Sunday, November 27, 2011

எங்கே போகிறது இந்தியநாடு? - சில்லறை வர்த்தகத்திலும் உலகமயமாக்கலா?...‏

ஏற்கனவே கோமாளிகளின் கூடாரமாய் கூடிக் கும்மியடித்துக் கொண்டிருக்கும் மத்திய காங்கிரஸ் ஆட்சியில் புதிதாய் ஒரு அதிமேதாவித்தன முடிவை அறிவித்திருக்கிறார்கள்.

‘’சில்லறை வர்த்தகத்தில் அந்நியமுதலீடு’’….

இதுவரை நாறிக்கொண்டிருக்கும் நடந்த ஊழல்கள் போதாதென்று அடுத்து எங்கே ஆட்டையைப் போடலாம்?... எவரிடம் நாட்டை அடகு வைத்து பெட்டியை நிரப்பிக்கொள்ளலாம்?... என்று ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ என்னவோ தெரியவில்லை.

நாட்டின் பொருளாதாரத்தை கனவிலும் நினைக்காத அளவுக்கு மேம்படுத்தலாம்… கறுப்புப்பணத்தை மீட்டுக்கொண்டு வாருங்கள் என்றால் அதிமேதாவி நிதி அமைச்சர் ஆயிரத்தெட்டு முனகல்களை வெட்கம் இல்லாமல் முனுமுனுக்கிறார். அவ்வப்போது தான்தான் நிதியமைச்சர் என்பதை நிரூபித்துக்கொள்ள ‘’பணவீக்கம் கவலையளிக்கிறது’’… ‘’விலைவாசி உயர்வு கவலையளிக்கிறது’’… என்று மூன்றாம்தர மனிதன்போல பேட்டியளிக்கிறார். பணவீக்கத்தையும், விலைவாசி உயர்வையையும் கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும், சிக்கல்களை திறம்படத்தீர்த்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும்தான் நிதியமைச்சர் என்ற பதவி என்பது இவர்களுக்கெல்லாம் எப்போது புரியுமோ தெரியவில்லை?... விலைவாசி உயர்வையும், பணவீக்கத்தையும் நினைத்து வெறுமனே கவலை மட்டும் பட்டுக்கொண்டிருக்க வீணே ஒரு அமைச்சரவை எதற்கு?

இது எல்லாவற்றுக்கும் மேல் நமது மேதகு பாரதப்பிரதமர்… அலுங்காமல் குலுங்காமல் பவனி வருவதோடு சரி… பொருளாதாரப்புலி என்று ஒருகாலத்தில் புகழப்பட்ட பழங்கதையோடு சரி…. பிரதமரான பின் உருப்படியாய் சாதித்தது என்று ஒரு மண்ணாங்கட்டியும் இருப்பதாய் தெரியவில்லை. விவசாயம், நீர்வளமேம்பாடு, விலைவாசி மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத்தரம் என்று கவனத்தில் கொள்ளவேண்டிய எந்த விஷயங்களையும் கவனித்ததாய் தெரியவில்லை. சீனாவுக்கு எதிரான ராஜதந்திரமாய் நினைத்துக்கொண்டு சிறிலங்காவிற்கு உதவிக்கொண்டிருக்கும் முட்டாள்தனமும் புரியவில்லை. ஊழல் மேல் ஊழலாய் சந்தி சிரித்தாலும், ஊழலுக்கு எதிராய் மத்தியஅரசு உறுதியான நடவடிக்கைகளையும் நிலைப்பாடுகளையும் எடுத்து வருவதாய் அவ்வப்போது அறிக்கை வாசிக்கும் பிரதமரை நினைத்து நாட்டு மக்களாகிய நாமெல்லாம் அழுவதா… சிரிப்பதா என்றே தெரியவில்லை!.

பயபுள்ளக நம்மள நோண்டாம விடாது போலயிருக்கே...!!!


ஏற்கனவே விலைவாசி உயர்வைப்பற்றி நீலிக்கண்ணீர் வடித்துக்கொண்டே டீசலையும், பெட்ரோலையும் மாறிமாறி விலையை உயர்த்திக்கொண்டிருப்பது போதாதென்று இப்போது புதிதாய்… சில்லறை வர்த்தகத்தில் பொருளாதாரப்புரட்சி செய்ய புத்திசாலித்தன முடிவெடுத்திருக்கிறார்கள் இந்த மேதாவிக்கூட்டத்தினர்.

சரி... சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதால் நமக்கென்ன நஷ்டம் என்று கேட்கும் மக்கள் கூட்டமும் இருக்கக்கூடும். சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதால் யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்? என்றொரு அலசல் நிச்சயம் அவசியமானதுதான்.

