்த்தநாரி சார் “பரவாயில்லை விடுப்பா நான்..
வாங்கித்தர்றேன்" என அதே பிஸ்கெட்டை அந்தக் கடையில் வாங்கிக் கொடுத்தது எந்நாளும் என்னால் மறக்க இயலாது! அந்த பழம் நினைவுகளையும் ஒயின் பிஸ்கெட்டின் அந்த அலாதியான ருசியும் எந்தக் காலத்திலும் மறக்க இயலாது! இன்றும் நினைத்தாலே இனிக்கும்! ஆம் பழைய ஒயின் என்றும் மதிப்பு வாய்ந்தது தானே!
May be an image of crackers, cake and coconut macaroon

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...