சில்லறை வர்த்தகம் என்றால் என்ன?...

மக்களாகிய நாம் நமது அன்றாடத் தேவைகளை நமக்கு விருப்பப்பட்ட கடைகளில் வாங்கிக்கொண்டிருக்கிறோமே… அதுதான் சில்லறை வர்த்தகம். மொத்த விற்பனையாளர்(whole sale merchant)… சில்லறை விற்பனையாளர்(Retail merchant) இது இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் நமக்கு தெரிந்திருக்கும். அதுதான் சில்லறை வர்த்தகம். இன்னும் எளிதாகச் சொல்லவேண்டுமானால் அண்ணாச்சிக்கடையில் அன்றாடம் நாம் மளிகைச்சாமான்களை வாங்குகிறோமே… அதுதான் சில்லறை வர்த்தகம். ரோட்டோரக்கடைகளில் காய்கறி மற்றும் பழங்கள் வாங்குகிறோமே… அதுதான் சில்லறை வர்த்தகம்.


சரி… இப்போது சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதால் என்ன பெரிதாய் குடி முழுகிவிடப்போகிறது என்று கேட்பவரும் இருக்கலாம். இந்தியாவில் வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமை நாடாக்கினர் என்பதுதான் நாம் சிறுவயது முதலே நமது பாடப்புத்தகங்களில் படித்துவரும் செய்தி. அவ்வாறான பாடங்களை நமது கல்வியில் புகுத்திய அரசாங்கமே இன்று நமது நாட்டில் வியாபாரம் செய்வதற்கு வெளிநாட்டவரை அனுமதிக்கிறது. ஏற்கனவே உலகமயமாக்கல் பொருளாதாரத்தை இந்தியாவுக்குள் புகுத்திய மாமேதைகள் அதே உலகமயமாக்குதலில் நாட்டுக்கு தேவையான நல்லனவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு தேவையற்றவைகளை, நமது மக்களை நேரடியாக பாதிப்பவைகளை நாட்டுக்குள் அண்டாமல் பாதுகாத்தால் உலகமயமாக்கல் ஒரு வேளை வரமாய் அமையலாம். ஆனால் கண்ணை மூடிக்கொண்டு அனைத்தையுமே உலகமயமாக்கும் பட்சத்தில் நமது நாட்டின் பொருளாதாரம் நிச்சயமாய் ஒருநாளில் அதளபாதாளத்தில் வீழ நேரலாம். உலகமயமாக்குதலே கூடாது என்பதல்ல எனது கருத்து. உலகமயமாக்கலில் நமது வளர்ச்சிக்கு தேவையானவற்றை மட்டும் செயல்படுத்தலாம். உதாரணமாக உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கையால் நமது இந்திய நிறுவனங்கள் தயாரிக்கும் பல தரமானப்பொருட்கள் உலகச்சந்தையில் இடம் பெறலாம். நன்மைகளும் தீமைகளும் கலந்து கிடக்கும் உலகமயமாக்குதல் கொள்கையில் நன்மைகளை மட்டும் தேர்ந்தெடுத்து ஆராய்ந்து செயல்படுத்துவதுதான் உண்மையிலேயே மக்களுக்காக செயல்படும் ஒரு அரசு செய்யவேண்டிய கடமையாகும். ஆனால் அதை விடுத்து வெளிநாட்டு முதலாளிகளிடமிருந்து தனது பெட்டியை மட்டும் நிரப்பிக்கொண்டு நாட்டையே அவர்களிடம் அடகு வைக்கலாம் என்பது நிச்சயம் ஏற்றுக்கொள்ளமுடியாததுதான்.

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்தால் நடக்கப்போவது என்ன?... முதலில் நமது சில்லறை வர்த்தகத்தில் நுழையும் அந்நிய நிறுவனங்கள் நமது சுதேசி விற்பனையாளர்களை விட கூடுதல் கொள்முதல் விலையில் பொருட்களை வாங்கி குறைந்த விலைக்கு மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள். நம்மைப்பற்றி சொல்லவேண்டுமா?... மற்ற இடங்களைவிட ஒரு பொருள் ஒரு இடத்தில் குறைந்த விலைக்கு கிடைக்கிறதென்றால் அந்த இடத்தை மொய்த்துவிடமாட்டோமா என்ன? ஒரு கட்டத்தில் சுதேசி சில்லறை விற்பனையாளர்கள் அனைவரும் வாடிக்கையாளரின்றி நஷ்டத்தை சமாளிக்க இயலாமல் கடைகளை மூடிவிட்டு நடையைக்கட்டும் நிலை உருவாகும். அதையே எதிர்பார்த்து காத்திருக்கும் அந்நிய நிறுவனங்கள் சுதேசி விற்பனையாளர்களின் கொள்முதல் நின்ற பிறகு, தான் மட்டும்தான் என்ற நிலை வந்த பிறகு தனது கொள்முதல் விலையை அதிரடியாகக் குறைக்கும். விற்பனை விலையை அதிரடியாக உயர்த்தும். பாதிக்கப்படப்போவது இந்தியர்களாகிய நாம்தான்.

உதாரணத்துடன் சொல்லவேண்டுமானால் காய்கறி வியாபாரத்தை எடுத்துக்கொள்ளலாம். காய்கறி வியாபாரத்தில் சில்லறை வணிகத்தில் நுழையும் நிறுவனமானது முதலில் காய்கறியை விளைவிக்கும் விவசாயிடமிருந்து அதிக விலைக்கு கொள்முதல் செய்து மக்களாகிய நம்மிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்வார்கள். இதனால் அதிக விலை கிடைக்கும் காரணத்தால் விவசாயிகள் இந்த நிறுவனங்களிடமே தங்கள் விளைச்சலை கொடுக்கத்தொடங்குவார்கள். குறைந்த விலையில் கிடைப்பதால் மக்களாகிய நாமும் நமது உள்ளூர் வியாபாரிகளை புறக்கணித்துவிட்டு இந்த நிறுவனங்களிடமே காய்கறி வாங்கத்துவங்குவோம்.

இதனால் நமக்கு நன்மைதானே என்று நினைக்கலாம். ஆரம்பத்தில் நன்மைதான்… ஆனால் ஒருகட்டத்தில் உள்ளூர் வியாபாரிகளெல்லாம் நஷ்டத்தில் நொடிந்தபிறகு இந்த நிறுவனங்களை விட்டால் வேறு கதியில்லை என்ற நிலைமை விவசாயிகளுக்கும் மக்களாகிய நமக்கும் உருவாகும். அந்தச்சூழலில் கொள்முதல் மற்றும் விற்பனை விலை இரண்டையும் நிர்ணயிக்கும் உரிமை இந்த நிறுவனங்களின் கால்களில் கிடக்கும். விளையும் பொருட்களை விவசாயி இந்த நிறுவனங்கள் நிர்ணயிக்கும் தரைமட்டமான விலைக்கு விற்றே ஆகவேண்டும். மக்களாகிய நாம் இந்த நிறுவனங்கள் நிர்ணயிக்கும் அநியாய விலைக்கு வாங்கியே ஆகவேண்டும்.

இதனால்… சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதென்பது நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் ஆப்புதானேயொழிய இதன் மூலம் விலைவாசி கட்டுக்குள் வரும் என்பதெல்லாம் வெட்டிவிவாதங்களே!.

ஏற்கனவே நமது பிராவிடண்ட் ஃபண்டு போன்ற பணங்களை பங்குச்சந்தையிலும் வெளிநாட்டு வங்கிகளிலும் முதலீடு செய்யும் முட்டாள்தனத்தை யோசித்துக்கொண்டிருக்கும் நமது அரசு, நல்ல இலாபத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் பொதுவுடமை நிறுவனமான எல்.ஐ.சி.யை தனியார் மயமாக்கும் முட்டாள்தனத்தை முனைந்து கொண்டிருக்கும் நமது அரசு, சில்லறை வர்த்தகத்திலும் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதித்து நமது உழைப்பையும், பணத்தையும் அடுத்தவன் சுரண்டிக்கொண்டு போக பட்டுக்கம்பளம் விரிக்கத்தயாராகிறது. அரசே மக்கள் நலனை அலட்சியப்படுத்தி இதை அனுமதிக்கும் பட்சத்தில், மக்களாகிய நாம்தான் இது போன்ற நிறுவனங்களின் வியாபாரச்சூழ்ச்சிக்குள் சிக்கி விடாமல் உஷாராய் இருந்தாகவேண்டுமே தவிர வெறொன்றும் வழியிருப்பதாய் தெரியவில்லை.

மற்றபடி… தமிழகத்தின் பால்விலை உயர்வு, பேருந்துகட்டண உயர்வு, மின்கட்டண உயர்வு பற்றியெல்லாம் நான் பதிவு எழுதாததற்கு இதெல்லாம் தேர்தலுக்கு முன்னரே நான்  கணித்து எழுதியதுதான் காரணம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...